ஏடிஎம்-ல் கள்ள நோட்டு... என்ன செய்ய வேண்டும்?

சோ.கார்த்திகேயன்

வீட்டுக்குப் பக்கத்தில் இருக்கும் ஏடிஎம்-ல் பணம் எடுத்து, அருகில் உள்ள மளிகைக் கடையில் பொருட்களை வாங்கிவிட்டு, 500 ரூபாய் பணத்தை நீட்டுகிறீர்கள். ‘சார், இது கள்ள நோட்டு, செல்லாது. வேறு நோட்டைக் கொடுங்க!’ என்று கடைக்காரர் கேட்டதும் உங்களுக்குப் பகீரென்கிறது. சில சமயங்களில் வங்கியிலிருந்து நாம் வாங்கிவரும் பணம்கூட கள்ள நோட்டு என்று சில இடங்களில் வாங்க மறுத்துவிடுகிறார்கள். இது மாதிரி கள்ள நோட்டு உங்களிடம் வந்து சேர்ந்தால், என்ன செய்யவேண்டும், யாரிடம் புகார் தர வேண்டும் என தனியார் வங்கி அதிகாரி விஜயகுமாரிடம் விசாரித்தோம்.

ஏடிஎம்-ல் கள்ள நோட்டு!


“ஏடிஎம் அல்லது வங்கியில் கள்ள நோட்டுகள் வருவதற்கு இப்போது வாய்ப்புக் குறைவு. பொதுவாக, அனைத்து வங்கிகளும் ஏடிஎம்-ன் மூலம் விநியோகிக்கவேண்டிய பணத்தை, குறிப்பிட்ட வங்கியின் கருவூலம் மூலமே அனுப்பி வைப்பார்கள். இந்தக் கருவூலத்தில் அழுக்கடைந்த, கிழிந்த மற்றும் கள்ள நோட்டுகள் அனைத்தும் ஆராயப்படுகின்றன. இந்தக் கருவூலத்திலேயே கள்ள நோட்டுகளை ஆராய்வதற்காக சாதனங்களும் உள்ளன. ஏடிஎம்-க்கு அனுப்பப்படும் அனைத்து ரூபாய் நோட்டுகளும் முழுவதுமாக சோதனை செய்த பின்பே அனுப்பப்படும். ஆகையால், ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைப்பதற்கு வாய்ப்புகள் மிகக் குறைவு” என்றவர், வங்கி வாடிக்கையாளர்கள் கவனிக்கவேண்டிய விஷயங்கள் குறித்து விளக்கிச் சொன்னார்.

கள்ள நோட்டுக்குச் சீல்!

ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைத்தால், கீழ்க்கண்ட வழிமுறைகளை வாடிக்கையாளர்கள் பின்பற்றவேண்டியது அவசியம்.

* வாடிக்கையாளர்கள் முதலில் எது கள்ள நோட்டு, எது நல்ல நோட்டு என்பதை நன்கு தெரிந்துவைத்திருக்க வேண்டும்.

* ஏடிஎம்-ல் கள்ள நோட்டுகள் கிடைத்தால், எந்த ஏடிஎம்-ல் பணம் எடுக்கப்பட்டதோ, அதன் அருகிலுள்ள அந்த வங்கிக்குச் செல்லவேண்டும். வாடிக்கையாளர் மூலம் கள்ள நோட்டுகள் வங்கிகளுக்கு வந்தால், அந்தப் பணத்தை முதலில் பரிசோதித்து அது கள்ள நோட்டாக இருக்கும் பட்சத்தில், ‘கள்ள நோட்டு’ என்று பணத்தின் மீது சீல் வைக்கப்படும். அதன்பின் வாடிக்கையாளரின் முகவரி மற்றும் அடையாளச் சான்றை வாங்கி, அவரிடம் கையெழுத்து வாங்கப்படும்.

* ஒவ்வொரு வங்கியிலும் கள்ள நோட்டுக்கு என்றே தனி பதிவேடு, ஒன்று வங்கி மேலாளரிடம் இருக்கும். அதில் வாடிக்கையாளர் கொண்டுவந்த கள்ள நோட்டு குறித்த விவரம் பதிவு செய்யப்படும். மீண்டும் வாடிக்கையாளருக்கு அந்தக் கள்ள நோட்டு திரும்ப வழங்கப்பட மாட்டாது. ஏடிஎம்-ல் எடுத்த கள்ள நோட்டுக்குப் பதிலாக வேறு ரூபாய் நோட்டு வழங்கப்படும்.

* இறுதியாக, வங்கியாளர்கள், வாடிக்கையாளர் வழங்கியதில் 3, 4 கள்ள நோட்டுகள் இருந்தால், அது குறித்த விவரங்களை போலீஸ் ஸ்டேஷனில் தெரியப்படுத்தி, எஃப்ஐஆர் பதிவு செய்வார்கள். அதே சமயம், வாடிக்கையாளர் ஏடிஎம்-லிருந்து கள்ள நோட்டை எடுத்திருந்தால் அதை வங்கிகளில் நிரூபிக்கவேண்டும். கள்ள நோட்டு தொடர்பாக ஒருவேளை வங்கி அதிகாரிகள் உங்களுக்கு முறையான பதிலை அளிக்கவில்லை; கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணத்தை வழங்கவில்லை எனில், காவல் நிலையத்தில் அது குறித்து நீங்கள் புகார் செய்யலாம்.

ஏடிஎம் ரிஜிஸ்டரில் புகார்!


இதுவே, வாடிக்கையாளர்கள் இரவு நேரத்தில் ஏடிஎம்-ல் பணம் எடுக்கச் சென்று அதில் கள்ள நோட்டுகள் இருந்தால், அங்குள்ள ஏடிஎம் காவலரிடம் இதுகுறித்த தகவல்களைத் தெரிவித்துவிட்டு, சிசிடிவி கேமரா முன் ஏடிஎம் ரிஜிஸ்டரில் உங்களுக்குக் கள்ள நோட்டுகள் கிடைத்துள்ளதாக அந்தப் புத்தகத்தில் புகார் செய்யவேண்டும். அதன்பின் அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் சென்று, ஏடிஎம்-ல் கள்ள நோட்டு கிடைத்ததாக எஃப்ஐஆர் பதிவு செய்யவேண்டும். இந்தப் புகாரின் அடிப்படையில் போலீஸார் விசாரணை மேற்கொள்வார்கள். விசாரணையில் வங்கித் தரப்பில் தவறு இருந்தால், உங்களுடைய பணம் திருப்பி வழங்கப்படும்.

வங்கியில் கள்ள நோட்டுகள் வந்தால்..!

வங்கி கவுன்டர்களில் கள்ள நோட்டுகள் வருவதற்கும், வாடிக்கையாளர்களுக்குக் கிடைப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. உதாரணத்துக்கு, வாடிக்கையாளர் ஒருவர் 10,000 ரூபாயை கவுன்டரில் செலுத்திவிட்டு, அதில் ஒரு சில நோட்டுகள், கள்ள நோட்டாக இருக்கும் பட்சத்தில், வங்கியாளர் அந்தப் பணத்தை பரிசோதிக்காமல், அந்தப் பணத்தை மற்ற ஒரு வாடிக்கையாளருக்கு வழங்கும்போது கள்ள நோட்டுகள் கிடைக்க வாய்ப்புள்ளது. வங்கியில் இருந்து கள்ள நோட்டுகளை வாங்கி இருந்தால், அதற்கு ஆதாரம் வழங்கினால், அதற்கு உண்டான பணம் திரும்ப வழங்கப்படும்.

ஆர்பிஐ விதிமுறை!

வங்கிகள் தரப்பில் தவறு இருந்தால், அந்தப் பணம் வாடிக்கையாளருக்கு உடனடியாக கிடைக்கும். இல்லையெனில் வாடிக்கையாளருக்குக் கள்ள நோட்டுக்குப் பதில் வேறு பணம் கிடைக்காது. ஆனால், ஏடிஎம் அல்லது வங்கிகளைத் தவிர, வேறு ஒரு ஏதாவது இடத்தில் கள்ள நோட்டுகள் ஒருவருக்குக் கிடைத்தால், அவர் அந்தப் பணத்தை இழந்ததற்குச் சமம்.
 
ஆர்பிஐ விதிமுறைகளின்படி, ஒன்றிரண்டு கள்ள நோட்டுகளை விவரம் தெரியாமல் வைத்து இருப்பது என்பது பெரும் குற்றமில்லை; ஆனால், கள்ள நோட்டை வைத்துக்கொண்டு மற்றவரை ஏமாற்றவேண்டும் என்ற நோக்கத்தில் அதை விநியோகிக்கக்கூடாது. அப்படி விநியோகித்தால், அது சட்டப்படி தவறு. அந்த வாடிக்கையாளரைக் கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் உண்டு’’ என்கிற எச்சரிக்கையுடன் முடித்தார்.

இனியாவது உங்களிடம் வரும் 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் நல்ல நோட்டுகள்தானா என்பதைப் பரிசோதித்து வாங்குங்கள்!


நல்ல  நோட்டு  -  கள்ள நோட்டு:  என்ன வித்தியாசம்..?

