ஷேர்லக்: சரிந்த YES BANK & MINDTREE

முக்கியமான வேலையாக வெளியூர் செல்கிறேன். போன் மூலமாகவே பேசிவிடுவோமே என காலையிலேயே வாட்ஸ் அப்பில் தெரிவித்திருந்தார் ஷேர்லக். யெஸ் என்று பதிலை அனுப்பிவிட்டு, சரியாக 6.30 மணிக்கு அவருக்கு போன் செய்தோம். பயணத்துக்குத் தயாராகும் வேலையைக் கொஞ்சம் ஓரங்கட்டி விட்டு, நம் கேள்விகளுக்கு பதில் சொல்ல ஆரம்பித்தார் அவர்.

‘‘சென்செக்ஸ் 29,000 புள்ளிகளுக்கு மேலே சென்றுவிட்டு, கீழே இறங்கத் தொடங்கி இருக்கிறதே’’ என்று நம் முதல் கேள்வியைக் கேட்டோம்.

“வியாழக்கிழமை அன்று சென்செக்ஸ் 29067 புள்ளிகளுக்கு உயர்ந்தது. இது கடந்த 18 மாதங்களில் இல்லாத அளவுக்கு அதிகம். வழக்கமாக சந்தை உச்சத்தில் இருக்கும்போது சிறு முதலீட்டாளர்கள் பல தவறுகளைச் செய்கிறார்கள். ஒன்றிரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பங்குகளை வாங்கியவர்கள், இப்போது ஓரளவு லாபத்தில் இருப்பதால், கிடைத்த லாபத்தை வெளியே எடுக்கத் துடிக்கிறார்கள். இது மிகவும் தவறான முடிவு. நீண்ட காலத்தில் சந்தை உயரும் என்கிற நிலையில், இப்போது ஏன் பங்குகளை விற்பானேன்?

அதேபோல, சந்தை உச்சத்தில் இருக்கும் இன்றைய நிலையில், தங்கம் அல்லது வெள்ளி போன்றவற்றை விற்று, முதலீடு செய்யக் கூடாது. அப்படி செய்தால், தரக் குறைவான பங்குகளை அவற்றின் கவர்ச்சிகரமான மதிப்பீடுகளால் வாங்கும் சூழ்நிலை ஏற்படும். எனவே, பங்குகளை வாங்குவதாக இருந்தாலும் சரி, விற்பதாக இருந்தாலும் சரி, சந்தை உச்சத்தில் இருக்கும்போது சிறு முதலீட்டாளர்கள் நிதானமாகச் செயல்படுவது அவசியம்’’ என்று ஆலோசனை தந்தார் ஷேர்லக்.

“மைண்ட் ட்ரீ பங்கின் விலை திடீரென குறைய ஆரம்பித்திருக்கிறதே?” என்று கேட்டோம்.

‘‘நடப்பு இரண்டாம் காலாண்டில் அதன் வருமானம் குறையும் என மைண்ட் ட்ரீ அறிவித்ததை அடுத்து பங்கின் விலை இறங்க ஆரம்பித்திருக்கிறது. ஃபாரக்ஸ் இழப்பு மற்றும் சில புராஜெக்ட்டுகள் ரத்தானதன் மூலம் அதன் வருமானம் குறையும் என எதிர்பார்க்கப்படுவதால், இதன் பங்கு விலை குறைகிறது” என்றார்.

“யெஸ் பேங்க் பங்கின் விலை திடீர் இறக்கம் கண்டிருக்கிறதே, என்ன காரணம்?’’ என்றோம்.

‘‘முன்னணி தனியார் வங்கியான யெஸ் பேங்க், 100 கோடி டாலர் மதிப்புள்ள தனது பங்குகளை தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்கு (கியூஐபி) விற்க முடிவெடுத்து, விற்பனையையும் செய்யத் தொடங்கியது. இரு தினங்கள் நடந்த விற்பனையில் அமோக ஆதரவு கிடைத்தது. இந்த நிலையில், இந்த பங்கு விலையில் வழக்கத்துக்கு மாறாக அதிக ஏற்ற இறக்கம் காணப்பட்டதால், பங்கின் விலை இறங்கத் தொடங்கியது. இந்தப் பங்கின் விலை சில நாட்களில் சுமார் 15 சதவிகிதத்துக்கு மேல் குறைந்தது. இந்த நிலையில் தகுதி வாய்ந்த நிறுவனங்களுக்குப் பங்குகள் ஒதுக்கித் தருவதை யெஸ் பேங்க் நிறுத்தியது. அடுத்து வரும் காலாண்டுகளில் இந்த வங்கியின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு உள்ளதால், பங்கின் விலை குறைவது தடுக்கப்படலாம் என்று எதிர்பார்க்கிறார்கள்’’ என்றார். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்