ஷேர்லக்: ஜியோ எஃபெக்ட்: துடித்துப்போன ஏர்டெல்!

ழை வந்தால், நனைந்துவிடக் கூடாது என்பதற்காக கையில் குடையுடன் வந்திருந்தார் ஷேர்லக். நாமும் தயாராக வைத்திருந்த கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம்.

“ஜியோ அறிமுகப்படுத்தியதன் மூலம் ரிலையன்ஸ், ஏர்டெல்லுக்கு இடையே பெரும் மோதல் ஏற்பட்டுள்ளதே!’’ என்றோம். 

“ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஆண்டு பொதுக் கூட்டத்தில் ஜியோ நிறுவனம் பற்றி முகேஷ் அம்பானி பேசப் பேச, போட்டி நிறுவனங்களான ஏர்டெல், ஐடியா ஆகிய நிறுவனங்களின் பங்கு விலை சடசடவென சரிய ஆரம்பித்தது. ஒரே நாளில் பார்தி ஏர்டெல்லின் மார்க்கெட் கேப்பிட்டலை சேஷன் ரூ.9,800 கோடி காணாமல் போனது. இதேபோல், ஐடியா செல்லூலருக்கும் ரூ.2,450 கோடி மார்க்கெட் கேப்பிட்டலைசேஷன் வீழ்ச்சி அடைந்தது. அதேசமயம், ஜியோ அறிமுகத்தால் ஆர்ஐஎல்-ன் லாபம் குறையும் என்கிற செய்தியால், ஆர்ஐஎல்-ன் பங்கு விலையும் கொஞ்சம் குறைந்தது. இதனால் அதன் மார்க்கெட் கேபிட்டலைசேஷன் ரூ.9,400 கோடி சரிந்தது’’ என்று புள்ளிவிவரமாகப் பேசினார் ஷேர்லக்.

சுடச்சுட ஏலக்காய் டீ தந்துவிட்டு, “அடமானம் வைத்த பங்குகளை ரியல் எஸ்டேட், டெக்ஸ்டைல் நிறுவனங்கள் வேகமாக மீட்டு வருகின்றனவே, என்ன விஷயம்?” என அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

“ரியல் எஸ்டேட், கட்டுமானம், டெக்ஸ்டைல் துறை நிறுவனங்களில் இது அதிகமாக நடந்துள்ளது. ஐஎல் அண்ட் எஃப்எஸ் டிரான்ஸ்போர்ட்டேஷன் நெட் ஒர்க்ஸ் நிறுவனம், 2015 ஜூனில் அதன் 98.17 சதவிகிதப் பங்குகளை அடமானமாக வைத்திருந்தது. இதை ஜூன் 2016-ல் 71.19 சதவிகிதமாகக் குறைத்துள்ளது. இதேபோல், டிபி ரியால்டி (68.89 சதவிகிதத்தி லிருந்து 84.64%), ஆர்பிட் கார்ப்பரேஷன் (76.93 சதவிகிதத்திலிருந்து 63.67%), லான்கோ இன்ஃப்ராடெக் (93.56 சதவிகிதத்திலிருந்து 80.83%), ஆர்பிபி இன்ஃப்ரா புராஜெக்ட்ஸ் (53.39 சதவிகிதத்தி லிருந்து 41.69%), ஜிஎம்ஆர் இன்ஃப்ரா (83.88 சதவிகிதத்திலிருந்து 73.55%) போன்ற நிறுவனங்கள் அடமானப் பங்குகளை கணிசமாகக் குறைத்திருக்கின்றன. இதற்கான நிதியை ஆல்டர் நேட்டிவ் இன்வெஸ்ட்மென்ட் ஃபண்டுகள், ரியல் எஸ்டேட் ஃபண்டுகள் மூலம் இந்த நிறுவனங்கள் திரட்டி உள்ளன. இந்தத் துறை நிறுவனங்களைத் தொடர்ந்து வேளாண், ரசாயனம், பால் மற்றும் பண்ணைப் பொருட்கள் நிறுவனங்களும், தாங்கள் அடமானம் வைத்துள்ள பங்குகளை மீட்டு வருகின்றன” என்று விளக்கம் தந்தார்.

‘‘பல கம்பெனிகள் இலவசப் பங்குகளை வாரி வழங்கி இருக்கிறதே, என்ன காரணம்?’’ என்றோம்.  