பாதுகாப்பு இழை : ரூ.10, ரூ.20, ரூ.50 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க, ஆனால் முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்புச் சாளரம் கொண்ட பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. ரூ.100, ரூ.500 ஆகிய தாள்கள் பார்க்கத்தக்க சாளரமுள்ள பாதுகாப்பு இழையைக் கொண்டுள்ளது. இந்த இழை பாதி வெளியில் தெரிவதாகவும், பாதி உள்ளே பதிக்கப்பட்டதாகவும் உள்ளது. வெளிச்சத்தில் பிடித்துப் பார்க்கும்போது, இந்த இழை தொடர்ச்சியான ஒரு கோடாகத் தெரியும். ரூ.1,000 தாள்களைத் தவிர மற்றவற்றில் இந்த இழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவத்தில், ‘RBI’ என்பதும் மாறி மாறித் தோற்றம் அளிக்கும். ரூ.1,000 பணத்தாளின் பாதுகாப்பு நூலிழையில் ‘பாரத்’ என்பது தேவநாகரி எழுத்து வடிவிலும் 1,000, RBI என்பனவும் இருக்கும். இதற்கு முன்னர் வெளியிடப்பட்ட தாள்கள் எழுத்துகள் எதுவும் இல்லாமல், பார்க்க இயலாத, முழுவதும் உள்ளே பதிக்கப்பட்ட பாதுகாப்பு இழைகளைக் கொண்டிருந்தன.

மறைந்திருக்கும் மதிப்பெண் :
மகாத்மா காந்தியின் உருவப் படத்துக்கு வலது பக்கத்திலுள்ள செங்குத்துப் பட்டைக் கோட்டில் அந்தந்த இலக்க மதிப்புக்கு ஏற்றவாறு 20, 50, 100, 500, 1,000 என்ற எண்கள் மறைந்திருக்கும். உள்ளங்கையில் பிடித்து அதன் மேல் 45° கோணத்தில் வெளிச்சம் விழுமாறு செய்தால் மட்டுமே அந்த மதிப்பினைக் காண முடியும். இல்லை எனில், இந்தத் தோற்றம் வெறும் செங்குத்துக் கோடாக தெரியும்.

நுண்ணிய எழுத்துகள்: மகாத்மா காந்தி உருவப்படத்துக்கும், செங்குத்துப்பட்டைக் கோட்டுக்கும் இடையில் இந்த அம்சம் உள்ளது. ரூ.10, ரூ.20 தாள்களில் RBI என்ற எழுத்துக்களும் தாள்களின் இலக்க மதிப்புகளும் உள்ளன. லென்ஸ் மூலம் இதனைத் தெளிவாகக் காணலாம்.

அடையாளக் குறியீடு : ரூ.10 தாளைத் தவிர, மற்றவற்றில் நீர்க் குறியீட்டுச் சாளரத்துக்கு இடப்புறத்தில் ஒரு செதுக்குருவம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்தத் தோற்றம் பல்வேறு இயக்க மதிப்புத் தாள்களில் வெவ்வேறு வடிவங்களில் உள்ளது (ரூ.20-ல் செங்குத்து நீள்சதுரம், ரூ.50-ல் சதுரம், ரூ.100-ல் முக்கோணம், ரூ.500-ல் வட்டம், ரூ.1,000-ல் சாய்சதுரம்). இது பார்வை அற்றவர்கள் அந்தத் தாளின் இலக்க மதிப்பினை அடையாளம் காண உதவுகிறது.

செதுக்குருவம் : மகாத்மா காந்தி உருவப்படம், ரிசர்வ் வங்கி முத்திரை, உத்தரவாத உறுதிமொழி வாசகம், இடப்பக்கத்தில் அசோகா தூண் சின்னம், ரிசர்வ் வங்கி கவர்னரின் கையொப்பம் ஆகியன செதுக்குருவத்தில் அச்சிடப்பட்டுள்ளன. அதாவது, தூக்கலான அச்சுகளில் ரூ.20, ரூ.50, ரூ.100, ரூ.500, ரூ.1,000 ஆகிய தாள்களில் அச்சிடப்பட்டுள்ளன.

ஒளிரும் தன்மை : தாள்களின் எண்ணிடம் ஒளிரும் மையினால் அச்சிடப்பட்டுள்ளது. தாள்களில் ஒளியிழைகளும் உள்ளன. புற ஊதாக் கதிர்விளக்கின் ஒளியில் பார்க்கும்போது இவ்விரண்டையும் காணலாம்.

பார்வைக் கோணத்தில் மாறுபடும் மை : ரூ.500 மற்றும் ரூ.1,000 பணத்தாள்களில் ரூ.500 மற்றும்       ரூ.1,000 -ன் மேல் லேசான மஞ்சள், லேசான ஊதா, பழுப்பு ஆகிய மாற்றப்பட்ட வண்ணத் திட்டங்களில், பார்வைத் தோற்றத்தில் மாறுபடும். அதாவது, வண்ணம் மாறித் தோன்றும் மையினால் அச்சிடப்பட்டுள்ளன. இந்தத் தாள்களை கிடைமட்டமாகப் பிடித்துப் பார்த்தால், இந்த இலக்கங்களின் வண்ணங்கள் பச்சையாகவும், ஒரு கோணத்தில் பிடித்துப் பார்த்தால் நீலமாகவும் தோன்றும். 
             
நன்றி: ஆர்பிஐ இணையதளம்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick