கிரெடிட் கார்டு... தவிர்க்க வேண்டிய ஐந்து தவறுகள்!

சோ.கார்த்திகேயன்

ம் நாட்டில் கிரெடிட் கார்டு பயன்பாடு, கடந்த ஐந்து ஆண்டில் மட்டும் 50% உயர்ந்துள்ளன. தற்போது 2.64 கோடி கிரெட் கார்டுகள் புழக்கத்தில்  இருக்கின்றன. இப்போது பண மதிப்பு நீக்கப் பிரச்னையால், பணத் தட்டுப்பாடு உருவாகி, கிரெடிட் கார்டின் தேவையும், பயன்பாடும் வெகுவாக அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், டெபிட் கார்டுகளுடன் கிரெடிட் கார்டுகளையும் பலரும் பயன்படுத்தத் தொடங்கி இருக்கின்றனர். ஆனால், பெரும்பாலானவர்கள் கிரெடிட் கார்டு குறித்து முழு விவரமும் தெரியாமல், தவறுதலாகப்  பயன்படுத்தி பல்வேறு பிரச்னைக்கு ஆளாகின்றனர். கிரெடிட் கார்டு பயனாளர்கள் தவிர்க்க வேண்டிய முக்கிய தவறுகள் குறித்து நிதி ஆலோசகர் அபுபக்கர் சித்திக் விவரமாக எடுத்துச் சொன்னார்.

 ஒரே கார்டு!

“கிரெடிட் கார்டு என்பது அவசரத் தேவைக்கானது மட்டுமே. பொதுவாக, பல்வேறு வகையான ஷாப்பிங் செய்ய டெபிட் கார்டே போதுமானது. டெபிட் கார்டு போக, ஒன்று அல்லது இரண்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தலாமே தவிர, அதிக கார்டுகளைப் பயன்படுத்தக் கூடாது. கிரெடிட் கார்டில் ஷாப்பிங் செய்த பிறகு குறிப்பிட்ட காலத்துக்குள் பணத்தை சரியாக திருப்பிச் செலுத்த வேண்டும். வீட்டில் உள்ளவர்களும் கார்டினைப் பயன்படுத்த வேண்டுமெனில், ‘ஆட் ஆன் கார்டை’ வாங்கிப் பயன்படுத்தலாம். இதற்காக இன்னொரு கிரெடிட் கார்டு வாங்கத் தேவையில்லை.

 கிரெடிட் லிமிட்!

கிரெடிட் கார்டினைப் பயன்படுத்துவதில் ஓர் ஒழுங்கு நம்மிடம்  நிச்சயம் இருக்க வேண்டும். 50 நாளைக்கு கிரெடிட் லிமிட், ரிவார்ட் பாயின்ட்ஸ், கேஷ்பேக் ஆஃபர் என பல்வேறு சலுகைகள் இருப்பதைப் பார்த்து, நாம் அதை அடிக்கடி பயன்படுத்தக்கூடாது. இப்போது டெபிட் கார்டிலேயே ரிவார்ட் பாயின்ட்ஸ் போன்ற சலுகைகள் வந்துவிட்டன.

கிரெடிட் கார்டில் மிகவும் முக்கியமான விஷயம், கிரெடிட் லிமிட். இப்போது கார்டு வழங்குநர், கிரெடிட் கார்டு லிமிட் 2 லட்சம் அல்லது 3 லட்சம் ரூபாய் என வழங்கிவிடுகின்றனர். வாங்கும் சம்பளத்தில் எல்லாச் செலவுகளும் போக, கையில் இருக்கும் உபரிப் பணத்துக்கு ஏற்றவாறு கிரெடிட் லிமிட் இருப்பதே சிறந்தது. உதாரணத்துக்கு, 5,000 ரூபாய் உபரி என்றால், 50,000 வரை கிரெடிட் லிமிட் இருப்பது நல்லது. கிரெடிட் லிமிட் மிக அதிகமாக இருந்தால், செலவு செய்வதில் கட்டுப்பாடு வேண்டும்.

 லிங்க் செய்ய வேண்டாம்!

உங்கள் கிரெடிட் கார்டினை எந்தவொரு ஆன்லைன் மற்றும் வேலட் நிறுவனங்களுடன் லிங்க் செய்யாமல் இருப்பதே நல்லது. காரணம், டெபிட் கார்டு மூலம் செலவு செய்யும்போது, கையில் எவ்வளவு பணம் இருக்கிறது என்கிற விவரம் தெரியும். ஆனால், கிரெடிட் கார்டில் இது தெரியாது.

