குப்பை பொறுக்கும் முதலாளி! - வியாபாரச் சிறுகதை!

பார்த்தசாரதி ரெங்கராஜ் - ஓவியம்: கோ.ராமமூர்த்தி

ன்னியாகுமரியில் இருந்து மும்பை செல்லும் அதிவிரைவு புகை வண்டி... சராசரி மக்களுக்கு கூட்ட நெரிசல் நரகத்தையும், நடுத்தர வர்க்கத்துக்கு பாலைவன வெப்பத்தையும், மேல்தட்டு மக்களுக்கு மெல்லிய குளிருடன் சின்னதொரு மிதப்பையும் கொடுத்துகொண்டு சென்றுகொண்டிருந்தது. இரண்டாவது வகுப்பு குளிரூட்டப்பட்ட பெட்டியில் அமர்ந்துகொண்டு, கைக்கணினியில் வரவு செலவு கணக்கைப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

மாதம் ஒரு முறை மும்பைப் பயணம் வாடிக்கையாகிப் போனது எனக்கு. தென் மாவட்ட தீப்பெட்டி தொழிற்சாலைகளுக்கும், பட்டாசு தயாரிப்பாளர்களுக்கும், குஜராத்தில் உள்ள சில மெட்டலர்ஜி நிறுவனங்களுக்கும் சிவப்பு பாஸ்பரஸ் விற்பனையைக் கவனித்துக்கொள்ளும் உத்தியோகம் எனக்கு.

நல்ல சம்பளம், அதைவிட ராஜ மரியாதை.  உதவிகளைக் கேட்பதற்குமுன் வழங்கும் நிறுவனம்; பார்த்தவுடன் அடையாளம் தெரிந்துகொள்ளுமளவுக்கு பெயர் சம்பாதித்துக்கொண்ட, லாபத்தில் கொழிக்கும் ஒரு பன்னாட்டு நிறுவனத்தின் அடையாள அட்டை என பல சலுகைகளுடன் பெருமிதமாக வாழ்ந்துகொண்டிருந்தேன்.

வழக்கமாக இதே ரயிலில் வருவதால், வேலை செய்யும் பேன்ட்ரி ஆர்டர்லிகளுடன் ஒரு சிநேகிதம் இருக்கத்தான் செய்தது. தேவையான இடத்தில் தேவையானவற்றை அவர்கள் தருவதும், பொழுது போகாத சமயங்களில் அவர்களுடன் அரட்டை அடிப்பதும் எனக்கு பழக்கமாகிப் போயிருந்தது.

அப்படி ஒருமுறை சென்றபோதுதான் அவரைப் பார்த்தேன். நல்லெண்ணெய் விளம்பரம் போட்ட கை வைத்த பனியன், கிருதா வழியாக வழியும் எண்ணெய், கால்சட்டை தெரியுமளவுக்கு தூக்கிக் கட்டிய லுங்கி, சரியாக சவரம் செய்யாத உலர்ந்த கன்னம், நட்புடன் பார்க்கும் விழிகள்.

இவரை எங்கேயோ பார்த்திருக்கோமே என்று  தோன்றியது. வேறு எங்கே..? இது மாதிரியான தோற்றம் கொண்டவர்கள்தானே நம்மூர் மளிகைக் கடையில் அடிக்கடி தென்படுவார்கள்.
 
சரி, இவருக்கு குளிரூட்டப்பட்ட பெட்டி அருகே என்ன வேலை? இந்தக் கோலத்தில் இருக்கும் இந்த ஆள் கண்டிப்பாக ஏசி டிக்கெட் வாங்க வாய்ப்பே இல்லை. ஆனால், நெடுநேரமாக இங்குதான் இருக்கிறார் என்றபோது ஒரு சிறிய சந்தேகம் என்னிடம் எட்டிப் பார்த்தது. இருந்தாலும் வெளியே வேடிக்கை பார்ப்பதுபோல் கதவருகே நின்றுகொண்டே பாக்கு பாக்கெட்டைத் திறந்து வாயில் போட்டபடி வேடிக்கை பார்க்க ஆரம்பித்தேன். இன்னும் அந்த ஒட்டவைத்த புன்னகை அவரிடம் பளிச்சென்று இருந்தது.

ரயில், ஈரோடு ரயில் நிலையத்தை நெருங்கிய போது அவரிடம் ஒரு சின்ன பதற்றத்தைக் காண முடிந்தது. அப்போதுதான் கவனித்தேன், அவர் அருகில் இருக்கும் ஒரு சாக்கு மூட்டையை. எனக்கு இப்போது தெளிவாகப் புரிந்தது. குப்பை பொறுக்கும் ஆள்தான் அவர்.  உடனே ஒரு சின்ன கோபமும் வந்தது. இப்படி இவர்களை ஏசி பெட்டிகளில் பயணம் செய்ய அனுமதித்தால், ஏதேனும் களவு போய்விடும் வாய்ப்புகள் அதிகமாயிற்றே! வரட்டும் அந்த டிடிஆர் என நினைத்துக் கொண்டே மீண்டும் அவரை நோட்டமிட ஆரம்பித்தேன்.

இது எனக்குத் தேவை யில்லாத வேலைதான் என்றாலும், அவர் முகத்தில் தெரிந்த வெள்ளந்தியான சிரிப்பு, கண்களில் இருந்த  நட்புப் பார்வையும் என்னை அவரிடம் பேசத் தூண்டியது.

“என்ன, ஈரோட்டுல இறங்குறீங்களா?”

“இல்ல சார், நான் பாம்பே வரைக்கும் போறேன்.  இங்க இறங்கி சில்ற வேலைகளை முடிச்சிடணும்!” என்றவர், என்னிடம், ‘‘நீங்க பம்பாய்தான் போறீகளா?” என்று கேட்டார்.

“ஆமா!” என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது ரயில், நிலையத்தை அடைந்தது.

உடனே அவர் இறங்கிக் கொண்டார். சாக்கு மூட்டையை தோளில் போட்டுக்கொண்டு ஒரு கையால் இன்னொரு முனையைப் பிடித்துக் கொண்டார். அது அவர் தோளில் தொய்வாகவும் குப்பைகளைப் போடுவதற்கு ஏதுவாக திறந்த நிலையிலும் இருந்தது. சடசடவென பொறுக்க ஆரம்பித்தார். ரயில் நின்ற பத்து நிமிடங்களில் அவர் ஓட்டமும் நடையுமாக மொத்த பிளாட்பாரத்தையும் அலசிவிட்டு, மறுபடியும் நான் இருந்த பெட்டிக்கே வந்து நின்றுகொண்டார். வண்டி கிளம்பியது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்