ஈக்விட்டி ஃபண்டில் எஸ்ஐபி மூலம் எவ்வளவு முதலீடு செய்யலாம்?

கேள்வி - பதில்

? ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் எஸ்ஐபி மூலம் எவ்வளவு தொகையை முதலீடு செய்யலாம்?

சுரேஷ், மதுரை

ச.இராமலிங்கம், நிதி ஆலோசகர், சென்னை.

‘‘ஒருவருக்கு என்ன வயதோ அந்த வயதை 100-லிருந்து கழித்துக் கிடைக்கும் சதவிகித தொகையை (அவரின் மொத்த முதலீட்டில்) ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். உதாரணத்துக்கு, ஒருவருக்கு 30 வயது என்றால் (100-30), அவரது முதலீட்டு தொகையில் 70 சதவிகிதத்தை பங்கு அல்லது ஈக்விட்டி சார்ந்த மியூச்சுவல் ஃபண்டில் நீண்ட கால முதலீடாக மேற்கொள்ளலாம். உதாரணமாக, ஒருவர் 10,000 ரூபாயை மாதம்தோறும் ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங் களில் முதலீடு செய்ய நினைக்கிறார் எனில், அதில் 7,000 ரூபாயை பங்கு அல்லது ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்யலாம். மீதி 3,000 ரூபாயை (30%) பிபிஎஃப், கடன் சார்ந்த மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மேற்கொள்ளலாம்.”

?வேதாந்தா நிறுவனப் பங்கின் விலை ரூ.174-180-ஆக இருக்கிறது. இதை வாங்கலாமா?

பொன்னுசாமி, சிவகாசி.

ரெஜி தாமஸ், துணைத் தலைவர், கார்வி ஸ்டாக் புரோக்கிங்

“நிஃப்டி இண்டெக்ஸில் கடந்த 24 மாதங்களாக வேதாந்தா பங்கின் செயல் பாடு சரியாக இல்லை. ரூ.58 வரை இறங்கி வர்த்தகமான வேதாந்தா பங்கு, தற்போது ரூ.155 முதல் ரூ.180 இடையே வர்த்தகமாகி வருகிறது. 2016 ஜூன் காலாண்டில், இந்த நிறுவனத்தின் வருமானம் முந்தைய காலாண்டைவிட 50 சதவிகிதம் சரிந்து, ரூ.120 கோடியாகக் குறைந்து இருந்தது.

எனினும் செயில், ஜிண்டால் ஸ்டீல் மற்றும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பிடுகையில், வேதாந்தா நிறுவனம் குறைந்த அளவிலேயே வருவாய் இழப்பைச் சந்தித்துள்ளது. இதுமட்டுமின்றி, செயில் மற்றும் ஜிண்டால் ஸ்டீலைவிட சிறப்பாகவே செயல்பட்டுள்ளது.
தற்போதைய விலை வரம்பில், வேதாந்தா பங்கு அதன் 52 வார உச்சத்தில் உள்ளது.  வேதாந்தா - கெய்ர்ன் இணைப்புக்குப் பிறகு, வேதாந்தா பங்கின் விலை அதிகரித்து காணப்படுகிறது. டெக்னிக்கல்படி, வேதாந்தா பங்கின் விலை ரூ.180 என்பது 50% ரீடிரேஸ்மென்ட் லெவலில் இருக்கிறது. இந்த நிலையில், வேதாந்தா பங்கு ரூ.180-க்கு மேல் நிலைபெற்று வர்த்தகமாகும்பட்சத்தில் ரூ.205 வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.”

?எங்களிடம் ரூ.20 லட்சம் மதிப்புடைய மூதாதையருடைய தங்கம், வைர நகைகள் உள்ளன. இதை விற்று வீடு வாங்கத் திட்டமிட்டுள்ளோம். இதற்கான வருமான வரித் தாக்கங்கள் என்ன?

சுரேஷ், மதுரை

வைத்தீஸ்வரன், வரி நிபுணர்.

