விலைவாசியை உயர்த்தாத ஜிஎஸ்டி வரிகள்! | Editor opinion - Nanayam Vikatan | நாணயம் விகடன்

விலைவாசியை உயர்த்தாத ஜிஎஸ்டி வரிகள்!

ஹலோ வாசகர்களே..!

ரேந்திர மோடியின் தலைமையிலான பாஜக ஆட்சி மூன்றாண்டு காலத்தை நிறைவு செய்துவிட்டு, நான்காம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிற இந்தச் சமயத்தில், பொருள் மற்றும் சேவைக்கான (ஜிஎஸ்டி) வரி விகிதங்கள் அறிவிக்கப்பட்டு, அனைத்துத் தரப்பினரின் பாராட்டையும் பெற்றுள்ளது.

மொத்தமுள்ள பல நூறு பொருள்களில் 7 சதவிகிதப் பொருள்கள் வரி விதிப்புக்கு உட்படுத்தப்படவில்லை. அரிசி, கோதுமை, பால் போன்றவை இதில் அடங்கும். 17 சதவிகிதப் பொருள்கள் 12 சதவிகித வரி விதிப்புக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன. 43 சதவிகிதப் பொருள்கள் 18 சதவிகித வரி வரம்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன. 19 சதவிகிதப் பொருள்கள் 28 சதவிகித வரி வரம்புக்குள் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

ஜிஎஸ்டி வரி விதிப்பு நடைமுறைக்கு வந்தால், பொருள்களின் விலை உயரும் என்றுதான் பரவலாகப் பலரும் பேசி வந்தனர். ஆனால், பல்வேறு பொருள்களுக்கும் சேவைகளுக்கும் விதிக்கப்பட்டிருக்கும் வரி விகிதங்களைப் பார்க்கும்போது, விலைகள் குறைவதற்கான வாய்ப்புகளே அதிகம். இயந்திரங்களுக்கான வரி விகிதம் முன்பு 28 சதவிகிதமாக இருந்தது, இப்போது 18 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. 14 சதவிகிதமாக இருந்த நிலக்கரிக்கான வரி, இப்போது 5 சதவிகிதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அடிக்கடி பயன்படுத்தும் பொருள்களுக்கான வரியும் 18% என்கிற அளவுக்குள்ளேயே இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருள்களுக்கான வரி விகிதங்களும், சேவைகளுக்கான வரி விகிதங்களும் நடுத்தர வர்த்தகத்தினரைப் பாதிக்காத அளவு நிர்ணயம் செய்யப்பட்டுள்ள அதே நேரத்தில், சிலவற்றின் வரி விகிதத்தை மத்திய அரசாங்கம் கணிசமாக உயர்த்தியும் உள்ளதைக் குறைசொல்ல முடியாது. புகையிலை நம் உடலுக்கு ஊறு விளைவிப்பது என்பதால், அதற்கு அதிக வரி விதித்திருப்பது (160%) சரியே. இதேபோல, ஐந்து நட்சத்திர ஹோட்டல் உள்பட பலவற்றுக்கும் அதிக வரி விகிதம் விதிக்கப்பட்டுள்ளது. பெரும் பணக்காரர்களே இந்தச் சேவைகளைப் பயன்படுத்துகிறார்கள். அவர்களிடமிருந்து கூடுதல் வரியை வசூலிப்பதில் தவறில்லை. தவிர, பல்வேறு பொருள்களுக்கான வரியைக் குறைப்பதன் மூலம் அரசாங்கம், வரி வருமானத்தை இழக்க நேரிடும். சிலவற்றுக்கு அதிக வரி விதிப்பதன் மூலமே அரசு தன்னுடைய வருமானத்தை ஓரளவுக்காவது உயர்த்திக்கொள்ள முடியும்.

ஜிஎஸ்டி வரியை நடைமுறைப்படுத்துவதில் மத்திய அரசாங்கம் ஏறக்குறைய 75 சதவிகித வேலைகளைக் கச்சிதமாகச் செய்து முடித்துவிட்டது. இனி இந்த வரி விதிப்பை வர்த்தகர்களிடம் எடுத்துச் சொல்லி, இது தொடர்பாக வர்த்தகர்களுக்கு இருக்கும் பல்வேறு சந்தேகங்களையும், குழப்பங்களையும் தீர்ப்பதில் மத்திய அரசாங்கம் அதிக அக்கறை காட்ட வேண்டும். வருகிற ஜுலை 1-ம் தேதி முதல் ஜிஎஸ்டியை நடைமுறைப்படுத்துவதன் மூலம், நம் நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமெடுக்கும் என்பதில் சந்தேகமில்லை! 

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick