வியாபாரச் சிறுகதை! - எதுவரை முயற்சி..?

பார்த்தசாரதி ரெங்கராஜ்

சந்தகுமார், கொஞ்சம் தொய்வடைந் திருந்தான் என்றுதான் சொல்ல வேண்டும். அலுவலகம் செல்லும் வழியில் இருக்கும் ஒரு பூங்கா அருகில் தனது காரை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த ஒரு கல் நாற்காலியில் அமர்ந்தான்.

வயது 35 என்று சொல்லமுடியாத அளவுக்கு  இளமையாக இருந்தான். வளைந்த புருவங்கள் அவனிடம் ஒரு சிறிய பெண்மையைக் காட்டியது. அவனுடைய இப்போதைய பிரச்னை தனது அலுவலகத்தில் அமர்ந்திருக்கும் வங்கி ஊழியர்களைச் சந்திப்பதில்தான். உடனே உங்கள் மனதில் ஓடுவது என்னவென்று எனக்குப் புரிகிறது.ஆனால், நீங்கள் நினைப்பதல்ல இது.

அவன் வாங்கிய கடனை வசூலிக்க வரவில்லை அவர்கள்; இன்னும் கொஞ்சம் அதிகமாக கடன் தந்துவிட்டுப் போக வந்திருக்கின்றனர்.

வசந்தகுமார் சாதாரண ஆள் கிடையாது. கோடீஸ்வரர் ரங்கசாமி நாயுடுவின் மாப்பிள்ளை. கோயம்புத்தூரில் இவர்களைத் தெரியாத தொழிலதிபர்களே கிடையாது. ரங்கசாமி நாயுடுவுக்கு ஆண் வாரிசு இல்லாததால் அவரின் ஒரே பெண்ணின் மாப்பிள்ளை என்பதால், அனைத்துத் தொழில் மற்றும் சொத்துக்களைப் பராமரித்து வருகிறான் வசந்தகுமார்.

குறுகிய காலத்தில் பெயர் வாங்கிய அவனுக்குச் சில நாட்களாகவே ஒரு சிறிய சிக்கல் ஒன்று மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. பஞ்சு மில், கார்மெண்ட் தொழிற்சாலை எல்லாமே நன்றாகவே நடத்தி்வரும் அவனுக்குச் சிக்கல் வந்தது அவனது சாயத் தொழிற்சாலையில்தான்.
கடந்த ஐந்து வருடமாக அவன் நடத்திக்கொண்டு இருக்கிறான். ஆனால், இன்னும் அவனுக்குப் பிரேக் ஈவன், அதாவது செலவைச் சரிக்கட்டும் அளவுக்கு வரவு வரவில்லை. தான் ஒரு டெக்ஸ்டைல் இன்ஜினீயர் என்பதால், மிக ஆசையுடன் அவன் ஆரம்பித்த தொழில். முதலில் உரிமம் வாங்குவதில் உருவான பிரச்னை, பின்னர் ஒன்றன் பின் ஒன்றாக அவனைத் துரத்த ஆரம்பித்தது. போட்ட மூலதனத்தை எண்ணி, எப்படியும் வெற்றி காணலாம் என்று முழு நம்பிக்கையுடன் போராடி வருகிறான்.

சமீபத்தில் அரசு வெளியிட்ட ஒரு குறிப்பில், சுற்றுச்சூழல் மாசுபடுவதைச் சுட்டிக் காட்டி, கழிவு நீர் சுத்திகரிப்பைக் கட்டாயமாக்கி இருந்தார்கள்.

வசந்தகுமார் ஏற்கெனவே இதைச் செய்திருந்தபோதிலும், இதைச் சோதிக்க வந்த அதிகாரிகள் மேலும் சில இயந்திரங்களை உபயோகிக்க அறிவுறுத்தியிருந்தனர்.

இதுவரை செய்த செலவுகள், இதற்கு மேல் ஆகப்போகும் செலவுகள், தொழிலில் இதுவரை லாபம் பார்க்க முடியாத நிலை, அத்தனைக்கும் மேல் இது அவனுடைய சொந்த முயற்சியில் தொடங்கியது என்று பல எண்ணங்கள் அவன் மனதில் ஓடிக்கொண்டிருந்தன.
கைக்கடிகாரத்தைப் பார்த்தவுடன் மீண்டும் சுய நினைவுக்கு வந்தவன்போல், சற்று நேராக அமர்ந்தான் வசந்தகுமார். ஒரு பெருமூச்சுடன் சரி, இவ்வளவு செலவு செய்தாயிற்று, இன்னுமொரு லோன் வாங்கி இதையும் செய்துதான் பார்ப்போம். அதற்காக அப்படியே விட்டுவிட முடியாதல்லவா என்ற சிந்தனையுடன் எழ முயன்றவனை, பின்னால் இருந்து வந்த பேச்சுக்குரல்கள் ஈர்த்தது.