‘‘நீங்கள் நகைக் கடை ஏதும் வைத்திருக்கிறீர்களா அல்லது தனிநபரா என்பது தெரியவில்லை.  உங்களுடைய நகை மூலதனச் சொத்து. தனிப்பட்ட நபர் என்ற முறையில் இப்போது நகையை விற்கிறீர்கள் எனில், மூலதன ஆதாய வரி செலுத்த வேண்டியிருக்கும். மூதாதையர் நகை என்று சொல்லப்படுவதால், மூன்று வருடத்துக்கு மேல் நகை கையில் இருப்பதால், நீண்ட கால மூலதன ஆதாய வரியாக 20 சதவிகிதம் வருமான வரி செலுத்த வேண்டியிருக்கும். இதுவே நீங்கள் நகைக் கடைக்காராக இருந்தால், வாட் வரி செலுத்த வேண்டியிருக்கும். அதே நேரத்தில் இந்தத் தொகையைக்கொண்டு வீடு வாங்கும்போது வரிச் சலுகை எதுவும் கிடைக்காது.”

?நான் எஸ்ஐபி முறையில் மாதம் 6,000 ரூபாய் வீதம் பத்து வருடங்களுக்கு டிஎஸ்பி ப்ளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்டில் முதலீடு செய்ய இருக்கிறேன். இந்த ஃபண்டில் நல்ல வருமானம் கிடைக்குமா?


எம்.பலராமன், சென்னை


எம்.கண்ணன், முதலீட்டு ஆலோசகர்.

‘‘டிஎஸ்பி ப்ளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்டில் ரிஸ்க் அதிகம். அதே நேரத்தில், அதிக வருமானம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. நீங்கள் ஏற்கெனவே டைவர்சிஃபைட் ஈக்விட்டி திட்டங்களில் முதலீடு செய்திருந்தால், டிஎஸ்பி ப்ளாக்ராக் மைக்ரோ கேப் ஃபண்டில் எஸ்ஐபி முறையில் மாதம் 6,000 வீதம் பத்து வருடங்களுக்கு முதலீடு செய்யலாம். முதல் தடவை முதலீடு செய்பவராக இருந்தால், டைவர்சிஃபைட் பங்கு திட்டத்தில் பிர்லா சன் லைஃப் ஈக்விட்டி அல்லது ஃப்ராங்க்ளின் ஹை குரோத் ஃபண்டில் முதலீடு செய்யலாம்.’’

?தான செட்டில்மென்ட்டாக (Gift Deed) என் அப்பாவிடம் இருந்து ஏற்கெனவே ஒரு நிலத்தை பரிசாகப் பெற்றிருக்கிறேன். மீண்டும் வேறு ஒரு நிலத்தை நான் அப்பாவிடமிருந்து தான செட்டில்மென்ட் மூலம் பெற முடியுமா?

ராமகிருஷ்ணன்

வி.எஸ்.சுரேஷ், வழக்கறிஞர்


‘‘ஒருமுறை செய்த தான செட்டில்மென்ட்டினை மறுபடி யும் பயன்படுத்த முடியாது. வேறு ஒரு சொத்தை தான செட்டில் மென்ட் செய்ய தடை இல்லை.”

?ரிஸ்க் இல்லாமல், குறுகிய கால முதலீட்டில் வருமான வரி தவிர்க்க என்ன வழி?

ரமேஷ், கரூர்


பாரதிதாசன், நிதி ஆலோசகர்.

“ரிஸ்க்கைத் தவிர்த்து, குறுகிய காலத்தில் வருமான வரியைச் சேமிக்க வேண்டும் எனில், குறைந்தது மூன்று வருடம் காத்திருக்க வேண்டும். லிக்விட் ஃபண்ட் அல்லது டெப்ட் ஃபண்டில் முதலீடு செய்து மூன்று வருடங்களுக்கு முன்பே எடுத்தால் குறுகிய கால மூலதன ஆதாய வரி கட்ட வேண்டும் என்பதால் வருமான வரியைச் சேமிக்க முடியாது. மூன்று வருடங்கள் கழித்து பணத்தை எடுத்தால் நீண்ட கால மூலதன ஆதாய வரி கணக்கிடப்படும். வருமானத்தில் பணவீக்க சரிகட்டல் (Indexation) செய்தபிறகு 20% வரி கட்ட வேண்டியிருக்கும். அதே நேரத்தில், இந்த ஃபண்டுகளில் டிவிடெண்ட் ஆப்ஷனை தேர்ந்தெடுக்கும் பட்சத்தில் கிடைக்கும் டிவிடெண்டுக்கு வரி கட்ட வேண்டியதில்லை.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்