கலங்கடிக்கும் ஜியோ... இணையப் பொட்டல ரகசியம்!

டெக்னாலஜி ஸ்பெஷல்தமிழ்த்தென்றல்

‘Get your _____Sim free and 4GB 4G data for 60 days at cheapest fare.. Click here’

இப்படி சும்மானாச்சுக்கும் வெத்து மெசேஜ்கள் அனுப்பிக் கொண்டிருந்த நிறுவனங்களுக்கு மத்தியில், உண்மையாகவே ‘ரூபாய்க்கு 20 எம்பி’ என்கிற ரீதியில் டெலிகாம் இண்டஸ்ட்ரியில் கெத்து காட்ட ஆரம்பித்துவிட்டது ரிலையன்ஸ். ஏர்டெல்,  ஏர்செல், ஐடியா போன்ற நெட்வொர்க் பயன்பாட்டாளர்கள், இப்போது ‘தடால் தடால்’ என ஜியோ நெட்வொர்க்குக்கு மாறிவிடலாமா என யோசித்து வருகிறார்கள்.

‘நாங்க .....இருந்து பேசுறோம். உங்க மொபைலுக்கு 350 ரூபாய் கட்டினீங்கன்னா...’ என்று 500  எம்.பி-க்கே சீன் போட்ட நெட்வொர்க் நிறுவனங்கள் பீதியில் இருக்க, ஜிக்கா வைரஸ் போல் இப்போது ஜியோ வைரஸின் பிடியில் சிக்கியிருக்கிறது மொத்த இந்தியாவும். பங்குச் சந்தை நிறுவனங்கள் வீழ்ச்சி, நெட்வொர்க் நிறுவனங்கள் கடும் நஷ்டம், ட்விட்டரில் ரிலையன்ஸ் ட்ரெண்டிங் - இது எல்லாவற்றுக்கும் காரணம் ஜியோ! உலகின் விலை குறைந்த கார் வரிசையில் ‘நானோ’வை டாடா களம் இறக்கியதுபோல், உலகின் விலை குறைந்த நெட்வொர்க் பயன்பாட்டில் ஜியோவை இறக்கிவிட்டுச் சிரிக்கிறது ரிலையன்ஸ்.

இலவச சுனாமி!

42 ஆண்டுகளாக எத்தனையோ பிசினஸ் கொண்டாட்டங்களை விமரிசையாகக் கொண்டாடிவிட்டது ரிலையன்ஸ். ஆனால், அண்மையில் அறிவித்த ஜியோ அறிவிப்புதான் மொத்த இந்தியாவையும் பேச வைத்திருக்கிறது. ‘ரிலையன்ஸை நம்பக்கூடாது; நல்லா காசு புடுங்குவாங்க’ என்று சொன்ன அத்தனை இந்தியனையும், வாய் பிளந்து ‘ஜியோ’ சிம் விற்கும் கடைகளைத் தேடி அலைய வைத்திருக்கிறார் முகேஷ் அம்பானி. தேர்தல் நேரத்தில் அள்ளி வீசப்படும் வாக்குறுதிகள்போல்,  முகேஷ் அம்பானி அள்ளி வழங்கியிருக்கும் இலவச சுனாமி இதோ...

1. ஜியோ சிம் கார்டை இலவசமாக எங்கும் பெறலாம்.

2. இந்தியா முழுக்க எங்கு சுற்றினாலும், ரோமிங் பில் வராது.

3. இன்டர்நெட்டுக்கு 3ஜி, 4ஜி போன்ற இழுபறி விஷயங்கள் கிடையாது. ஆல்டைம் 4ஜி-தான்.

4. வாய்ஸ் காலிங் அல்லது டேட்டா - இது இரண்டில் ஏதாவது ஒன்றுக்கு மட்டும் பில் கட்டினால் போதும். அதுவும் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இருந்துதான். அதுவரை இரண்டுமே இலவசம்தான்.

5. ஒரு ஜி.பி டேட்டா - 50 ரூபாய்தான். அதாவது, ஒரு எம்.பி-யின் விலை வெறும் 5 பைசாதான். (அதிகம் பயன்படுத்துங்கள்; குறைவாகப் பணம் செலுத்துங்கள் என்று சப்-டைட்டிலுடன்)

6. இந்தியா முழுக்க பொது இடங்களில் வைஃபை வசதி கூடிய விரைவில் செய்யப்படும். இதனால் வீடியோ டவுன்லோடு போன்ற விஷயங்களுக்கு டேட்டாவை வேஸ்ட் பண்ண வேண்டாம்.

