உச்சத்தில் பங்குகளின் மதிப்பு: முதலீட்டை மாற்றியமைக்க ஏற்ற நேரம்!

ஆர்.பாலகிருஷ்ணன், முதலீட்டு நிபுணர்

ந்தியாவில் பங்குச் சந்தையில் முதலீடு செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. ஆனால், பெரும்பாலானோருக்கு முதலீடு குறித்த தெளிவு இன்னும் கிடைத்தபாடில்லை. சந்தையின் ஏற்ற இறக்கங்களை மட்டும்தான் கணக்கில் எடுத்துக் கொள்கிறார்கள். ஏற்ற இறக்கங்களுக்கு காரணமாக இருக்கும் செய்திகளையோ, நிறுவனங்களின் செயல்பாடுகளையோ யாரும் பார்ப்பதில்லை.

‘ரைஸ் அண்ட் ஃபால் ஆஃப் நேஷன்ஸ்’ என்கிற புத்தகத்தில் ருச்சிர் ஷர்மா இவ்வாறு குறிப்பிடுகிறார். “உலகம் சுருங்கிக் கொண்டிருக்கிறது. நாடுகளுக்கு இடையிலான சரக்கு மற்றும் சேவைப் பரிமாற்றங்கள் குறைந்து வருகின்றன. அதாவது, ஏற்றுமதி, இறக்குமதி குறைந்துகொண்டிருக்கிறது.”

கச்சா எண்ணெய் உள்ளிட்ட பிற கமாடிட்டிகளின் விலை குறைந்துவரும் நிலையில் மொத்த வர்த்தகம்  அதிகரித்திருக்க வேண்டும். ஆனால், அப்படி நடக்கவில்லை. காரணம், உலகம் அதற்குத் தேவையான அளவில் பொருட்களையும், சேவைகளையும் நுகரவில்லை. சரக்கு மற்றும் சேவைக்கான சப்ளை அதிகளவில் இருந்தாலும், அவற்றை வாங்குவதற்கான தேவை குறைவாகவே இருக்கிறது.

இதன் அடிப்படையில் ருச்சிர் ஷர்மா, உலகப் பொருளாதாரத்தை 2008-ம் ஆண்டு பொருளாதார நெருக்கடிக்கு முன், பின் என இரண்டாகப் பிரிக்கிறார். உண்மையில் 2008-க்குப் பிறகு, உலகப் பொருளாதார வளர்ச்சி குறைவாகவே இருக்கிறது. 2008-க்கு முன்பு வரை உலகப் பொருளாதாரம் வளர அமெரிக்கா காரணமாக இருந்தது. ஆனால், 2008 நெருக்கடிக்குப் பிறகு அது சீனாவின் கைக்கு மாறியது. எனினும், உலக நாடுகளுக்குத் தேவையான பொருளாதார வளர்ச்சி அங்கு ஏற்படவில்லை. 

நாடுகள் ஒன்றையொன்று தங்களைத் தற்காத்துக்கொள்ள வும், தங்கள் உரிமைகளை, உடமைகளைக் காப்பாற்றிக் கொள்ளவும் வேண்டிய அவசியம் ஏற்பட்டதால், உலகப் பொருளாதார வளர்ச்சி சுருங்கத் தொடங்கியது. அதற்கு சமீபத்திய உதாரணமாக, ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரிட்டன் வெளியேறியதைச் சொல்லலாம்.

நாடுகளுக்கு இடையிலான வர்த்தகக் கொள்கைகள் பொதுவானவையாக இல்லாமல், ஒன்றுக்கொன்று பதிலடி தரும் வகையில் மாறியது. புவிசார் அரசியலைத் தீவிரமாக கையில் எடுத்துக்கொண்டு, அரசியல்வாதிகள் தங்களுடைய அரசியல் செல்வாக்கைக் கட்டிக்காத்து வருகின்றனர். இதனால் நாடுகளுக்கிடையில் சுமுகமான வர்த்தகங்களுக்கான வாய்ப்பு இல்லாமல் போகிறது. கல்வி, ஆரோக்கியம் மற்றும் கடன் என எந்தத் துறையாக இருந்தாலும் இதுதான் இன்றைய நிலைமை.

