ஷேர்லக்: 1000 பங்குகள் 52 வார உச்ச விலையில்!

“மகிழ்ச்சி’’ என்றபடி கபாலி ரஜினி  மாதிரி நம் கேபினுக்குள் நுழைந்தார் ஷேர்லக். இன்று சந்தை உயர்ந்ததைப் பற்றி சொல்ல வருகிறார் என்று புரிந்து கொண்டோம். அடுத்த வாரமும் இந்த ஏற்றம் தொடருமா என்பது நாம் கேட்ட கேள்வி.

‘‘இந்த வாரம் நடைபெற உள்ள அமெரிக்க மத்திய வங்கி கூட்டத்தில் வட்டி விகிதம் எல்லாம் உயர்த்தப்படாது. இந்த ஆண்டு அமெரிக்காவில் அதிபர் தேர்தல் என்பதால், வட்டி விகிதம் உயர்த்தப்பட வாய்ப்பில்லை. ஒருவேளை கால் பர்சன்ட் உயர்த்தினாலும் அதனால் நம் சந்தைக்குப் பெரிய பாதிப்பில்லை என்கிறார்கள் நிபுணர்கள். எனவே, இந்த அறிவிப்பு வரும் வரை கொஞ்சம் முதலீட்டு முடிவினை நிதானமாக செய்வது நல்லது’’ என்றவர், ‘‘நான் ஜியோ சிம்  வாங்கியாச்சு.  நீங்க?’’ என்று கேட்டு கடுப்பேற்றினார்.

‘‘டெலிகாம் பங்குகளில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு அதிகரித்துள்ளதே?” என்று கேட்டோம்.

“ஜியோ சலுகைகள் அறிவிப்பை அடுத்து பல டெலிகாம் பங்குகளின் விலை குறைய ஆரம்பித்தது. இந்த கரெக்‌ஷனைப் பயன்படுத்தி ஏர்டெல், ஐடியா பங்குகளை ஃப்ராங்க்ளின் இந்தியா, ஐசிஐசிஐ புரூ., ஹெச்டிஎஃப்சி போன்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கி உள்ளன” என்றவர், ஆகஸ்ட் மாதத்தில் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் வாங்கிய, விற்ற பங்குகள் விவரங்களைச் சொன்னார்.

‘‘மாருதி சுஸூகி, டாடா ஸ்டீல், ஆர்இசி, ஹெச்டிஎஃப்சி பேங்க், ஐசிஐசிஐ பேங்க், எல் அண்ட்  டி ஆகிய நிறுவனப் பங்குகளில் முதலீட்டை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் அதிகரித்துள்ளன. அதே நேரத்தில், பிபிசிஎல், ஆக்ஸிஸ் பேங்க், யெஸ் பேங்க், லூபின் ஆகிய நிறுவனப் பங்குகள் விற்கப்பட்டு உள்ளன. அதுல், திலிப் பில்டுகான், ஆர்பிஎல் பேங்க், அபாட் இந்தியா, இந்தியா சிமென்ட்ஸ் போன்ற பங்குகளில் புதிதாக முதலீடு செய்யப்பட்டு உள்ளன.”
 
‘‘கடந்த வாரம் நிறைய கம்பெனிகள் 52 வார உச்சத்தை அடைந்திருக்கிறதே?’’ என்று ஆச்சர்யப்பட்டோம்.

‘‘கடந்த திங்கள் அன்று சந்தை இறக்கத்தைச் சந்தித்த நிலையிலும், ஏறக்குறைய 129 கம்பெனிகள் அதன் 52 வார உச்சத்தைப் பதிவு செய்தன. அவற்றில் ஸ்மால்கேப் மற்றும் மிட்கேப் நிறுவனங்களும் இருந்தன. பிஎஸ்இ-யில் 1000 நிறுவனங்கள் 52 வார உச்சத்துக்கு அருகில் சென்றன. இது முதலீட்டாளர்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியது. பெரும்பாலானோர் பதற்றத்தின் காரணமாக பங்குகளை விற்று லாபம் பார்த்தார்கள். ஆனால், அந்த நிலையிலும் ரிஸ்க் எடுக்க துணிந்தவர்கள், விலை இறங்கிய நல்ல பங்குகளை அடையாளம் கண்டு முதலீடு செய்யவே செய்தனர். ஏனெனில் அனலிஸ்ட்டுகள் சந்தை, காளையின் போக்கில் தொடர்ந்து இருக்கும் என்று கணித்துள்ளனர்’’ என்கிற மகிழ்ச்சியான தகவலை சொன்னார் ஷேர்லக்.