“நடப்பு நிதி ஆண்டின் (2016-17) முதல் ஐந்து மாதங்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட கம்பெனிகள் முதலீட்டாளர்களுக்கு இலவசப் பங்குகளை (போனஸ் ஷேர்ஸ்) வெளியிட்டுள்ளன. முந்தைய நிதி ஆண்டின் இதே காலத்தில் இந்த எண்ணிக்கை முப்பதாகத்தான் இருந்தது. பல நிறுவனங்களின் நிகர லாபம் அதிகரித்ததால், அவை முதலீட்டாளர் களுக்கு போனஸ் பங்குகளை அளித்துள்ளன. இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன், ரூரல் எலெக்ட்ரிபி கேஷன் கார்ப்பரேஷன், ஆர்இசி, பவர் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் போன்றவை போனஸ் பங்குகளை அறிவித்துள்ளன. பல்வேறு கடன்களை வழங்கிவரும் தனியார் நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் பங்குதாரர்கள் 1:5 என்கிற விகிதத்தில் பங்குப் பிரிப்பை (ஸ்டாக் ஸ்பிளிட்) மேற்கொள்ளவும், 1:1 இலவசப் பங்குகளை வழங்கவும் அனுமதி அளித்திருக்கின்றன. இந்தத் தகவல் வெளியானதை அடுத்து அந்தப் பங்கின் விலை கிடுகிடுவென ஏற ஆரம்பித்திருக்கிறது” என்று கூடுதல் தகவல் தந்தார்.

“ஆர்பிஎல் பேங்க், பங்குச் சந்தையில் பட்டியல் ஆகி நல்ல லாபத்தைத் தந்திருக்கிறதே!’’ என்றோம்.

‘‘ஆர்பிஎல் வங்கிப் பங்கும் 22% பிரீமியத்தில் பட்டியலிடப்பட்டுள்ளது. புதன்கிழமை அன்று வர்த்தகம் நிறைவு பெற்றபோது அதிகபட்சமாக ரூ.305-க்கு உயர்ந்தது. இது 33.3% அதிகம்” என்றார்.

“13 கம்பெனிகளின் வர்த்தகத்தை பிஎஸ்இ நிறுத்தப் போகிறதாமே!’’ என கிசுகிசுத்தோம்.

‘‘பங்குச் சந்தையில் பட்டியலிடும் விதிமுறைகளை பின்பற்றாத 13 நிறுவனங்களின் பங்கு வர்த்தகத்துக்கு பிஎஸ்இ தடை விதிக்க உள்ளது. இது செப்டம்பர் 14-ம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிஜிட்டல் எலெக்ட்ரானிக்ஸ், சைடன் ஜென்டெக், எல்டர் ஹெல்த் கேர், லுமினார் டெக்னாலஜிஸ் (Luminaire Technologies), எரா பில்டிஸ் (Era Buildsys), ஒரிசா ஸ்பாஞ்ச் அயன் அண்ட் ஸ்டீல், எஸ்கொயர் மணி கேரன்டீஸ், வொயிட் லையன் ஆசியா, கெம்மியா ஆயில்டெக் (இந்தியா), கேலக்ஸி கான்சிலேடட் ஃபைனான்ஸ், எரா இன்ஃப்ரா இன்ஜினீயரிங், எல்டர் பார்மா அண்ட் எல்டர் புராஜெக்ட்ஸ் நிறுவனங்கள் குறிப்பிடத்தக்கவை” என்றார். 

“சந்தையின் போக்கு எப்படி இருக்கிறது?” என்று கடைசிக் கேள்வியைக் கேட்டோம்.

“ஏற்ற இறக்கத்தில் இருந்தாலும், சந்தை புதிய உச்சங்களை இந்த வாரத்தில் தொட்டிருக்கிறது. இரண்டு மாதங்களாக விற்பனையாளராக இருந்த மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், முடிந்த ஆகஸ்ட்டில் முதலீட்டாளராக மாறி இருக்கின்றன. ஜூன், ஜூலையில் ஈக்விட்டி ஃபண்டுகளிருந்து மொத்த முதலீடுகள் வெளியேறி இருக்கின்றன. இந்த நிலையில், ஈக்விட்டி ஃபண்டுகளில் எஸ்ஐபி முதலீடு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது’’ என்றபடி, ஃபாலோ செய்ய வேண்டிய பங்குகளைத் தந்தார்.

“குறுகிய கால முதலீட்டுக்கு : டாரண்ட் பார்மா, டாக்டர் ரெட்டீஸ், கோத்ரேஜ் இண்டஸ்ட்ரீஸ், ஐடிசி, டாபர் இந்தியா.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்