கிரெடிட் லிமிட் அதிகமாக இருந்தால், ஷாப்பிங் மோகத்தால் அதிக செலவினங்கள் ஏற்படலாம். ஆகையால், கிரெடிட் கார்டுக்குப் பதில், டெபிட் கார்டுகளை லிங்க் செய்வதே சிறந்தது. குறிப்பாக, குறைந்த அளவு கிரெடிட் லிமிட் உடையவர்கள் ஆன்லைன் தளங்களுடன் கட்டாயம் லிங்க்  செய்யாமல் இருப்பதே நல்லது.

 ஏடிஎம்-ல் பணம்!

கிரெடிட் கார்டு மூலமாகப் பரிவர்த்தனை செய்வதைவிட, ஏடிஎம்-ல் கிரெடிட் கார்டு மூலமாகப் பணம் எடுத்தால், வட்டி மற்றும் கட்டணங்கள் அதிகம். கிரெடிட் கார்டினைப் பயன்படுத்தி ஏடிஎம்-ல் முடிந்தவரை பணத்தை எடுக்காதீர்கள். ஒரு அவசரத்துக்கு உங்கள் கிரெடிட் கார்டைப் பயன்படுத்தி, ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுக்கிறீர்கள் என்றால், அதை நீங்கள் 50 நாட்களுக்குள் திருப்பிச் செலுத்தத் தவறினால், வட்டியுடன், அபராதத் தொகை செலுத்த வேண்டும் என்பதை மறக்காதீர்கள்.

 அதிக இஎம்ஐ வேண்டாம்!


பெரும்பாலான நிறுவனங்களில் கிரெடிட் கார்டு மூலம் ஷாப்பிங் செய்த தொகை 2,000 ரூபாய்க்கு மேல் இருந்தால், அது இஎம்ஐ-ஆக மாற்றிக் கொள்ளலாம் என்ற வசதி இருக்கிறது. உங்களுடைய கிரெடிட் கார்டு கணக்கை ‘லாக் இன்’ செய்யும்போது, உங்களுடைய பில்லிங் சைக்கிள் வரும்முன், அதை இஎம்ஐ ஆக செலுத்திக் கொள்ளலாம் என்று நிறுவனங்கள் ஆசை வார்த்தைகளைச் சொல்வார்கள். இந்த வார்த்தைகளில் மயங்கி பலரும் அடிக்கடி இஎம்ஐ ஆக மாற்றிக்கொள்கின்றனர். ஆனால், இது மிகவும் தவறான நடைமுறை.

ஏனெனில் ரூ.5,000, ரூ.6,000, ரூ.7,000 என மூன்று பொருட்களை வாங்கி இருந்தாலும், மூன்றையுமே இஎம்ஐ-ல் மாற்றிக்கொள்ள முடியும். இஎம்ஐ-ல் 3 மாதம், 12 மாதம், 24 மாதம், 48 மாதம் என தவணை முறையே வழங்கி இருப்பார்கள். ஆனால், பெரும்பாலானவர்கள் குறைந்த அளவு பணம் இஎம்ஐ ஆக இருந்தால், பணம் செலுத்துவதற்கு எளிதாக இருக்கும் என்ற நினைப்பில் அதிக மாதம் இருக்கும் இஎம்ஐ முறையை தவறாகத் தேர்ந்தெடுக்கின்றனர்.

இதில் குறைந்தபட்சம் தவணை முறையில் செலுத்துவதே நல்லது. ஏனெனில் அதிக மாதம், குறைந்த இஎம்ஐ முறையைத் தேர்ந்தெடுக்கும்போது, பல இஎம்ஐ-களைச் செலுத்த வேண்டிய நிலை வரலாம். இறுதி வரையிலும் கடன்காரனாகவே வாழ வேண்டிய நிலை வரும். இதுபோன்ற கடன் வலையில் சிக்காதீர்கள்!” என்று முடித்தார்.

உங்களுக்கு கிரெடிட் கார்டு அவசியமா, அநாவசியமா என்பதை நீங்கள்தான் முடிவு செய்ய வேண்டும். எளிதாகக் கிடைக்கிறதே என்பதால், கிரெடிட் கார்டு வாங்கி அதிக செலவு செய்யாதீர்கள். சிக்கனமாகச் செலவழித்து சந்தோஷமாக இருங்கள்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்