செபி அதிரடி... ஃபண்ட் முதலீட்டுக்குப் பாதிப்பா..?

மு.சா.கெளதமன்

“இனி டிஸ்ட்ரிபியூட்டர்கள், ஆலோசகர்களாக இருக்க முடியாது’’ என்கிற அதிரடி உத்தரவை செபி பிறப்பித்திருக்கிறது. இந்த தகவலைக் கேட்டு இந்தியா முழுக்க உள்ள டிஸ்ட்ரிபியூட்டர்கள் கதிகலங்கிப் போயி ருக்கிறார்கள். செபியின் அறிவிப்பு அப்படி என்ன பாதிப்புகளை உருவாக்கப்போகிறது என்பதைப் பார்ப்பதற்குமுன், செபியின் அறிவிப்பைப் பற்றி பார்ப்போம்.

செபியின் அறிவிப்பு!

இந்திய பங்குச் சந்தையின் நெறிமுறையாளரான செபியின் லேட்டஸ்ட் அறிவிப்பின்படி, நிதி சம்பந்தப்பட்ட திட்டங்கள், மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டுத் திட்டங்களை விநியோகிப்பவர்கள் (டிஸ்ட்ரிபியூட்டர்கள்), தங்களை அடுத்த மூன்று வருடத்துக்குள் பதிவுபெற்ற முதலீட்டு ஆலோசகர்களாக (Registered Investment Advisor) தேர்வு எழுதி பதிவு செய்துகொள்ள வேண்டும். 

பதிவு செய்துகொண்ட முதலீட்டு ஆலோசகர்கள் யாரும் ஃபண்டை விற்பதன் மூலம் (Distribute) எந்த கமிஷன் தொகையையும் பெறக் கூடாது.வழங்கும் ஆலோசனை களுக்கு நேரடியாக முதலீட்டாளர் களிடமிருந்து கட்டணத்தை வசூலித்துக்கொள்ள வேண்டும். அதே நேரத்தில், டிஸ்ட்ரிபியூட்டர்கள் எந்தக் காரணத்தைக் கொண்டும் முதலீட்டு ஆலோசனைகளைக் கொடுக்கக் கூடாது என்று சில திருத்தங்களை முன்வைத்திருக்கிறது.

படிப்படியான மாற்றங்கள்!


செபியின் இந்த அறிவிப்பு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்களை மிகவும் பாதிக்கும். இதனால் மியூச்சுவல் ஃபண்டுகள் மக்களிடம்  சென்றடைவது தாமதமாகும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில், சில மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்களைச் சந்தித்து அவர்களின்   கருத்தைக் கேட்டோம். சென்னையின் மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்களில் ஒருவரான தா.முத்துகிருஷ்ணன், “இது ஒரு வரைவுதான். நவம்பர் 4-ம் தேதி வரை இந்த வரைவின் மீது கருத்து தெரிவிக்கச் சொல்லி இருக்கிறது செபி. அதன்பிறகுதான் செபி, தனது முழுமையான திருத்தத்தை வெளியிடும். தற்போது டிஸ்ட்ரிபியூட்டர்களாக இருக்கும் நாங்கள், அடுத்த மூன்று வருடத்துக்குள், அதாவது 2020 ஜனவரிக்குள், செபி நடத்தும் தேர்வில் தேர்ச்சி பெற்று முதலீட்டு ஆலோசகர்களாக தரம் உயர்த்திக்கொள்ள வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நிதித் துறையில் இருப்பவர்கள் திறமை யானவர்களாக இருக்கவேண்டும் என்று எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஆனால், அது எந்த அளவுக்கு நடைமுறை சாத்தியம் என்று தெரியவில்லை. இந்தியாவில் சுமாராக 1 கோடி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டாளர்களும், 5 கோடி ஃபோலியோக்களும் இருக்கின்றன. இது இன்னும் பல மடங்கு பெருக வேண்டியிருக்கிறது.

நம் நாட்டில் சமீப காலமாகத்தான் மியூச்சுவல் ஃபண்டில் குறிப்பிடத்தகுந்த அளவுக்கு வளர்ந்திருக்கிறது. அதற்கு மியூச்சுவல் ஃபண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்களின் பங்கு கணிசமானது. எனவே, மாற்றங்களை தடாலடியாகக் கொண்டு வராமல் கொஞ்சம் கொஞ்சமாக கொண்டு வந்தால் நன்றாக இருக்கும்’’ என்றார்.

அனுபவஸ்தர்களை அங்கீகரிக்கலாமே!

