டிடிஎஸ் Vs டாக்ஸ் என்ன வித்தியாசம்?

ச.ஸ்ரீராம்​ ரெட்டி ஆடிட்டர்

டிடிஎஸ் (TDS -Tax Deducted at Source) மற்றும் இன்கம் டாக்ஸ் (Income Tax) இந்த இரண்டுக்கும் இடையேயான வித்தியாசம் பலருக்கும்  தெரிவதில்லை. வங்கிகளில் ஃபிக்ஸட் டெபாசிட் போடும்போது டிடிஎஸ் பிடிக்கமாட்டோம் என்று சொன்னால், அந்த முதலீட்டுக்கு வருமான வரி கிடையாது என பலர் நினைக்கிறார்கள். அந்த முதலீட்டு ஆவணத்தை அலுவலகத்தில்  காட்டி, வரி பிடிக்க வேண்டாம் என்று சிலர் சொல்வதும் நடக்கிறது. இன்றைய தேதியில் வருமான வரிச் சலுகை அளிக்கும் முதலீடுகளுக்கு மட்டும்தான் டிடிஎஸ் பிடிக்க மாட்டார்கள்.

வங்கிகளில் ஆர்.டி, டெபாசிட் போட வைப்பதற்காகக்கூட, டிடிஎஸ் பிடிக்க மாட்டோம் என்று சொல்வதும் நடக்கிறது. அதேநேரத்தில், இந்த முதலீடு மீதான வட்டி வருமானத்துக்கு டிடிஎஸ் பிடிக்காமல் இருக்க, அதற்குரிய படிவங்களை நிரப்பிக் கொடுக்கும்படி நிதி ஆண்டு இறுதியில் வங்கியில் கேட்பார்கள்.

இந்தச் சிக்கல்களை எல்லாம் தவிர்க்கவேண்டும் எனில், டிடிஎஸ் மற்றும் டாக்ஸுக்கு இடையே உள்ள வித்தியாசங்களைத் தெளிவாகத் தெரிந்து கொள்வது அவசியம்.

டிடிஎஸ் பிடித்தம் என்பது வருமான வரியின் ஒரு பகுதியே. அதாவது, ஒரு நிறுவனம் மற்ற நிறுவனத்திடமோ அல்லது தனிநபரிடமோ பெற்ற சேவைக்கான பணத்தைச் செலுத்தும்போது ஒரு குறிப்பிட்ட சதவிகித வரியைப் பிடித்தம் செய்ய வேண்டும். பிடித்த பணம், எந்த நிறுவனம் அல்லது யாருக்குக் கொடுக்கப்பட்டதோ, அவரது பான் (PAN) எண்ணின் பேரில் செலுத்தவேண்டும். பான் எண் தந்தால் 10% வரி பிடிப்பார்கள். இல்லை என்றால் 20% பிடிப்பார்கள். 

  டிடிஎஸ் பிடித்தம் செய்யப்பட்டவரின் பான் எண்ணை வங்கிக் கணக்குபோல் வரவு வைக்கப்படும். பின்னர் வரிப் பிடித்தம் செய்யப்பட்டவர் வருமானக் கணக்கு தாக்கல் செய்யும்போது, தான் செலுத்த வேண்டிய சரியான வருமான வரியைக் கணக்கிட்டு, ஏற்கெனவே பிடித்தம் செய்து கணக்கில் உள்ள தொகையைக் கழித்து, மீதமுள்ள தொகையை சுயமதிப்பீட்டு வரியாகக் (Self Assessment Tax) கட்ட வேண்டும்.

மேலும், வருமான வரிக்  கணக்கு தாக்கல் செய்யும்போது கணக்கிடப்பட்ட வரி ஏற்கெனவே பிடித்தம் செய்த  டிடிஎஸ் தொகையைவிட குறைவாக இருப்பின் மீதமுள்ள தொகையைத் திரும்பப் (Refund) பெறலாம்.

சரி, எனக்கு வரி கட்டும் அளவுக்கு வருமானமே இல்லை. என்னிடம் ஏன் வரிப் பிடிக்கிறார்கள் என்று கேட்கிறீர்களா? இதற்கான தீர்வையும் வருமான வரிச் சட்டம் வகுத்திருக்கிறது. அதாவது, தனிநபர் ஒருவர் வங்கியில் வைப்புத் தொகைக்கான வட்டி பெறும்போது படிவம் 15H (மூத்த குடிமக்கள்) 15G (மற்றவர்கள்) சமர்பிப்பதன் மூலம்  வரிப் பிடித்தம் செய்வதில் இருந்து விலக்குப் பெறலாம்.

மாறாக, வரிப் பிடித்தம் செய்யப்பட்டவர் ஒரு நிறுவனமாக இருப்பின் பிரிவு 197-ன் கீழ் சம்பத்தப்பட்ட வருமான வரி அதிகாரியிடம் (Jurisdictional Assessing Officer) இருந்து சான்றிதழ் பெற்றுத்தரும்பட்சத்தில், வரிப் பிடித்தம் செய்யாமலோ அல்லது குறைந்த சதவிகிதம் வரிப் பிடித்தம் செய்யும்படியோ தங்களுக்குப் பணம் செலுத்தும் நிறுவனத்திடம் கேட்க முடியும்.

ஆகவே, ஒருவர் தன் வருமானத்தின் மீது ஏற்கெனவே வரிப் பிடித்தம் செய்யப்பட்டதால் தனக்குக் கூடுதலாக வரிக் கட்டும் பொறுப்பு இல்லை என்றோ அல்லது கணக்குத் தாக்கல் செய்ய வேண்டியதில்லை என்றோ கருத முடியாது.  சரியான வரியைக் கணக்கிட்டு கணக்குத் தாக்கல் செய்யவேண்டிய கடமை ஒவ்வொருவருக்கும் நிச்சயம் உண்டு.

டிடிஎஸ் என்பது ஒருவர் எந்த வருமான வரம்பில் வருகிறார் என்பது தெரியாத நிலையில் பிடிக்கப்படும் குறைந்தபட்ச வரி ஆகும். யாரும் வரி ஏய்ப்பு செய்யக்கூடாது என்பதற்காகவே இந்த நடைமுறையைக் கொண்டு வந்திருக்கிறார்கள்.  இப்போது புரிந்திருக்குமே இரண்டுக்கும் இடையே  உள்ள வித்தியாசம் என்னவென்று!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்