டிரேடர்களே உஷார் - 23

இத்தொடரின் மற்ற பாகங்கள்:
தி.ரா.அருள்ராஜன், தலைவர், எக்ட்ரா பங்குச் சந்தை பயிற்சி நிறுவனம்.இ - மெயில் @ எச்சரிக்கை

சீனுவாசன், புரோக்கர் ஆபிஸுக்குப் பதற்றத்தோடு போன் செய்து, அவரது அக்கவுன்ட் பேலன்ஸ் பற்றிக் கேட்டார். எதிர்முனையில் பதில் சொன்னதும் அவரது பதற்றம் இன்னும் அதிகமானது.

‘‘என்னது என் அக்கவுன்ட்ல 25,000 ரூபாய்தான் இருக்கா? நான் 75,000 ரூபாய் போட்டு இருந்தேனே... நான் நேர்ல வர்றேங்க’’ என்று சொல்லிவிட்டு போனை கட் செய்தார்.

 ‘ஷேர் மார்க்கெட்ல பணம் போட்டா நிறைய லாபம் வரும்னு நினைச்சி,  கையில இருந்த சேமிப்பு எல்லாத்தையும் போட்டேனே?  இப்ப இப்படி சொல்றாங்களே...’ என அவர் மனம் தவித்தது.

சீனுவாசன் ஒரு விவசாயி.  எட்டாம் வகுப்பு வரை படித்தவர். பங்குச் சந்தையில் பணம் போட்டால் பல மடங்காக எடுக்கலாம் என பலர்் சொல்வதைக் கேட்டு, ஒரு புரோக்கரிடம் கணக்குத் தொடங்கினார்.  எந்தப் பங்கு வாங்கணும், எப்ப வாங்கணும் என்றெல்லாம் அவருக்கு எதுவும் தெரியாது. புரோக்கர் ஆபிஸில் சொல்வதை வாங்குவார், விற்பார்.

கமலகண்ணன்னு ஒரு டீலர். அவர்தான் புரோக்கர் ஆபிஸில் இருந்து அவ்வப்போது போன் செய்து, ‘‘சார், இந்த ஷேர் வாங்குங்க” என்று சொல்வார்.  எப்போதாவது லாபம் வரும். பெரும்பாலும் நஷ்டம்தான்.  5,000 ரூபாய் நஷ்டம் வந்தவுடன் டிரேடிங் செய்வதை நிறுத்திவிட்டார்.
டிரேடிங் செய்வதை நிறுத்தி ஏறக்குறைய   நான்கு, ஐந்து மாதம் இருக்கும். அடுத்த போகம் பயிர் செய்ய, விதை நெல் வாங்க கையில் பணமில்லை. இந்த டிரேடிங்கில் போட்ட பணம் சும்மாதானே கிடக்கிறது.  அதை எடுக்கலாமே என்று நினைத்துத்தான்  சீனுவாசன் புரோக்கர் ஆபிஸுக்கு போன் செய்தார்.   

ஆனால், புரோக்கர் ஆபிஸில் சொன்னதைக் கேட்டு இதயமே நின்றுவிடும் போலிருந்தது சீனுவாசனுக்கு. ‘எப்படிப் போச்சு என் பணம்..?’ மனதுக்குள் கேள்வி ஓடிக்கொண்டே இருந்தது. மனைவி செங்கமலம் தோட்டத்தில் இருந்து அப்போதுதான் வந்தார்.

சீனுவாசனுக்கு மனைவியிடம் பணப் பிரச்னைப் பற்றி சொல்லலாமா, வேண்டாமா எனக் குழப்பமாக இருந்தது. சொன்னால் ஒரு வாரத்துக்கு இவளுக்கு சோறு தண்ணி இறங்காது. அப்புறம் சொல்லிக்கொள்வோம் என முடிவு செய்துகொண்டு, கிளம்பினார்.