‘‘வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பு வங்கிப் பங்குகளுக்கு சாதகமாக இருக்குமா?’’ என்று அடுத்த கேள்வியைக் கேட்டோம்.

‘‘கடந்த ஆகஸ்ட் மாதத்தில் சில்லறை பணவீக்கம் குறைந்ததன் காரணமாக ரிசர்வ் வங்கி வட்டி விகிதத்தைக் குறைக்க வாய்ப்பிருப்பதாக எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் வங்கிப் பங்குகள் ஏற்றம் அடைந்தன. பொதுத் துறை வங்கிகள் கடந்த புதன் அன்று 6% ஏற்றமடைந்தன. வட்டி விகிதம் குறித்த எதிர்பார்ப்பு பொய்த்துப் போகும்பட்சத்தில் இந்த நிலை மாற வாய்ப்புள்ளது’’ என்றார்.

“எந்தப் பக்கம் திரும்பினாலும் ஒரே ஐபிஓ அறிவிப்பாக இருக்கிறதே...” என்றோம் ஷேர்லக்கிடம்.

‘‘ரூ.130 கோடி திரட்டும் ஜிஎன்ஏ ஆக்செல்ஸ் ஐபிஓக்கு இரண்டாம் நாள் 2 மடங்குக்கு அதிகமாக விண்ணப்பங்கள் வந்துள்ளன. பங்கு விலை பட்டை ரூ. 205-207 ஆக உள்ளது. 

ஹெச்பிஎல் எலெக்ட்ரிக் அண்ட் பவர் பங்கு வெளியிடு செப்.22-ம் தேதி தொடங்குகிறது. பங்கு விலைப் பட்டை ரூ. 175-202 ஆகும். ரூ.361 கோடி திரட்டப்பட இருக்கிறது.

சென்னையை சேர்ந்த கிரீன் சிக்னல் பயோ பார்மா, பங்கு வெளியிட செபியின் அனுமதியைப் பெற்றுள்ளது. இந்த நிறுவனம் மொத்தம் 1.45 கோடி (38%)பங்குகளை வெளியிட இருக்கிறது. இந்த நிறுவனம், இதன் தயாரிப்புகளை 17 நாடு களுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது’’ என்று  பட்டியலை வாசித்தார்.

‘‘மியூச்சுவல் ஃபண்ட்  ஃபோலியோ எண்ணிக்கை அதிகரித்திருக்கிறதே?’’ என்றோம்.

‘‘ஆகஸ்ட் 2016 நிலவரப்படி, மியூச்சுவல் ஃபண்ட் ஃபோலியோக்களின் எண்ணிக்கை 5 கோடியை எட்டியுள்ளது. 2014-15 நிதி ஆண்டில் 22 லட்சம் ஃபோலியோக்கள் தொடங்கப்பட்டன. 2015-16 நிதி ஆண்டில் இந்த எண்ணிக்கை இரண்டு மடங்குக்கும் மேல் அதிகரித்து 59 லட்சம் ஃபோலியோக்கள் ஆகின. மேலும், மாதாந்திர முதலீட்டு திட்டங்களான எஸ்ஐபி கணக்குகள் 1 கோடியைத் தாண்டியுள்ளது. எஸ்ஐபி மூலம் மட்டுமே மாதம் ரூ. 3000 கோடி முதலீடு செய்யப்படுகிறது’’ என்ற வரிடம், ‘‘பொதுத் துறை வங்கிகள் பெர்பீச்சுவல் பாண்டுகளை விற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளதே ஏன்?’’ என்று வினவினோம்.

‘‘இந்த வகை பாண்டுகளில் முதிர்வுத் தேதி இல்லை. தவிர, சிறு முதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளும் வகையிலும் இல்லை. இதனால் இவற்றில் மிஸ்-செல்லிங் (mis-selling) ஆக வாய்ப்பிருப்பதால், சிறு முதலீட்டாளர்களுக்கு இந்த பாண்டுகளை விற்க பொதுத்துறை வங்கி களுக்கு செபி தடை விதித்துள்ளது’’ என்றவர், வாசகர்கள் கவனிக்க வேண்டிய பங்குகளைச் சொல்லிவிட்டுக் கிளம்பினார்.

“ஓராண்டுக்கு மேற்பட்ட முதலீட்டுக்கு :  எல்ஐசி ஹவுஸிங், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ், ஸ்பைஸ்ஜெட், என்ஐஐடி டெக்னாலஜீஸ்.’’

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்