என்பிஎஸ் திட்டத்தில் கூலி வேலை செய்பவர்கள் சேர முடியுமா?

கேள்வி-பதில்

? தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் (என்பிஎஸ்) கூலி வேலை, பெட்டிக் கடை போன்ற சுயவேலை செய்பவர்கள் சேர முடியுமா?

மாரிமுத்து, மதுரை
ஸ்ரீராம் ரெட்டி, ஆடிட்டர்


“தேசிய ஓய்வூதியத் திட்டம் என்பது, வயது மூப்பின்போது ஏற்படும் பொருளாதாரத் தேவைகளைச் சமாளிக்க இந்தியக் குடிமக்கள் அனைவருக்காகவும் ஏற்படுத்தப்பட்ட திட்டம். இந்தத் திட்டத்தில் பயன்பெற ஒருவர், இந்திய குடியிருப்பு தகுதி உடையவராகவோ (Resident), இல்லாதவராகவோ (Non - Resident) இருக்கலாம். 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். ஆகவே, இந்தத் திட்டத்தின் கீழ், கூலி வேலை செய்பவர்கள், பெட்டிக் கடை வைத்திருப்பவர்கள் எனப் பாகுபாடின்றி அனைவரும் பயன்பெற முடியும்.”

? மாதந்தோறும் ரூ.1,000 வீதம் பங்குச் சந்தையில் 15 வருடங்கள், அதாவது நீண்ட காலத்துக்கு எப்படி முதலீடு செய்வது?

ராஜா, சென்னை
வ.நாகப்பன், பங்குச் சந்தை நிபுணர்


“நிஃப்டி பீஸ் யூனிட்டுகளில் முதலீடுசெய்து வருவது லாபகரமாக இருக்கும். பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் தலைசிறந்த முன்னணிப் பங்குகளில் பிரித்து முதலீடு செய்ததுபோலவும் இருக்கும். ரிஸ்க்கும் கொஞ்சம் குறைவு. வங்கி எஃப்டி வருமானத்தைவிடக் கொஞ்சம் உபரி வருமானம் கிடைக்கும் வாய்ப்பும் அதிகம். வருமானம் மற்றும் ஆதாயத்தின் மீது வரிச் சலுகை உண்டு.”

? ஐடியா செல்லூலர் பங்குகளில் முதலீடு செய்திருக்கிறேன். 110 ரூபாய் விலையில் 500 பங்குகளை வாங்கினேன். இப்போது விலை குறைந்திருக்கிறது. இந்தப் பங்கினைத் தொடர்ந்து வைத்திருக்கலாமா?

அருண்குமார், சென்னை
ஏ.கே.பிரபாகர், பங்குச் சந்தை நிபுணர்


“வோடஃபோன் - ஐடியா இணைப்புக்குப்பின் இந்த நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாக உருவெடுக்கும். இதனால் ஐடியா நிறுவனத்தின் சந்தை பங்களிப்பு மற்றும் மார்ஜின் மணி அதிகரிக்கும். ஆகையால், ஐடியா நிறுவனப் பங்குகளைத் தொடர்ந்து வைத்திருப்பதோடு மட்டுமில்லாமல், தற்போதைய விலையில்கூட ஐடியா நிறுவனப் பங்குகளைத் தாராளமாக வாங்கலாம்”.

? டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் திட்டம் என்றால் என்ன? இதை எப்படி உபயோகப்படுத்துவது?”

ரமேஷ், மேட்டூர்
எஸ்.ஸ்ரீதரன், இன்ஷூரன்ஸ் ஆலோசகர்


“குறைந்தபட்சத் தொகைக்குக் காப்பீடு எடுத்துக்கொண்டு, அதற்குமேல் வரும் தொகையை டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸ் மூலம் கவர் செய்யமுடியும். உதாரணத்துக்கு, கணவன், மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுக்கு ரூ.5 லட்சம் கவரேஜ் தேவையென்றால், ரூ.2 லட்சம் கவரேஜுக்கு அடிப்படை ஹெல்த் பாலிசி எடுத்துக்கொள்ள வேண்டும்.

டாப் அப் ஹெல்த் இன்ஷூரன்ஸாக ரூ.3 லட்சம் எடுத்துக்கொண்டால், முதல் ரூ.2 லட்சம் வரை அடிப்படை பாலிசியிலும் அதற்கு மேல் வரும் தொகையை டாப் அப் பாலிசி மூலமும் க்ளெய்ம் பெறலாம். டாப் அப் பாலிசியின் முக்கியமான வசதி என்னவென்றால், இந்த பாலிசியின் பிரீமியம், பேசிக் பாலிசியின் பிரீமியத்தை விடக் குறைவாக இருக்கும்.”

தொகுப்பு: சோ.கார்த்திகேயன்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick

மாதத்திற்கு 7 எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகள் படிக்க லாகின் செய்யுங்கள்அனைத்து எக்ஸ்க்ளுசிவ் கட்டுரைகளையும் படிக்க சந்தா செய்யுங்கள்