இன்றும் ஏழை, பணக்காரன் இடையிலான போராட்டம் தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. இருவருக்கும் இடையிலான இடைவெளி குறுகியதாக இருந்தாலும், ஒரு ஏழை  பணக்காரனாவது நிறைவேறாத காரியமாகவே  இருக்கிறது. இதனால் சில நாடுகள் பிற நாடுகளைத் தங்கள் ஆதிக்கத்தில் வைத்துக்கொள்ளும்படி உடன்படிக்கைகளையும் கொள்கைகளையும் வகுத்துக்கொள்கின்றன. இது கடைசியில் நாடுகளின் மத்திய வங்கிகள், தங்களுடைய செலாவணியை, அதாவது பணத்தை, அதிகமாக அச்சடிப்பதில்தான் போய் முடிகிறது. 

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், இந்தியா தேவலாம் என்றுதான் சொல்ல வேண்டும். நம்முடைய வர்த்தகம் அதிகரிக்கவில்லை என்றாலும், நம்முடைய அந்நியச் செலாவணி இருப்பு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியர்களாலும், தகவல் தொழில்நுட்பத் துறை சார்ந்த பணியாளர்களின் குறைந்த ஊதியத்தால்  அடையும் வருமானத்தினாலும் பிரச்னை பெரிய அளவில் வெடிக்காமல் தடுக்கப்பட்டிருக்கிறது. 

கடந்த இரண்டு வருடங்களில் கச்சா எண்ணெய் விலை பாதிக்குப் பாதியாக குறைந்தது நமக்கு மேலும் சாதகமானது. இதனால் உலக நாடுகள் வளர்ச்சியை அதிகரிப்பதற்குத் திண்டாடும் நேரத்திலும் நம்மால் நல்ல வளர்ச்சியைப் பதிவு செய்ய முடிந்தது. மேலும், வெளிநாட்டு நிறுவனங்கள் மற்றும் நபர்கள் நம் நாட்டில் முதலீட்டை அதிகரித்ததன் மூலம் நம்முடைய நெருக்கடி நிலைகளை நம்மால் சமாளிக்க முடிந்தது.

உலகப் பொருளாதாரம் சுருங்கிவரும் நிலையிலும், பங்குகளின் சந்தை மதிப்பு கணிசமாக உயர்ந்திருப்பதை முதலீட்டாளர்கள் பெரிதாக  கவனத்தில் எடுத்துக்கொண்ட மாதிரி தெரியவில்லை. உலகச் சந்தைகளின் குறியீடுகளுக்கு இடையில் நம்முடைய சந்தை மதிப்பு ஏறக்குறைய உச்சத்தில் வர்த்தகமாகி வருகிறது. இந்த நிலையிலும் முதலீடு செய்வதற்கான காரணங்களை நாம் தேடித் தேடி முதலீடு செய்து வருகிறோம் என்பது மகிழ்ச்சியான விஷயம்தான். 

உதாரணத்துக்கு, ரிசர்வ் வங்கியின் ஆளுநர் செப்டம்பருக்குப் பிறகு பதவியில் நீடிக்க விரும்பவில்லை என்று தெரிவித்த நிலையிலும், பொதுத் துறை வங்கிகளின் பங்குகளில் முதலீட்டாளர்கள் ஆர்வமாக முதலீடு செய்தனர். காரணம், பொதுத் துறை வங்கிகளைச் சீரமைக்க அரசு எடுத்த முடிவுதான். வங்கிகளின் வாராக் கடன் சுமையைக் குறைக்க மத்திய அரசாங்கம் அறிவித்த நிதி ஒதுக்கீடு வங்கிகள் மீது பாசிட்டிவான சென்டிமென்டை உருவாக்கியது. இதனால் கடன் சுமை அதிகளவில் உள்ள வங்கிகளின் பங்குகளும் ஏற்றம் கண்டன. வங்கிகளின் வாராக் கடன்கள் திரும்பி வராமலேகூட போகலாம். ஆனாலும்,  இதுபோன்ற சில செய்திகள் அந்த நிறுவனங்கள் மீதான பார்வையை மாற்றிவிடுகின்றன.

