ஃபியோ பொன்விழா சிறந்த ஏற்றுமதியாளர்களுக்கு விருதுகள்!

ஞா.சக்திவேல்முருகன்

ற்றுமதியாளர்களுக்கு வழிகாட்டும் அமைப்பு களில் முக்கியமானது, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு என்கிற ஃபெடரேஷன் ஆஃப் இந்தியன் எக்ஸ்போர்ட் ஆர்கனைசேஷன் (சுருக்கமாக, FIEO). இந்த அமைப்பு தொடங்கி 50 ஆண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன.

இந்த அமைப்பின் பொன் விழா கூட்டத்தில் பேசிய வணிகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், ‘‘தற்போது ஏற்றுமதித் துறையில் உலக அளவில் போட்டி அதிகரித்து வருகிறது. ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில் அவர்களுக்குத் தேவையான தகவல்கள் உடனே கிடைக்கவும், உலகளவிய சந்தையை அடையாளம் காணவும், வெளிப்படையான விவரங்களை பெறவும் மத்திய அரசின் வணிகத் துறை ஏற்பாடு செய்து வருகிறது’’ எனச் சொன்னார். 

ஃபியோ தென்னக மண்டலத்தின் தலைவர் ஏ.சக்திவேல், “இந்திய ஏற்றுமதியில் மேற்கு மண்டலத்துக்கு அடுத்தபடியாக தெற்கு மண்டலம் 23% அளவுக்கு ஏற்றுமதியை மேற்கொண்டு இரண்டாவது இடத்தில் இருக்கிறது. இதற்கு காரணம், பல ஏற்றுமதியாளர்களின் சாதனையே. 2015-2016-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் மட்டும் 30.26 மில்லியன் டாலருக்கு ஏற்றுமதி நடந்திருக்கிறது. இது தேசிய அளவில் 13% ஆகும். இந்திய அளவில் குஜராத், மஹாராஷ்ட்ரா மாநிலத்துக்கு அடுத்த இடத்தில் மூன்றாவதாக தமிழ்நாடு இருக்கிறது’’ என்றார்.

தென்னிந்திய அளவில் சிறப்பாகச் செயல்பட்டு வரும் நிறுவனங்களுக்கு விருது வழங்கினார் மத்திய அமைச்சர். 2013 - 2014-ம் ஆண்டில் சிறப்பான முறையில் ஏற்றுமதி வர்த்தகத்தை மேற்கொண்ட நிறுவனங்களாக, தமிழ்நாட்டில் இருந்து முதன்மையான ஏற்றுமதியாளர் பிரிவில் சென்னை பெட்ரோலியம் கார்ப்பரேஷன், நட்சத்திர ஏற்றுமதியாளர் பிரிவில் திருப்பூர் ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட் குளோபல் கிளாத்திங் நிறுவனம், கோவை கிகானி எக்ஸ்போர்ட் நிறுவனம், வணிகப் பிரிவில் சென்னை டிராக்டர்ஸ் அண்ட் பார்ம் எக்யூப்மென்ட் லிமிடெட், பல்வேறு பொருட்கள் பிரிவில் ஆச்சி மசாலா, எம்டாப் இன்ஜினீயர்ஸ், வளர்ந்து வரும் நிறுவனங்களின் பிரிவில் ஆர்ஆர் என்டர்பிரைசஸ் நிறுவனமும் விருதுகளைப் பெற்றன.

2014-2015-ம் ஆண்டுக்கு முதன்மையான ஏற்றுமதிக்கான விருதினை ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம் பெற்றது. நட்சத்திர வணிகப் பிரிவில்  திருப்பூரைச் சேர்ந்த ஈஸ்ட்மேன் எக்ஸ்போர்ட் குளோபல் கிளாத்திங், சென்னையை சேர்ந்த லாயல் டெக்ஸ்டைல் மில்ஸ் உள்பட பல நிறுவனங்கள் விருது பெற்றன. வாழ்த்துகள் தொழில் அதிபர்களே!

படம்:  சதீஸ்குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்