“நண்பா, சொன்னா கேளுடா... இந்த நேரத்தில இப்படி முடிவு எடுத்தால் உன்னை ஒரு முட்டாள்னுதான் சொல்வாங்க” என்றது முதல் குரல்.

“எது முட்டாள்தனம். என்னால முடியாதுன்னு தெரிஞ்ச பிறகும் நான் இன்ஜினீயரிங் படிக்கிறது தான் முட்டாள்தனம்” என்றது அடுத்தக் குரல்.

இப்போது முதல் குரல்,  “உனக்கு வைரம் தேடுனவன் கதை தெரியுமா? சொல்றேன் கேளு.

ஒரு நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த ரத்தின வியாபாரி கொஞ்சம் கஷ்டத்துல இருந்தாராம். அவரோட கனவுல வந்த லட்சுமி சொல்லிச்சாம் நான் சொல்ற இடத்துல தோண்டினா வைரம் கெடைக்கும்ன்னு.

அடுத்த நாளே அந்த வியாபாரி தோண்ட ஆரம்பிச்சானாம். பல நாட்கள் தோண்டியும் ஒண்ணும் கெடைக்கலயாம். ஒரு நாள் பொறுமை இழந்து, அவன் பழைய தொழிலுக்கே போயிடலாம் என்று கிளம்பின வேளையில, அங்க வந்த பிச்சைக்காரன் ஒருத்தன், ஏன் இவ்வளவு தூரம் தோண்டிட்டு கிளம்புறீங்கன்னு கேட்டதுக்கு, ரத்தின வியாபாரி, இங்க வைரம் கெடைக்கும்னு வந்த கனவை நம்பி மோசம் போயிட்டேன்னு விரக்தியில மண்வெட்டியைத் தூக்கி எறிந்துவிட்டு கிளம்பி விட்டாராம்.

அந்தப் பிச்சைக்காரன் சும்மா இருக்காமல் மேலும் இரண்டடி தோண்டியபோது ஒரு மலை அளவு வைரக்குவியல் கிடைத்ததாம்.

இரண்டு வருடம் இன்ஜினீயரிங் படித்துவிட்டு, இப்போது வேண்டாம் என்று நீ சொல்வது, அந்த ரத்தின வியாபாரி செய்தது போலத்தானே உள்ளது. இன்னும்  இரண்டு வருடம் படித்தால், உன் வாழ்க்கையே மாறும் வாய்ப்பிருக்கிறது நண்பா” என்று முடித்தது அந்தக் குரல்.

இதைக் கேட்ட வசந்தகுமாருக்கும் அதுதான் சரியாகப்பட்டது. முயற்சியைத் தளரவிடாது மீண்டும் தனது சாயத் தொழிலை புதுப் பொலிவுடன் எடுத்துச்செய்ய வேண்டும் என்ற எண்ணம் அவன் மனதில் வேரூன்றியது. நல்ல வேலை, அந்த ரத்தின வியாபாரி போல முடிவெடுக்க இருந்தோமே; இந்த இளைஞனின் கதையைக் கேட்டதால் தப்பித்தோம் என்று மனதில் நினைத்துக்கொண்டான். அவனது நடையில் ஒரு நம்பிக்கை தெரிந்தது. அவன் அவனது காரை அடையும் நேரத்துக்குள், இந்த இரு இளைஞர்களின் பேச்சு எவ்வாறு முடிந்தது என்று நாம் கேட்போமா?

“நண்பா, உன்னோட கதை நல்லா இருந்துச்சு. ஆனா எனக்கொரு சந்தேகம். வைரம் 50 அடிக்கு பதிலா 52 அடியில் இருந்துச்சு. ஒரு வேளை அது இல்லாம போயிருந்துச்சுன்னா..? ரெண்டு அடியில வைரம் கெடைக்கலன்னா பிச்சைக்காரன் அதுக்கு மேல தோண்டியிருப்பானா..?

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்