நாணயம் BITS

மீண்டும் முதல் இடத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்!

அதிக சந்தை மதிப்புக்கொண்ட நிறுவனத்துக்கான போட்டியில் டி.சி.எஸ் நிறுவனம், இந்த மாதம் 10-ம் தேதியன்று ரிலையன்ஸ் நிறுவனத்தை முந்தியிருந்தது. இந்த நிலையில், 7,67,457.71 கோடி ரூபாய் சந்தை மூலதனத்துடன் டி.சி.எஸ் நிறுவனத்தைத் தற்போது மீண்டும் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது ரிலையன்ஸ். டி.சி.எஸ் நிறுவனத்தின் சந்தை மூலதனம் 7,66,193.61 கோடி ரூபாயாக உள்ள நிலையில், அதைக் காட்டிலும் 1,264.1 கோடி ரூபாய் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளது ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம்.

இதன் காரணமாக மும்பை பங்குச் சந்தையில், ஆகஸ்ட் 14-ம் தேதியன்று ரிலையன்ஸ் பங்கு ஒன்றின் விலை இரண்டு சதவிகிதம் உயர்ந்து 1,211 ரூபாயாகக் காணப்பட்டது. அதேசமயம் டி.சி.எஸ் நிறுவனத்தின் பங்கு ஒன்றின் விலை, அன்றைய தின வர்த்தக முடிவில் வெறும் 0.04 சதவிகித உயர்வுடன் 2,001 ரூபாயாகக் காணப்பட்டது.


 பிரமாண்டம் காட்டும் பி.வி.ஆர்!

தென்னிந்தியாவை மையமாகக்கொண்டு செயல்படும் நிறுவனம் எஸ்.பி.ஐ சினிமாஸ் என்னும் சத்யம் சினிமா. இந்த நிறுவனத்தின் 71.69 சதவிகிதப் பங்குகளை, ரூ.633 கோடிகளுக்கு மல்டிப்ளெக்ஸ் நெட்வொர்க்கான பி.வி.ஆர் லிமிடெட் நிறுவனம் வாங்க இருக்கிறது. இந்த 71.69 சதவிகித எஸ்.பி.ஐ பங்குகளில், 61.65 சதவிகித எஸ்.எஸ் தியேட்டர்ஸ் எல்.எல்.பி பங்குகளும், 10.04 சதவிகித       எஸ்.எஸ் ஸ்வரூப் ரெட்டி பங்குகளும் அடங்கும். இந்த கையகப்படுத்துதலுடன் சேர்த்து பி.வி.ஆர் குழுமத்துக்கு 706 திரைகள் சொந்தமாக இருக்கும். நாடு முழுவதும் 60 நகரங்களில் பி.வி.ஆர் திரையரங்குகள் இருக்கின்றன. உலக அளவில் 7-வது மிகப்பெரிய திரையரங்க நிறுவனமான வளர்ந்துள்ளது பி.வி.ஆர் நிறுவனம்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick