எல் அண்ட் டி-யின் அடுத்த தலைவர்... சாதனை படைப்பாரா சுப்ரமணியன்?

மு.சா.கௌதமன்

லார்சன் அண்ட் டியூப்ரோ (எல் & டி) குழுமத்தின்  தலைவராக கடந்த பல ஆண்டுகளாக இருந்து வருபவர் ஏ.எம்.நாயக். இவர் 2017 அக்டோபரில் எல் அண்ட் டி தலைவர் பதவியிலிருந்து ஓய்வு பெறுகிறார்.

இந்த நிலையில், எல் அண்ட் டி நிறுவனத்தின் அடுத்த தலைவர் யார் என்கிற கேள்வியைப் பலரும் கேட்டு வந்தனர். இந்த கேள்விக்கான பதில் இத்தனை நாள் வரை தெரியாமலே இருந்தது.

சமீபத்தில் நடந்த எல் அண்ட் டி-யின் ஆண்டுப் பொதுக் கூட்டத்தில் பேசிய நாயக், தனக்குப் பிறகு         எல் அண்ட் டி-யின் தலைவராக எஸ்.என்.சுப்ரமணியன் இருப்பார் என்பதை வெளிப்படையாக அறிவித்தார்.

எல் அண்ட் டி-யின் அடுத்த தலைவர் என்கிற பெருமை சுப்ரமணியனுக்குக் கிடைத்திருப்பது பலரையும் ஆச்சரியப்பட வைத்திருக்கிறது. யார் இந்த எஸ்.என்.சுப்ரமணியன்? 

1984-ல் புராஜெக்ட் பிளானிங் இன்ஜினீயராக, எல் அண்ட் டி நிறுவனத்தில் தனது வாழ்கையைத் தொடங்கினார் சுப்ரமணியன். டெல்லி, ஹைதராபாத், மும்பை, பெங்களூரு ஆகிய நகரங்களில் விமான நிலையங்கள் அமைப்பதில் இவரது பங்கு முக்கியமானது.  மும்பையில் உள்ள ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கிக் கட்டடத்தையும்  தேசிய பங்குச் சந்தை கட்டடத்தையும் இவர் தலைமையில் கட்டப்பட்டது. அவ்வளவு ஏன், சென்னையில் இருக்கும் டைடல் பார்க்கூட இவர் தலைமையில் உருவானதுதான்.

“என் வேலை கட்டடங்கள் கட்டுவது மட்டுமே’’ என்று ஒதுங்கிவிடாமல், எல் அண்ட் டி குழுமத்தில் ரெடி மிக்ஸ் பிசினஸை அறிமுகப்படுத்தி, அதன்மூலம் நல்ல லாபத்தையும் சம்பாதித்துக் காட்டினார் சுப்ரமணியமன். 

பத்து ஆண்டுகளுக்கு முன்பு எல் அண்ட் டி-யில் இருந்த மற்ற சீனியர்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு, கட்டுமானத் துறையின்‌ தலைவரானார் சுப்ரமணியன். பதவிக்கு வந்தவுடனேயே எல் அண்ட் டி-யின் கட்டுமானத் துறையை, அந்தக் குழுமத்திலேயே அதிக வருமானம் தரக்கூடிய துறையாக மாற்றினார். அதிக வருமானம் என்றால் அந்தக் குழுமத்துக்குக் கிடைக்கும் மொத்த வருவாயில் கிட்டத்தட்ட 80 சதவிகிதத்தை ஈட்டி சாதனை படைத்தார்.

தன் திறமையாலும், புதுமையான தொழில்நுட்பங்களையும் புகுத்தி, 2015-ல் எல் அண்ட் டி குழுமத்தின் இணை நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவர் ஆனார். கூடிய விரைவில் குழுமத்தின் செயல் தலைவராக (Group Executive chairman) வர இருக்கிறார் சுப்ரமணியன்.

இவர் தலைமையில் எல் அண்ட் டி  குழுமம் இன்னும் பல சாதனைகளைப் படைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்