7. இதில் மாணவர்களுக்கு 25% டேட்டா கட்டணத்தில் தள்ளுபடி.

8. தீபாவளி, பொங்கல், காதலர் தினம் போன்ற கொண்டாட்ட நாட்களில் ஒரு மெசேஜுக்கு இரண்டு ரூபாய் போன்ற அன்புக் கட்டணங்கள் எதுவும் ஜியோவில் கிடையாது.

இந்த இலவசங்களை எல்லாம் நீங்கள் படிப்பதற்குள் புதிதாக வேறு சில இலவசங்கள் வந்திருந்தால், அவற்றையும் இதன் பிற்சேர்க்கையாக சேர்த்துக்கொள்ளுங்கள்.

எப்படி சாத்தியம்?

டேட்டா ஃப்ரீ, இலவச வைஃபை என்று ஆஃபர்களை அள்ளித் தெளித்தாலும், அனைவரையும் திக்குமுக்காட வைப்பது, ‘பேசுவதற்குக் கட்டணமில்லை; ரோமிங் இல்லை’ என்பதுதான். ‘‘டேட்டா ஆஃபர், வைஃபை எல்லாம் ஓகே. இலவச வாய்ஸ் கால்கள் எப்படிச் சாத்தியம்?’’ என்று ஜெர்மனியில் உள்ள விப்ரோவில் பணிபுரியும் தமிழரான ஜெகந்நாத் ஸ்ரீனிவாசனிடம் கேட்டோம். ‘‘இது நீங்கள் நினைப்பதுபோல், பெரிய ஜெகஜ்ஜால வேலையோ, மக்களுக்காக நஷ்டத்தை ஏற்றுக்கொண்டு தியாகம் பண்ணும் விஷயமோ கிடையாது. இதற்குப் பின்னால் ஒரு இன்ட்ரஸ்டிங்கான விஷயம் இருக்கிறது’’ என்று அதிரடியாக ஆரம்பித்தார்.

இணையப் பொட்டலம்!

‘‘வாய்ஸ் கால்களுக்குக் கட்டணமில்லை என்று அறிவித்ததில்தான் ரிலையன்ஸின் சூட்சுமம் அடங்கியிருக்கிறது. இதற்கு 4ஜி VoLTE என்ற தொழில்நுட்பம்தான் மிக முக்கியக் காரணம். தற்போது நடைமுறையில் உள்ள 2ஜி-ல் இருந்து 3ஜி வரை, நாம் பேசும் உரையாடல் அனைத்தும், தனியான ஒரு தொலைத் தொடர்புப் பின்னல் வழியாக ‘சர்க்யூட் ஸ்விட்ச்சிங்’ என்ற முறையில் வேலை செய்தது. ஆனால், 4ஜி VoLTE தொழில்நுட்பத்தில் நாம் பேசுவது அனைத்தும் தகவல்களாக இணைத்து பேக் செய்யப்பட்டு, அதாவது இணையப் பொட்டலமாக (Internet     protocol packets) மாற்றப்பட்டு, ‘பாக்கெட் ஸ்விட்ச்சிங்’ எனும் முறையில் தொலைத் தொடர்பு வலைப் பின்னலில் பயணிக்கப்போகிறது.

இதில் வாடிக்கையாளர்களுக்கு முக்கியமான நன்மை என்னவென்றால், ஹெச்.டி  தரத்தில் பேச முடிவதுதான். மேலும், இணையப் பயன்பாட்டில் வேகமும் பல மடங்கு அதிகரிக்கும். இதனால், தொலைத் தொடர்பு சேவை வழங்கும் நிறுவனங்களுக்கு பேச்சு, இணையம் ஆகிய இரண்டுக்கும் ஒரே வலைப் பின்னல் பயன்படுத்தப் படுவதால், அவர்களின் செலவும் குறைகிறது.