அவரைத் தொடர்ந்து, பங்குச் சந்தையில் 25 வருட அனுபவமுள்ள பங்குச் சந்தை நிபுணர் வ.நாகப்பனுடன் பேசினோம். “முதலீடு என்று சொல்லும்போது, தானாகவே முதலீட்டாளரும் (Investor), முதலீடுகளை நிர்வகிப்பவர்களும் Investment Managers), முதலீட்டு ஆலோசகர்களும் (Investment Advisors) சேர்ந்துகொள்கிறார்கள். இவர்களுக்கு மத்தியில் ஒரு பாலமாக இருந்து, சரியான வழிகாட்டி அனைவரையும் லாபமடையச் செய்யவேண்டும் என்பதை இத்தனை காலமாக செபி தெளிவாகச் செய்துவருகிறது.

தற்போது சீராக, சரியாக வரையறுத்திருக்கும் எல்லைகளில் கச்சிதமாக இயங்கிக்கொண்டிருக்கும் நிதித் துறையை, குறிப்பாக, மேற்கூறிய மூன்று பேரையும், மேலும் சில புதிய திருத்தங்களைக் கொண்டுவந்து, முதலீடு செய்வதையே ஒரு சிரமமான காரியமாக பார்க்க வைத்துவிடுகிறதோ... என்று தோன்றுகிறது.

அதுமட்டுமின்றி, பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் கடந்த 30 ஆண்டு களுக்கு மேல் பணியாற்றியவர்கள்கூட இப்போது மீண்டும் தேர்வு எழுதித் தங்களை புதுப்பித்துக்கொள்ள வேண்டும் என்பது மேலோட்டமாகப் பார்த்தால் நியாயமாகத் தெரிந்தாலும், அது நல்லதுக்கல்ல. 30 ஆண்டு கால அனுபவம் என்பது முழுக்க முழுக்க களத்தில் பெற்ற எந்தப் பாடப் புத்தகங்களிலும் இல்லாத செழுமையான அறிவு.

இத்தனை ஆண்டுகளாக, அவர்கள் இந்தத் துறையில் இருக்கிறார்கள் என்றாலே போதுமான அறிவு, முதிர்ச்சி, குறிப்பாக நேர்மையாக இருந்திருக்கிறார்கள் என்றுதானே அர்த்தம்? அப்படி இருந்து இந்தத் துறையை வளர்த்தெடுக்க நேர்முகமாகவும், மறைமுகமாகவும் உதவியவர்களை குறைந்தபட்சம் அவர்களின் அனுபவத்தைக் கணக்கிட்டு தேர்வு எழுதி சான்று பெறச் சொல்வது அவ்வளவு சரியாகப்படவில்லை.

சென்னை போன்ற பெருநகரங்களில் இப்படியொரு தேர்வை எழுதித் தேர்ச்சி பெறுவது எளிது. தமிழகத்தின் மற்ற பகுதிகளை கொஞ்சம் பாருங்கள். பட்டப் படிப்பை படித்துவிட்டு, காலங்காலமாக பங்குச் சந்தையிலும், மியூச்சுவல் ஃபண்ட் துறையிலும் செயல்பட்டு, தங்களுடைய வாழ்கையை நகர்த்தத் தேவையான பணத்தை தரும் ஒரு வேலையாகக் கருதிச் செய்தவர்களின் நிலையைக் கொஞ்சம் யோசித்து பாருங்களேன்.

இந்தியாவில் பங்குச் சந்தை மற்றும் மியூச்சுவல் ஃபண்ட் தொடர்பாக செபியிடம் பதிவு செய்யாமல் ஒருவர் செயல்பட்டிருக்க முடியாது என்னும்போது, ஒரு குறிப்பிட்ட வருடம் வரை அந்தத் துறையில் பணியாற்றிய அனுபவம் வாய்ந்தவர்களுக்கு, செபியே நேரடியாகப் பதிவு பெற்ற முதலீட்டு ஆலோசகர்களாக சான்று வழங்கி அங்கீகரிக்கலாமே. இது அவர்களை ஊக்கப்படுத்துவது மட்டுமல்லாமல், மொத்தத் துறையையே வளர்க்க உதவும்.

இதற்கு இந்தியாவிலேயே பல உதாரணங்கள் இருக்கின்றன. நியமன ஐஏஎஸ், ஐபிஎஸ், சிஎஸ் என்று பல பட்டங்கள் அவர்களின் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டு வழங்கப் பட்டிருக்கின்றன. அப்படி, இந்தத் துறையில் இருக்கும் அனுபவஸ்தர்களை அங்கீகரித்து, இந்தத் துறையை வாழ வைக்கவேண்டும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்