புரோக்கர் ஆபிஸ் ரிசப்ஷன் பெண், விவரத்தைக் கேட்டுவிட்டு சோபாவில் உட்காரச் சொன்னார். கொஞ்சம் நேரம் கழித்து, உள்ளே இருந்து நெட்டையாக,  ஒல்லியாக ஒருத்தர் வந்து சீனுவிடம் பேசினார்.

‘‘மிஸ்டர் சீனுவாசன், என் பேரு ரமேஷ். நான்தான் உங்க அக்கவுன்ட்டை பார்த்துக்கிறேன். நீங்க ஏன் இப்ப எல்லாம் டிரேட் பண்றதில்லை.  உங்களுக்கு என்ன உதவி வேணும்னு தெரிஞ்சிக்கலாமா?”

‘‘என் அக்கவுன்ட்ல எவ்வளவு பணம் இருக்கு..?’’

“கொஞ்சம் இருங்க நான் உங்க ஸ்டேட்மென்டை பிரின்ட் எடுத்து கொண்டு வரேன்.”

ரமேஷ் ஆபிசுக்கு உள்ளபோய், ஒரு கால் மணி நேரம் பொறுத்து கையில் கத்தையாய் பேப்பருடன் வந்தார். ‘‘இந்தாங்க இதுதான் உங்க ஸ்டேட்மென்ட் நீங்க ஆரம்பிச்ச காலத்தில் இருந்து இப்ப வரைக்கும் எல்லாம் இருக்கு. இதில பாருங்க, உங்களுக்கு ஏதாவது டவுட் இருந்தா கேளுங்க, நான் விளக்கிச் சொல்றேன்.

சீனுவாசன் அந்த கத்தையான பேப்பரை வாங்கி மேலும் கீழும் பார்த்தார்.   என்னடா இது, ஒரு மூணு நாலு தடவை ஷேர் வாங்கி இருப்போம்.

   அதுக்குபோய் இப்படி கத்தையா பேப்பர்ல கணக்கு காட்டுறாங்களே. அந்த பேப்பரைப் பார்த்த, அவருக்கு காலும் புரியல, தலையும் புரியல.

“சார், நான் எட்டாம் கிளாஸ்வரைதான் படிச்சவன். இங்கிலீஸ் எல்லாம் வராது.  அப்புறம் கணக்கு வழக்கு எல்லாம் எப்படி பார்கிறதுன்னு தெரியாது. கொஞ்சம் நீங்களே பார்த்து சொல்லுங்களேன்.”

“சரிங்க நானே சொல்றேன். இந்த பேப்பரை சரியா பாருங்க. ஆறு மாசத்துக்கு முன்னாடி இந்த தேதியில ரூ.75,000 போட்டு கணக்கு துவங்கி இருக்கீங்க. அப்புறம் நாலுமுறை ஷேர் வாங்கி வித்து இருக்கீங்க. அதுல உங்களுக்கு நஷ்டம் ரூ.5,000.

அப்புறம் ஒரு மாசம் நீங்க டிரேட் பண்ணல. அதுக்கு அடுத்த மாசத்திலிருந்து நீங்க நிஃப்டி ஃப்யூச்சர்ஸ்ல டிரேட் பண்ணி இருக்கீங்க.”

“நிஃப்டின்னா என்னாங்க..?”

டீலர் ரமேஷுக்கு உடனே என்ன சொல்றதுன்னு தெரியல. ‘என்ன இந்த ஆளு, கடந்த நாலு மாசமா நிஃப்டியில லெஃப்ட் அண்ட் ரைட்டுன்னு டிரேட் பண்ணி இருக்கார். இப்ப நிஃப்டின்னா என்னன்னு கேட்கிறாரே...’ என யோசித்தாலும் ரமேஷின் உள் மனதில் ஏதோ நெருடியது. இருந்தாலும் தொடர்ந்து பேச ஆரம்பித்தார்.