வாய்ஸ் கால் பேசுபவர்களைவிட வாட்ஸ் அப், வைபர் போன்றவை வந்தபின், ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்கள் இவற்றுக்குத் தாவிவிட்டனர். ஆனால், இதில் ஒரு சிக்கல் என்னவென்றால், இவை அனைத்தும் VoIP தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவை. அதாவது, இது பொது இணைய வெளியைப் பயன்படுத்தி உருவாக்கப்படுபவை. இப்போது இவற்றிலும் தரமில்லை என்று புகார்கள் எழுகின்றன. பேசும்போது க்ரீச் சவுண்ட், வெளிநாட்டில் இருந்து பேசும்போது தாமதமான ரிப்ளை, எதிரொலிகள் போன்றவை இருக்கும். இதில் ஸ்கைப்புக்கு மட்டும் விதிவிலக்கு. ஏனென்றால், ஸ்கைப் மட்டும் தனி வலைப் பின்னல் (peer-to-peer network) தொழில்நுட்பம் மூலம் செயல் படுவதால், தரமாக இருக்கிறது. இப்போதுள்ள தொலைத் தொடர்பு நிறுவனங்கள் தனி வலைப் பின்னல் மூலமாகவே சேவை வழங்குவதால், இந்த VoLTE தரம், ஸ்கைப்பைவிட பிரமாதமாக இருக்கும்.

எதற்குக் கட்டணம்?

இதில் இன்னொரு சிக்கல், இதற்கு எப்படிக் கட்டணம் வசூலிப்பது என்பதுதான். இது தகவல் பொட்டலம்தான் என்பதால், மொத்தப் பயன்பாட்டு அடிப்படையிலான கட்டணமா அல்லது பேசியதற்கு மட்டுமான நேர அடிப்படையிலான கட்டணமா என்கிற கேள்வி எழும். பெரும்பாலும், நேர அடிப்படையில் கட்டணம் வசூலிப்பது தொலைத் தொடர்பு நிறுவனங்களுக்கு லாபம் தரக்கூடிய விஷயமல்ல. அதாவது, நீங்கள் 30 விநாடிகளுக்குப் பேசினீர்கள் என்றால், அதற்கான கட்டணம் மட்டுமே வசூலிப்பது. மொத்தப் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டணம் வசூலிப்பதுதான் நிறுவனங்களுக்கு லாபம். நீங்கள் 30 விநாடிகளுக்குப் பேசினாலும், 58 விநாடிகளுக்குப் பேசினாலும் ஒரு நிமிடக் கணக்குதான் எடுத்துக் கொள்ளப்படும். நாம் புத்திசாலித்தனமாக நேர அடிப்படையில் கட்டணம் செலுத்துவதையே விரும்பினோம். உஷாரான நிறுவனங்கள், ‘நேர அடிப்படையில் கட்டணம் கட்டுவதைவிட, மொத்தப் பயன்பாட்டில் நீங்கள் பணம் கட்டுவதுதான் நல்லது. மொத்தப் பயன்பாட்டு அடிப்படையில் டேட்டா பேக்கிலிருந்து இது கழித்துக்கொள்ளப் படும்’ என்று வகுப்புகளும் எடுத்து, அதற்கான சேவையையும் தொடங்கிப் பார்த்தன. சிலர் ‘20 செகண்ட் பேசினால், 20 செகண்டுக்கான பணம்தான் கட்டுவேன்’ என்று பிடிவாதமாக இருக்க, இப்போது அதற்கும் முயற்சி செய்து வருகின்றன.

ரிலையன்ஸ் பொறுப்பல்ல!

ஆகவே, நீங்கள் எவ்வளவு பேசுகிறீர்களோ, அவ்வளவு கிலோபைட்களுக்குத்தான் பணம் கட்டப்போகிறீர்கள். அதற்குத் தேவையான டேட்டாவும், கட்டணமும் நீங்கள் வாங்கிய மொத்த டேட்டாவில் இருந்துதான் எடுக்கப்படும். 3ஜி வரை இருந்த நேர அடிப்படையிலான கட்டணம் இனி கிடையாது. முன்பு மாதிரி 1 ஜிபி டேட்டா வாங்கி, அதை மாதம் முழுவதும் இணையத்துக்கு மட்டும் பயன்படுத்தலாம் என்பதும் இனி இருக்காது. இதில் ரிலையன்ஸுக்கு எந்த நஷ்டமும் கிடையாது. ஆரம்ப காலத்தில் மக்களை இழுப்பதற்காக சில சலுகைகளும், கவர்ச்சியான அறிவிப்புகளும் இருக்கலாம். அதற்குப் பின் ‘பழைய குருடி கதவைத் திறடி’ என்று பழைய கட்டண முறைக்குத் திரும்ப வாய்ப்புண்டு. இது ஏதோ பெருஞ்சலுகை என்று நினைத்தால், அதற்கு ரிலையன்ஸ் பொறுப்பல்ல!’’ என்றார் ஜெகந்நாத் ஸ்ரீனிவாசன்.

