ஈஸி இஎம்ஐ... இப்போது சிக்கல்!

பிரம்மா

ந்தக் காலத்தில், விரும்பும் பொருளை உடனடியாக வாங்கும் பழக்கம் மற்றும் வசதி அதிகரித்து வருகிறது. மக்களின் வாங்கும் திறன் அதிகரித்ததற்கு வங்கிகள், நிதி நிறுவனங்கள் முக்கிய காரணமாக விளங்குகின்றன. சுலபத் தவணை முறையில் மக்களுக்குத் தேவையான கடனை வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. பல நிறுவனங்கள் இந்த வேலையைச் சரியாக செய்துவந்தாலும் சில நிறுவனங்கள் சொன்னபடி நடக்காமல் போவதினால் பெரும் பிரச்னை உருவாகிவிடுகிறது. அப்படி ஒரு பிரச்னை தற்போது பூதாகரமாக கிளம்பி உள்ளது.

சென்னை ராயபுரத்தை சேர்த்த முகம்மது என்பவர் ஐந்து மாதங்களுக்கு முன்பு அந்தப் பகுதியில் உள்ள தனியார் கடை ஒன்றில் ஏ.சி வாங்கச் சென்றார். அப்போது பஜாஜ் ஃபைனான்ஸ்  மூலம் சுலபத் தவணையில் ஏ.சி வாங்கலாம் என்று கடைக்காரர் சொல்ல,  முகம்மதுவும் சரி என ஒப்புக்கொண்டு அனைத்து ஆவணங்களையும் தந்தார். அவருக்கு சில நாட்கள் கழித்துக் கடன் கிடைத்தது. ஆனால், அவர் தேர்வு செய்த ஏ.சி.யை வழங்காமல் வேறு நிறுவனத்தைச் சேர்ந்த ஏ.சிதான் அவருக்குத் தரமுடியும்   எனவும் அதையும் குறிப்பிட்ட நாளில் வழங்க இயலாது என்றும் சொல்ல,  தனக்கு கடனே வேண்டாம் என்று சொல்லிவிட்டார் முகம்மது.

கடன் பெறுவதற்கான  தான் கொடுத்த ஆவணங் களைத் திருப்பித் தருமாறு அந்த தனியார் கடைக்காரர் களிடம் கேட்டுள்ளார். அவர்களும் ஆவணங்கள் அனைத்தும் திருப்பித் தந்துள்ளனர்.

மேற்கொண்டு நடந்ததை முகம்மது நம்மிடம் சொன்னார். ‘‘நான் ஆவணங்களைத் திரும்ப  வாங்கிய இரண்டு மாதங் களுக்குப்பின், கடனுக்கான இஎம்ஐயைக் கட்டச் சொல்லி எஸ்எம்எஸ் வந்தது. உடனடியாக கடைக்குச் சென்று, வாங்காத கடனைக் கட்டச் சொல்லி எஸ்எம்எஸ் வந்து இருக்கே என்று கேட்டேன். ‘அது எல்லாம் ஒண்ணும் பிரச்னையில்லை. நாங்க சொல்லிடுறோம். இனி மேல் எஸ்எம்எஸ் வராது’ என்று சொன்னார்கள். இதுகுறித்து பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் மீது காவல் நிலையத்்தில் புகார் தந்தேன். ஆனாலும்,  இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை.

அப்புறம் விசாரிச்சு பார்த்ததுலதான் தெரிஞ்சது, என் போல பல பேர் பாதிக்கப்பட்டு இருக்காங்க. கடைகளும், தனியார் நிதி நிறுவனங்களும் கூட்டுச் சேர்ந்துக்கிட்டு யார் பேருல வேணும்னாலும் கடன் போட்டு வியாபாரம் பண்ணிக்கிட்டு இருக்காங்க. நியாயம் கேட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்து இருக்கேன்” என்றார்.

முகம்மதுவின் வழக்கறிஞர் வி.எஸ். சுரேஷிடம் பேசினோம். ‘‘இதுபோன்ற பிரச்னைகளை தற்போது பலரும் சந்தித்து வருகின்றனர். வங்கி அல்லது நிதி நிறுவனத்தில் கடன் பெறுவதற்கான வழிகளை இப்போது சுலபமாக்கி உள்ளனர். இரண்டு செக் லீஃப் கொடுத்தாலே போதும், டாக்குமென்ட்டுகளை அவர்களே தயாரித்துக் கொள்கின்றனர்.  இதனால் நுகர்வோர்தான் அதிகம் பாதிக்கப்படுகின்றனர்.

வாங்காத கடனை வட்டியுடன் திரும்பக் கட்டச் சொல்லி நிதி நிறுவனங்களில் இருந்து வற்புறுத்துகின்றனர். கட்ட மறுப்பவர்களை பிளாக் லிஸ்ட்டில் வைப்பதனால் வேறு வங்கிகளில் கடன் பெற முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது. நாம் வாங்காத கடனுக்கு வட்டி கட்ட சொல்வது எந்த விதத்தில் சரி? இந்தப் புகார் குறித்து சம்பந்தபட்ட கடை மற்றும் நிதி நிறுவனத்திடம் விளக்கம் கேட்க தொடர்புகொண்டோம். முறையான பதில் அளிக்க வில்லை” என்றார். 

தனியார் வங்கிகள், நிதி நிறுவனங்கள் தங்களின் கடன் இலக்கை அடைவதற்காக கடன் பரிவர்த்தனைகள் குறித்து அறியாத மக்களை பலிகடாக்களாக மாற்றுவது அதிகரித்து வருகிறது. இதுகுறித்து நீதிமன்றங்கள் பலமுறை அறிவுறுத்தியும் இதுபோன்ற முறைகேடுகள் தொடரவே  செய்கின்றன. இஎம்ஐயில் பொருட்களை வாங்கும்போது இனி நாம்தான் உஷாராக இருக்கவேண்டும்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்