வங்கிகளைப் போலத்தான் பாதுகாப்புத் துறை சார்ந்த நிறுவனங்களும், டெக்ஸ்டைல் துறை நிறுவனங்களும். பாதுகாப்புத் துறை நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள மூலதனத்தின் மீதான வருமானத்தைக்கூட ஈட்ட முடியாமல் பல ஆண்டுகளாக திணறி வந்தது. பருத்தி விலை ஏறிவரும் நிலையிலும் டெக்ஸ்டைல் துறைப் பங்குகள் கவர்ச்சிகரமாக மாறின. இப்படி ஒரு துறை சிறப்பாகச் செயல்படாவிட்டாலும், அரசு எடுக்கும் முடிவுகளோ அல்லது கமாட்டிகளின் விலை வீழ்ச்சியோ அவற்றின் மீதான முதலீட்டு சென்டிமென்டைத் தலைகீழாக மாற்றிவிடுகின்றன. ஆனால், அதன்பிறகு அவற்றின் நிலை எப்போதும் அப்படியே தொடர்வதில்லை என்பதே பிரச்னை.  

எனவே, உலகப் பொருளாதாரம் நிச்சயமற்ற நிலையில் இருப்பதால், முதலீட்டாளர்கள் சில விஷயங்களில் மிகவும் கவனமாக இருக்க வேண்டியது அவசியம். நீண்ட கால முதலீடு என்பதில் பல தொடர்ச்சியான குறுகிய காலங்கள் உண்டு. இந்தக் குறுகிய காலங்களில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். அதற்கேற்ப நம் முதலீட்டு முடிவுகளை எடுக்க வேண்டியுள்ளது.

இதற்கு சில உதாரணங்களைச் சொல்லலாம்: பிரிக்ஸ் நாடுகள் ஒருங்கிணைந்து நல்ல வளர்ச்சியை அடைந்து வந்தன. ஆனால், இப்போது சின்னா பின்னமாகிவிட்டன. ஜப்பான் 1989-லிருந்து போராடிக் கொண்டிருக்கிறது. அதன் சந்தைகள் அவற்றின் பழைய உச்சத்தை இன்னும் எட்டவில்லை.

ஆனாலும் அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் இந்திய சந்தைகள் தங்களுடைய வழியில் வளர்ந்து வருகின்றன. பாண்டு வருமானம் சில நாடுகளில்  நெகட்டிவ்வாக இருப்பதால், பங்குச் சந்தையில் வரும் 5 சதவிகித வருமானமே பெரிதாகப் பார்க்கப் படுகின்றது. அமெரிக்காவில் வட்டி விகிதம் உயர்த்தப்படும் வரை இது தொடரவே செய்யும். 

இந்தியா தற்போதைய நிலையில், உலக அரங்கில் சிறப்பான பொருளாதார நாடாக உள்ளது. எனவே, நம் சந்தையில் முதலீடு செய்வதற்கு பலரும் தயாராகவே உள்ளனர். இங்கு கமாடிட்டி களுக்கான டிமாண்ட் நன்றாக அதிகரித்திருப்பதால், கமாடிட்டி வர்த்தகம் முதலீட்டாளர்களிடையே மிகவும் பாசிட்டிவாகப் பார்க்கப்படுகிறது. இங்கு கடன் பிரச்னை, உள்கட்டமைப்பு பிரச்னை என என்ன பிரச்னைகள் இருந்தாலும் அதை யாரும் பெரிதாக நினைப்பதில்லை.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்