ரிலையன்ஸின் இந்த அதிரடியால், பங்குச் சந்தையில் ஏர்டெல்லுக்கு 12 ஆயிரம் கோடியும், ஐடியா செல்லுலார் நிறுவனத்துக்கு ரூ.2,500 கோடியும் சந்தை மதிப்பு குறைந்துள்ளது. இதை ஈடுகட்ட தொலைத் தொடர்பு நிறுவனங்கள் இப்போது லேசாக கண்விழித்தி ருக்கின்றன. தனது மொத்த கட்டணத்தில் 80%  ஆஃபர் தந்து இருப்பவர்களைத் தக்கவைக்க முயற்சிக்கிறது ஏர்டெல். ஒரு ஜிபி 254 ரூபாய் என்று வசூலித்துக் கொண்டிருந்த வோடஃபோன், இப்போதுதான் 265 ரூபாய்க்கு இரண்டு ஜிபி-க்கு முன்னேறியிருக்கிறது. தமிழகம் முழுவதும் 600 டவர்களை நட்டு அடிக்கால் இட்டிருக்கிறது நமது பி.எஸ்.என்.எல். ‘கைப்புள்ள’ வடிவேலு கணக்காக ஏர்டெல் போன்ற நிறுவனங் களை மீம்ஸ் போட்டுக் கலாய்க்கிறார்கள் சோஷியல் மீடியாக்களில். ரிலையன் ஸின் இந்த அதிரடி பற்றியும், பிற நிறுவனங்களின் பரிதாப நிலை பற்றியும் சோஷியல் மீடியா விமர்ச கரும், நெட்வொர்க் ஆய்வாளருமான அராத்துவிடம் கேட்டோம்.

‘‘கொடுக்கும் சேவையைவிட அதிகமாகவே பணத்தைப் பிடுங்குவது தான் ஏர்டெல் பாணி. என்றாலும் ஆரம்ப காலத்தில் ஆர்பிஜி கொள்ளைக் கட்டணம் பிடுங்கி வந்ததை ஒரு முடிவுக்குக் கொண்டு வந்தது ஏர்டெல் தான். ஒரு காலத்தில் கஸ்டமர் கேர் என்றால் ஏர்டெல் என்னும் அளவுக்கு உச்ச ஸ்தானத்தில் இருந்தது. வீட்டுக்கு வீடு ஈஸி பிராட்பேண்ட் தந்ததுடன், பி.எஸ்.என்.எல்-லின் லேண்ட் லைன் அடாவடியை ஒழித்ததும் ஏர்டெல்லே.

அப்படிப்பட்ட ஏர்டெல் ஒருநாள் ஐபிஎம்-முடன் ஒரு டீல் போட்டார்கள். இதன் பிறகுதான் பல குழப்பங்கள் உருவாகத் தொடங்கின.  லேட்டஸ்ட்டாக ‘மை’ பிளான் என ஒன்றை அறிமுகப்படுத்தியது ஏர்டெல். அதை ஆசை ஆசையாக வாங்கியவர்கள் பில் கட்ட முடியாமல், சிம்மை கோயில் உண்டியலில் போட்டுவிட்டார்கள். என்றாலும் இதுவரை ஏர்டெல்லுக்கு வலுவான போட்டியாளர் கிடையாது. இப்போது ஜியோ மூலம் பூதாகரமான போட்டி வந்திருக்கிறது. ரிலையன்ஸ் ஜியோ ரூ.1.50 லட்சம் கோடி முதலீட்டில் தொடங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோடி முதலீடு செய்கிறவர்கள், கஸ்டமர் கேருக்கென சில கோடிகளை ஒதுக்கி இருக்கக்கூடாதா? குறிப்பாக, செப்டம்பர் 3, 4 மற்றும் 5-ம் தேதிகளில் ஜியோ கஸ்டமர் கேர் மொத்தமாக செயல் இழந்துபோனது. இலவச சிம்தானே கொடுக்கிறோம், எதற்கு கஸ்டமர் கேர் என நினைத்துவிட்டார்களோ என்னவோ..?” என்றார் அராத்து.

நமக்கு வரும்  சந்தேகம் : ‘அரசிடம் அனுமதி வாங்கி... அரசுக்கு வரி கட்டி... ரிலையன்ஸ் சாதித்ததை அரசின்  பி.எஸ்.என்.எல் செய்ய முடியாதா? பத்து ஆண்டுகளுக்கு முன்பு 501 ரூபாய் போனில் விட்டதைப் பிடிக்கிற ஆட்டம்தான் ஜியோவோ?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick