கற்றுக் கொள்ளும் கலை!

நாணயம் புக் செல்ஃப்

புத்தகத்தின் பெயர் : தி லைஃப் டைம் லேர்னர்ஸ் கைடு டு ரீடிங் அண்டு லேர்னிங் (The Lifetime Learner’s Guide to Reading and Learning)

ஆசிரியர் :
கேரி ஹோவர்

பதிப்பகம் : Assiduity Publishing House

ம்மில் பலரும் தினமும் படிக்கத்தான் செய்கிறோம். செய்தித்தாள், பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் சமீபகாலமாக சமூக வலைதளங்கள் மூலம் நல்ல விஷயங்கள் என மாய்ந்து மாய்ந்து படிக்கிறோம். இப்படிப் படிப்பதில் எத்தனை விஷயங்கள் நமக்குள் ஊறி, ரத்தத்துடன் கலக்கிறது, எத்தனை விஷயங்கள் தூங்கி எழுந்தபின் மறந்துபோகிறது? கொஞ்சம் யோசித்துப் பார்த்தால், நாம் படிக்கிற அளவுக்குப் பல்வேறு விஷயங்களை நாம் கற்றுக்கொள்கிறோமா என்பது கேள்விக்குறிதான்.

பல புத்தகங்களைப் படித்து, அதிலிருந்து பல்வேறு விஷயங்களைக் கற்றுக்கொண்டு மனதில் நிலைநிறுத்திக்கொள்வது எப்படி என்பதை  கேரி ஹோவர் எழுதிய ‘தி லைஃப் டைம் லேர்னர்ஸ் கைடு டு ரீடிங் அண்டு லேர்னிங்’ என்னும் புத்தகம் நமக்குத் தெளிவாகச் சொல்லித் தருகிறது.
கிட்டத்தட்ட 57,000 புத்தகங்களைத் தன்னுடைய நூலகத்தில் வைத்திருக்கும் கேரி ஹோவர், அந்தப் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் 80% இணையத்தில் சொல்லப்பட்டிருக்கவில்லை என ஆணித்தரமாகச் சொல்கிறார். எப்படி நல்ல புத்தகங்களைக் கண்டறிவது, வாங்குவது மற்றும் புத்தகங்களில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களை எளிதில் ஜீரணித்துக்கொள்வது என்கிற கேள்விகளுக்கான பதில்களுடன்,   கட்டாயம் படிக்கவேண்டிய 160 புத்தகங்களின் பட்டியல் மற்றும் எப்படி நீங்கள் தொடந்து கிரியேட்டிவிட்டியுடன் இருப்பது என்பது போன்ற முக்கிய விஷயங்களையும் இந்தப் புத்தகம் சொல்லித் தருகிறது.

கற்பனைக் கதையல்லாத புத்தகங்களை 15 முதல் 30 நிமிடங்களில் படித்துப் புரிந்துகொள்வது எப்படி என்பதே இந்தப் புத்தகத்தின் முதல் அத்தியாயமாக இருக்கிறது. “என் நூலகங்களிலுள்ள ஒவ்வொரு புத்தகத்தையும் 15 முதல் 20 நிமிடங்களில் படித்துவிடுவேன். ஆனால், சின்ன வயதில் நான் மெதுவாகப் படிப்பதால், என்னை வேகமாகப் படிப்பதற்கான பயிற்சி வகுப்புகளுக்கெல்லாம் அனுப்பியுள்ளார்கள்’’  என்று சொல்லி ஆச்சர்யப்படுத்துகிறார் ஆசிரியர்.

