மாதம்தோறும் டிவிடெண்ட் தரும் பேலன்ஸ்டு ஃபண்டுகள்!

சாதகம் Vs பாதகம்...சொக்கலிங்கம் பழனியப்பன், டைரக்டர், ப்ரகலா வெல்த் மேனேஜ்மென்ட் பி.லிட்.

மியூச்சுவல் ஃபண்ட் உலகில் புதிதாக அறிமுகமாகியுள்ளது பேலன்ஸ்டு அல்லது டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளில் மாதாந்திர மற்றும் காலாண்டு டிவிடெண்ட் ஆப்ஷன் ஆகும். இந்த ஆப்ஷனை ஏன் மியூச்சுவல் ஃபண்டுகள் அறிமுகப்படுத்தின?

நம் நாட்டில் வங்கிகளின் ஃபிக்ஸட் டெபாசிட் சந்தை மிகப் பெரியது. அந்தச் சந்தையிலிருந்து ஒரு பகுதியையாவது, மியூச்சுவல் ஃபண்டுகளுக்கு கொண்டு வரவேண்டும் என்பது ஃபண்ட் நிறுவனங்களின் நீண்ட நாள் ஆசை. மேலும், சில ஆண்டுகள் முன்பு வரை கடன் சார்ந்த திட்டங்களுக்கு ஒரு ஆண்டு வைத்திருந்தாலே போதும்; நீண்ட கால முதலீட்டு லாப வரி (Long Term Capital Gains Tax) உரித்தாகும். வங்கிகள் நமது மத்திய நிதி அமைச்சகத்துடன் லாபி (lobby) செய்து, அந்தச் சலுகையைக் கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்டுகளில் பெறுவதற்கு மூன்று ஆண்டுகள் ஆக்கிவிட்டன.

முதலீட்டில் வரியில்லாத ரெகுலரான வருமானத்தை எதிர்பார்ப்பவர்கள் நம்மில் ஏராளமானோர். இந்த முதலீட்டாளர் சமூகத்தைக் கவர்வதற்காக நம் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கண்டுபிடித்த புதிய உத்திதான் பங்கு மற்றும் பங்கு சார்ந்த ஃபண்டுகளில் அறிமுகப் படுத்தப்பட்டுள்ள மாதாந்திர மற்றும் காலாண்டு டிவிடெண்ட் ஆப்ஷன்.

பங்கு சார்ந்த திட்டங்களில் இருந்து தரப்படும் டிவிடெண்டுக்கு வருமான வரி ஏதும் கிடையாது என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று.

பங்குச் சந்தை கட்டுப்பாட்டு வாரியமான செபியின் விதிமுறைகளின்படி, ஈட்டப்பட்ட வருமானத்திலிருந்துதான் டிவிடெண்ட் தரப்பட வேண்டும். பணத்தை பலரிடம்/ சிலரிடம் இருந்து வாங்கி, சிலருக்கோ/பலருக்கோ டிவிடெண்ட் தரக் கூடாது. மேலும், டிவிடெண்டையோ அல்லது ஃபண்ட் தரப்போகும் வருமானத்தையோ யாரும் கேரன்டி செய்யக்கூடாது. இவை அனைத்தையும் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் ஒரு இஞ்ச்கூட பிசகாமல் கடைப்பிடித்து வருகின்றன. யாரேனும் உங்களிடம் இந்த பேலன்ஸ்டு ஃபண்ட் அல்லது இந்த ஈக்விட்டி ஃபண்ட் மாதந்தோறும் கட்டாயமாக டிவிடெண்ட் தரும் என்று சொன்னால், தயவுசெய்து அதை நம்பி முதலீடு செய்யாதீர்கள். எந்த ஃபண்டும் நாங்கள் மாதம் தோறும் அல்லது குறிப்பிட்ட இடைவெளிகளில் டிவிடெண்ட் தருவோம் என்று உறுதி கூறுவதில்லை. காரணம், யாராலும் சந்தை எப்படி இருக்கும் என்பதை உறுதியாகக் கணிக்க முடியாது.

டாடா பேலன்ஸ்டு, ஐசிஐசிஐ புரூ. பேலன்ஸ்டு, ஐசிஐசிஐ புரூ. பேலன்ஸ்டு அட்வான்டேஜ், எல் அண்ட் டி புரூடன்ஸ், ஹெச்டிஎஃப்சி புரூடன்ஸ், கனரா ரேபிகோ பேலன்ஸ்டு, டி.எஸ்.பி-பி.ஆர் பேலன்ஸ்டு போன்ற பேலன்ஸ்டு ஃபண்டுகளும், இன்வெஸ்கோ இந்தியா டைனமிக் ஈக்விட்டி மற்றும் பி.என்.பி பரிபாஸ் டிவிடெண்ட் யீல்டு போன்ற டைவர்சிஃபைடு ஈக்விட்டி ஃபண்டுகளும் மாதாந்திர டிவிடெண்டுகளை தற்போது வழங்கி வருகின்றன.

ஹெச்.டி.எஃப்.சி. பேலன்ஸ்டு, எஸ்.பி.ஐ. மேக்னம் பேலன்ஸ்டு, எடெல்வைஸ் அப்சலியூட் ரிட்டர்ன் போன்ற ஃபண்டுகள் காலாண்டு டிவிடெண்டை வழங்கி வருகின்றன. ஆண்டுக்கு ஒரு தடவை டிவிடெண்டை, கிட்டத்தட்ட அனைத்து ஃபண்டுகளுமே ஒரு ஆப்ஷனாக வெகு காலமாக வழங்கி வருகின்றன. யாருக்கு எது உகந்தது என்பதைப் பார்ப்போம்.

நீங்கள் இளம் வயதினர், ரெகுலராக சம்பாத்தியம் உள்ளவர் என்றால், எந்த விதமான டிவிடெண்ட் ஆப்ஷனுக்கும் பேலன்ஸ்டு மற்றும் ஈக்விட்டி ஃபண்டுகளில் செல்லாதீர்கள். உங்கள் வங்கிக் கணக்குக்கு அந்தத் தொகை வந்தால், அது எங்கு, எப்படிப் போகிறது என்று கண்டுபிடிக்க முடியாதபடி மாயமாக மறைந்துவிடும். ஆகவே, நீங்கள் குரோத் ஆப்ஷனுக்கே சென்றுவிடுங்கள். மேலும், டிவிடெண்ட் ஆப்ஷனில் செல்வதின் மூலம், செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்பினை நீங்கள் இழக்கிறீர்கள் என்பதே உண்மை!   

மாதாமாதம் கட்டாயமாக உங்கள் தினசரித் தேவைகளுக்கு, நீங்கள் செய்யும் முதலீட்டிலிருந்து பணம் தேவை என்றால், பங்கு சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட்-ல் (பேலன்ஸ்டு ஃபண்ட் உட்பட) முதலீடு செய்யாதீர்கள். அதற்குப் பதிலாக வங்கி, அஞ்சலக மற்றும் தரமான கம்பெனி டெபாசிட்டுகளுக்குச் சென்றுவிடுங்கள். அங்கு வருமானம் குறைவாக இருந்தாலும், வரிச் சுமை அதிகமாக இருந்தாலும், நிச்சயமான வருமானம் கிடைக்கும். மாதாந்திர டிவிடெண்ட் வழங்கும் மியூச்சுவல் ஃபண்டுகள், நிச்சயமான வருமானத்தை உங்களுக்குத் தர முடியாது.   

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்