“நிஃப்டின்னா அது இண்டெக்ஸ். தேசிய பங்குச் சந்தையின் இண்டெக்ஸ். இதில 50 கம்பெனிகள் இருக்கு.”

“நான் ஐம்பது கம்பெனி எதுவும் வாங்கலீங்களே.”

“அதுக்கு அப்படி அர்த்தம் பார்க்கக் கூடாது.  நிஃப்டி வாங்கினாவே, ஐம்பது கம்பெனி வாங்கறதுக்குச் சமம்.”

‘‘அப்படிங்களா, அதைப்பத்தி எனக்கு தெரியாதுங்களே...”

‘‘மிஸ்டர் சீனுவாசன், இந்த ஸ்டேட்மென்டை  பாருங்க... நிஃப்டி பத்தி தெரியாமலே அதுல நாலு மாசம் டிரேட் பண்ணி இருக்கீங்க. அதுலதான் உங்களுக்கு பெரிய நஷ்டம் ஆகியிருக்கு. அந்த நஷ்டம் எல்லாம் போய் இப்ப உங்க கணக்கில ரூ.25,000 இருக்கு.”

சீனுவாசன் டக்கென்று சோபாவில் இருந்து எழுந்தார். “ என்னங்க நீங்க.  நான் ஏதோ பண்ணி இவ்வளவு நஷ்டம் அப்படின்னு சொல்றீங்க. அந்த மாதிரி நான் எதுவுமே பண்ணலைங்க.” சீனுவாசனுக்கு கண்ணில் நீர் முட்டியது.

ரமேஷுக்கு அவரைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. உட்காரச் சொன்னார். சீனுவாசன், தன்னை கொஞ்சம் கட்டுப்படுத்திக்கொண்டு அமர்ந்தார்.

ரமேஷ் தொடர்ந்தார். ‘‘இதைப் பாருங்க சார். இந்த நாலு மாசம் நிஃப்டியில் தினம் ஒரு முறை டிரேட் பண்ணி இருக்கீங்க. அதுல வந்த லாஸ்தான் இது.”

சீனுவாசனுக்கு துக்கம் தொண்டையை அடைத்தது. “ஐயா, அதை நான் பண்ணலீங்க.”

“உங்களுக்கு தினம் இ-கான்ட்ராக்ட் வந்திருக்குமே. ஏன் இவ்வளவு நாள் சும்மா இருந்தீங்க.”

“இ-கான்ட்ராக்ட்னா?”

“அதான் சார், உங்க இ-மெயிலுக்கு நீங்க பண்ண டிரேட் டீடெய்ல்ஸ்  எல்லாம்  வந்திருக்குமே. உடனே வந்து சொல்லியிருக்கலாமே.”

“இ-மெயில்னா என்னா சார்..?”சீனிவாசன் குரல் தழுதழுத்தது.

டீலர் ரமேஷுக்கு தர்மசங்கடமாக இருந்தது. ‘‘இங்க பாருங்க மிஸ்டர் சீனுவாசன், நீங்க இங்க அக்கவுன்ட் ஓப்பன் பண்ணும்போது, கண்டிப்பாக ஒரு இ-மெயில் ஐ.டி கொடுக்கணும். இங்க பாருங்க உங்க இ-மெயில் ஐ.டி ‘சி.சீனுவாசன் @ஜிமெயில்.காம்’. இந்த ஸ்டேட்மென்ட்ல  இருக்கு பாருங்க.  இது நீங்க கொடுத்த இ-மெயில் ஐ.டிதானே..?”

சீனுவாசனுக்கு மயக்கம் வரும்போல் இருந்தது. “சார், சத்தியமா எனக்கு இதைப்பத்தி எல்லாம் தெரியாது சார்.”ரமேஷுக்கு இந்த லீலை எல்லாம் இதற்கு முன்பு டீலராக இருந்த கமலகண்ணன் விளையாட்டுதான் என்று புரிந்தது.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்