காரமறிந்து மிளகாய் வாங்கு! - வியாபாரச் சிறுகதை!

பார்த்தசாரதி ரெங்கராஜ் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

வ்வொருத்தருக்கும் ஒவ்வொரு பிரச்னை. எனக்கு நாளை அதிகாலை எழுந்திருக்க வேண்டுமே என்ற பிரச்னை. இதற்கான காரணத்தை நான் சொல்லும் முன், இன்னொரு விஷயம் சொல்லியாக வேண்டும். என்னிடம் பத்து லட்சம் ரூபாய் பணமாக உள்ளது. அதை அப்படியே பார்த்துப் பார்த்துப் பரவசமடைய நான்அவ்வளவு காய்ந்துபோனவன் அல்ல. அதனால் நல்லதாக அதை முதலீடு செய்யலாம் என்று நினைத்தேன். முதலீடு என்று வரும்போது அது குறைந்தபட்சம் விலைவாசி உயர்வைத் தாண்டிய வருமானம் தரவேண்டும் என்பது என் எம்பிஏ படிப்பு எனக்குச் சொல்லித் தந்த பாடம். விலைவாசி உயர்வு 8 சதவிகிதம் என்பதால் என் முதலீடு குறைந்தபட்சம் 9 சதவிகித வருமானமாவது எனக்குத் தரவேண்டும் என்று எதிர்பார்த்தேன். இது தெரியாமல் லட்சக்கணக்கில் வங்கியில் முடக்குபவனோ, வேறு ஏதாவது முதலீட்டில் கொண்டுபோய்க் கொட்டுபவனோ  என் அகராதியில் வடிக்கட்டிய முட்டாள்தான்!

சரி, இப்போது சொல்லிவிடுகிறேன் என் அதிகாலை விஜயம் எங்கு என்று. எனக்கு 30 சதவிகிதம் லாபம் தரும் ஒரு தொழில் உள்ளது. கோயம்புத்தூரில் உள்ள ஒரு குறிப்பிட்ட பஞ்சாயத்தில் சிறிது நிலம் வாங்கிப் போடலாம் என்று முடிவு எடுத்து இன்றோடு ஒரு மாத காலம் ஆகிறது. ஏன் இன்னும் வாங்கவில்லை என்று நீங்கள் கேட்பது எனக்குப் புரிகிறது. காரணம், எனது மனைவி. என்னதான் கணவன் அறிவாளி யாக இருந்தாலும் மனைவிமார்களுக்கு அவர்களை ஒரு காமெடி பீஸாகப் பார்ப்பது ஒரு வகையில் உண்மைதான். அதற்கு நானும் விதிவிலக்கல்ல. அவளுடைய அப்பா வந்துதான் முடிவு செய்ய வேண்டுமாம். குடும்பத்தின் சமநிலையைக் காக்க நான் சற்று காலம் காத்திருந்தேன். இன்றுதான் அவருடைய திருப்பாதம் என் வீட்டில் பதிந்தது.

அவர் ஒரு மிளகாய் வத்தல் வியாபாரி. வெள்ளை வேட்டி, வெள்ளைச் சட்டை, பட்டாப் பெட்டி தெரியுமளவுக்குத் தூக்கிக் கட்டும் பழக்கமுடையவர்.  தேர்தல் வந்தால் தவறாமல் ஜனநாயகக் கடமை ஆற்றிவிடுவார். ஆனால், ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கட்சிக்கு ஓட்டு போடுவார். எட்டு மணிக்குப் படுத்து, அதிகாலை நான்கு மணிக்கு எழுந்திருப்பார். எழுந்தவுடன் நெல்லிக்காய்ச் சாறு குடிப்பார் (இவருக்கு மட்டும் எப்படி எல்லா சீசனிலும் நெல்லிக்காய் கிடைக்கிறதோ!) பின்னர் காலார காத்து வாங்கி வருவார். பின் ஏதாவதொரு தமிழ் செய்தித்தாளுடன் ஒரு மணி நேரப் போராட்டம். அதிகம் பேச மாட்டார். குறிப்பாக, அவர் என்னிடம் அதிகம் பேசியதில்லை .

“நாளைக்கு காலையில போயி இடத்தப் பாத்துருவோமா?”

“சரிங்க மாமா’’

“அப்ப காலையில ஆறு மணிக்கெல்லாம் ரெடியாயிருங்க, நாம கெளம்பிரலாம்’’

“சரிங்க மாமா’’ என்றேன் சற்று எரிச்சலுடன்.

சூரிய உதயத்தை நான் பார்த்த நாட்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். இது தெரிந்தும் என்னைக் கடுப்பேற்றுவதற்காகவே இவர் காலையில் கூப்பிடுகிறார். அவருக்கு ரியல் எஸ்டேட் பற்றி என்ன தெரியும் என்று தெரியவில்லை. மனைவியின் மனம் கோணக்கூடாது என்கிற ஒரே காரணத்துக்கு அதை எல்லாம் தாங்கிக்கொள்ளத்தான் வேண்டி இருக்கிறது. இருந்தாலும் என்னதான் நடக்கிறது என்று பார்த்துவிடுவோம் என்கிற நம்பிக்கையுடன் படுக்கையில் விழுந்தேன்.

அதிகாலை ஐந்து மணிக்கு வைத்த அலாரம் அடித்ததோ இல்லையோ, 5.10-க்கு மனைவி அலாரமாகக் கத்தினாள். பால் இல்லாததால் கடுங் காப்பிதான் கொடுத்தாள். அதையே மாமனார் ரசித்துக் குடித்துக்கொண்டிருந்தார்.

கடுப்பில் அவசர அவசரமாகக் கிளம்பி காரை வெளியே எடுத்தேன். அருகில் அமர்ந்தார் மாமனார்.  சைட்டுக்குச் செல்லும் வரையில் நாங்கள் இருவரும் ஒரு வார்த்தைகூடப் பேசிக் கொள்ளவில்லை.

அது ஒரு ஏக்கர் நிலம். அதை முப்பது சைட்டுகளாகப் பிரித்திருந்தனர். ஒரு சைட் என்பது இரண்டே முக்கால் சென்ட்.

“நான் போயி ஒரு பார்வை பாத்துட்டு வரேன்’’ என்று நகர்ந்தார். அதிகாலையில், அரைத் தூக்கத்தில், சில்லென்ற காற்றில் நிற்கும்போது ஒரு சிகரெட் பற்ற வைத்தால் எப்படி இருக்கும் என்ற எண்ணம் வேறு என்னை இம்சித்துக்கொண்டிருந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்