முப்பதில் வீடு... நாற்பதில் கார்!

வி.கிருஷ்ணதாசன், மண்டல மேலாளர், டிரஸ்ட் கேப்பிட்டல் சர்வீசஸ்

சொந்தமாக ஒரு வீடு, ஒரு கார் வாங்க வேண்டும் என்பது இன்று பெரும்பாலான குடும்பங்களின் தவிர்க்க முடியாத ஆசை மற்றும் கனவாக இருக்கிறது. பலர் சரியான நிதித் திட்டமிடுதல் இல்லாமல் வீட்டையும் காரையும் வாங்கிவிடுகிறார்கள். இதனால் வாங்குகிற சம்பளத்தில் பெரும்பகுதியை இஎம்ஐ-ஆக செலுத்திவிட்டு, மிச்சசொச்ச பணத்தில் வாழ்க்கையை நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார்கள். கார், வீடு - இந்த இரண்டில் எந்த ஆசைக்கு முன்னுரிமை தருவது என்கிற கேள்விக்கு முதலில் தெளிவான பதிலைத் தெரிந்துகொண்டுவிட்டால், இனி யாரும் சிக்கலில் சிக்கித் தவிக்கவேண்டிய அவசியம் இருக்காது.

ஒவ்வொருவரும் அவரவருடைய தனிப்பட்ட  வாழ்க்கை முறை மற்றும் பொருளாதார வசதியின் அடிப்படையில் முதலில் வீடா அல்லது காரா என்கிற முடிவினை எடுக்கலாம்  என்றாலும், இந்த இரண்டில் எது முதலில் என்பதைத் தீர்மானிக்க சில வரைமுறைகளையும் உத்திகளையும் பின்பற்றினால் சிக்கலைத் தவிர்க்கலாம்.

சொந்த வீட்டுக்கான திட்டம்!

உங்கள் நிதி இலக்குகளை விரைவில் அடையவும் ஓர் ஆரோக்கியமான நிதித் திட்டமிடுதலுக்கும் சொந்த வீட்டை முதலில் வாங்குவதே சரியான முடிவாக இருக்கும் என்பது நிதித் துறை நிபுணர்களின் ஏகோபித்த கருத்து. சொந்தமாக வீடு வாங்கும்போது குறைந்தபட்சம் அந்த வீட்டின் மதிப்பில் 20 சதவிகிதத்தை முன்பணமாக (down payment) நீங்கள் உங்கள் கையிலிருந்து செலுத்த வேண்டியிருக்கும். மீதி 80 சதவிகித மதிப்புக்கான தொகையை வங்கிகள் மற்றும் வீட்டு வசதி நிறுவனங்கள் கடனாக வழங்குகின்றன. இதனால், நீங்கள் செலுத்தவேண்டிய 20 சதவிகிதத்  தொகையை நீங்கள் முன்பே திட்டமிட்டுச் சேமிக்க வேண்டும்.

உதாரணமாக, நீங்கள் ரூ.50 லட்சம் மதிப்புக் கொண்ட வீட்டை வாங்க விரும்பினால் அதன் 20 சதவிகிதமான ரூ.10 லட்சத்தை நீங்கள் முன்கூட்டியே சேமித்து வைத்திருப்பது அவசியம். ஒருவர் சம்பாதிக்கத் தொடங்கிய காலத்திலேயே இதற்கென சேமிக்கத் தொடங்கினால்,  எளிதில் இந்த முன்பணத்தைச் சேர்க்க முடியும்.

எப்போது வாங்கலாம்..?

ஒருவர் 25 வயதில் முன்பணத்துக்கான தொகையை  சேர்க்கத் தொடங்கினால், முப்பதுகளின் ஆரம்பத்தில் தேவைப்படும் பணத்தைச் சேர்த்துவிட முடியும். முப்பதுகளின் ஆரம்பத்தில் வீட்டுக் கடன் வாங்கினால், ஐம்பது வயதை நெருங்கும் தருவாயில் அந்தக் கடனை எளிதாகக் கட்டி முடித்துவிட முடியும். ஒருவரது சம்பளம் ஆண்டுக்கு 8-லிருந்து 10% வரை அதிகரிக்கும் என்பதால், எந்த பிரச்னையும் இல்லாமல் ஒருவர் அந்தக் கடனைக் கட்ட முடியும்.

வரிச் சலுகைகள்!

வருமான வரி சலுகை பெறுவதற்கென்று இருக்கும் வாய்ப்புகளில், அதிகபட்சமான சலுகையைத் தருவது வீட்டுக் கடனே. வீட்டுக் கடனைத் திரும்பச் செலுத்தும்போது மாதத் தவணையிலிருந்து (EMI) அசலுக்காக எடுக்கப்படும் தொகைக்கு ஒரு நிதி ஆண்டுக்கு ரூ.1.5 லட்சம் வரை 80சி-யின்படி வருமான வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும். மேலும், மாதத் தவணையிலிருந்து வட்டிக்காக எடுக்கப்படும் தொகைக்கு, நீங்களே அந்த வீட்டில் வசிக்கும்பட்சத்தில், ஒரு நிதி ஆண்டுக்கு ரூ.2 லட்சம் வரை பிரிவு 24-ன்படி வரி விலக்கு கிடைக்கும்.

நீங்கள் வாங்கிய வீட்டை வாடகைக்குக் கொடுத்திருந்தால், எந்த வரம்பும் இன்றி மாதத் தவணையிலிருந்து வட்டிக்காக எடுக்கப்படும் மொத்தத் தொகைக்கும் வரி விலக்கு கிடைக்கும்.

2016-ம் ஆண்டு பட்ஜெட் அறிக்கையின்படி, முதல்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு கூடுதலாக வரிச் சலுகை கிடைக்கும். இதன்படி, முதல் முறையாக வீடு வாங்கும் நபருக்கு கூடுதலாக 80இஇ பிரிவின் கீழ் மேலும் 50,000 ரூபாய்க்கு வரி விலக்குக் கிடைக்கும்.

இதற்கு, வாங்கும் வீட்டின் விலை ரூபாய் 50 லட்சத்துக்கு கீழ் இருந்து வாங்கும் கடன் தொகை ரூபாய் 35 லட்சத்துக்கு கீழ் இருக்கவேண்டும்.  கடனுக்கான ஒப்புதல் ஏப்ரல் 1, 2016-க்கும் மார்ச் 31, 2017-க்கு இடையில் கிடைத்திருக்க வேண்டும் என்பது அடிப்படை நிபந்தனைகள் ஆகும்.
வீட்டுக் கடன் என்பது பொதுவாகவே நீண்ட கால அளவுக்கு எடுக்கப்படுவதால், அந்தக் கடன் சுமை ஓய்வுபெறும் வயது வரை நீளாமல் இருக்க, சிறிய வயதில் கடன் வாங்குவது சிறந்தது. வாழ்வில் அடுத்த பெரிய செலவுகளான குழந்தைகளின் மேற்படிப்பு மற்றும் திருமணம் போன்றவை பணி ஓய்வை நெருங்கும் தருவாயில் இருக்கக்கூடும் என்பதால், வீட்டுக் கடன் சுமையை முன்னமே இறக்கி வைத்துவிட்டால் பின்னர் இத்தகைய செலவுகளுக்காகவும் ஓய்வுக்கால தேவைகளுக் காகவும் சேமிக்க கால அவகாசம் கிடைக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்