“ஒவ்வொரு புத்தகத்தை வாங்கும்போதும் இது நல்லதொரு வழிகாட்டும் புத்தகமாக இருக்கும் என்று நினைத்து, தேவைப்படும்போதெல்லாம் படித்துப் பார்க்கும்படி வைத்துக்கொள்வேன்.   இரண்டாவதாக, அந்தப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் விஷயங்களில் 75% வரை ஆன்லைனில் இருக்காது என்பதையும் உறுதியாக நினைத்துக் கொள்வேன். அதன்பின்னால் புத்தகத்தின் உள்ளடக்கத்தை நன்றாகப் படித்து மனதில் நிறுத்திக்கொள்வேன். நன்றாக எழுதப்பட்டிருக்கும் புத்தகத்தின் பொருளடக்கமே, மிகவும் நேர்த்தியாகப் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகளை வரிசைப்படுத்திச் சொல்லப் பட்டிருக்கும். சில புத்தகங்களில் உள்ளடக்கத்திற்குப்பின்னால் இந்தப் புத்தகம் எந்த மாதிரி வடிவமைக்கப்பட்டுள்ளது (concept) என்று சொல்லியிருக்கும்.அது, இன்னமும் தனிச் சிறப்பான அமைப்பாகும். புத்தகத்தை ஜீரணித்துக்கொள்ள இதுவே மிகவும் சிறந்த தூண்டுகோலாக இருக்கும்” என்கிறார் ஆசிரியர்.

“பிசினஸ் சம்பந்தப்பட்ட பெரும்பாலான புத்தகங்கள், 10 -  20 பக்கங்களுக்குள் அடக்கமாக எழுதப்படவேண்டிய விஷயங்களையே விலாவாரியாக இழுத்துப் பிடித்து 200 - 300 பக்கங்கள் வரையில் எழுதப்படுகின்றன. அந்தப் புத்தகத்தில்  ஓர் அருமையான அடிப்படை ஐடியா இருக்கும். ஆனால், அதையே மீண்டும் மீண்டும் விளக்கமாகப் பல்வேறு உதாரணங் களுடன் சொல்லியிருப்பார்கள். அவ்வளவு உதாரணங்களையும் படிக்கிற அளவுக்கு எனக்குக் காலஅவகாசம் இல்லை. எனவே, எந்தப் புத்தகத்தை வாங்கும்முன்பும் உள்ளடக்கம் மற்றும் அட்டவணைத் தொடர்பான பக்கங்களை நிதானமாகப் படித்து விடுவது நல்லது.

புத்தகத்தை வாங்கியவுடன் அதில் அச்சடிக்கப்பட்டிருக்கும் (புத்தகம் குறித்த) முக்கியத் தகவல்களைப் படித்துவிட வேண்டும். பின் அட்டையில் நிச்சயமாக ஆசிரியர் பற்றிய குறிப்பு இருக்கும்.  அவர் யார், எங்கே இருக்கிறார், என்ன செய்கிறார், என்ன சொல்லவருகிறார் என்பதைப் படித்துத் தெரிந்துகொண்டு, அதன்பின் அவரின் நிலைப்பாடு எப்படி என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். பிறகு, அந்தப் புத்தகத்தை யாரெல்லாம்  பாராட்டியிருக்கிறார்கள் என்பதைப் பார்க்கவேண்டும்.

உதாரணத்திற்கு, நோபல் பரிசு பெற்ற பொருளாதார நிபுணர்  ஒருவர், பொருளாதாரம் சார்ந்த புத்தகத்தைப் பாராட்டி எழுதி யிருந்தாலோ அல்லது தொழில்முனைவு குறித்து ரிச்சர்ட் பிரான்சன் ஒரு புத்தகத்தைப் பாராட்டியிருந்தாலோ அந்தப் புத்தகங்களை மிகவும் சீரியஸாக கருத்தில்கொள்ள வேண்டும். அவர்கள் என்ன சொல்லிப் பாராட்டியிருக்கிறார்கள் என்பதையும் படித்துக்கொள்ள வேண்டும்.

புத்தகத்தின் உள்ளே பல படங்கள் போடப்பட்டு விளக்கப் பட்டுள்ளன. புத்தக ஆசிரியரின் விளக்கத்தைப் படிக்கும்முன்னரே அந்தப் படங்கள் எதனைக் குறிக்கின்றன என்பதை, முதலில் நாமே உற்றுப் பார்த்துப் புரிந்து கொள்ள முயற்சி செய்ய வேண்டும். பெரும்பாலும், இந்தப்  படங்களில் புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கும் பல முக்கியக் கருத்துகள் இழையோடியிருக்கும்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick