ஷேர்லக்: புத்துயிர் பெறும் பொதுத்துறை வங்கிகள்! | Shareluck - Nanayam Vikatan | நாணயம் விகடன்

ஷேர்லக்: புத்துயிர் பெறும் பொதுத்துறை வங்கிகள்!

ஓவியம்: அரஸ்

ஹேப்பி கிறிஸ்துமஸ் என்று வாழ்த்துகளைச் சொன்னபடி சரியாக மாலை 4 மணிக்கு வந்துசேர்ந்தார் ஷேர்லக். அன்று சந்தை ஏறக்குறைய 200 புள்ளிகளுக்கு இறங்கிய நிலையில், அடுத்த சந்தை எப்படிச் செல்லுமோ என்கிற பரபரப்பில் நாம்  உட்கார்ந்திருந்தோம். ஷேர்லக்கிற்காக நாம் வாங்கித் தயாராக வைத்திருந்த ஏலக்காய் டீயைக் கப்பில் ஊற்றிக் கொடுத்தோம். அவர் ஆர்வமாக வாங்கிப் பருக, நாம் கேள்விகளைக் கேட்க ஆரம்பித்தோம். 

2019-ல் சென்செக்ஸ் 40,000 புள்ளிகளைத் தொடும் என பி.என்.பி பரிபாஸ் தெரிவித்துள்ளதே?

“பாரீஸைத் தலைமையிடமாகக்கொண்ட சர்வதேச வங்கியும், நிதிச்சேவை நிறுவனமுமான பி.என்.பி பரிபாஸ் (BNP Paribas), இந்தியச் சந்தைகள் குறித்து நடுநிலையான கருத்தையே கொண்டுள்ளது. அதேசமயம், கார்ப்பரேட் நிறுவனங்களின் காலாண்டு முடிவுகள் மற்றும் அரசியல் நிகழ்வுகள் சந்தையில் ஏற்ற இறக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக அது எச்சரித்துள்ளது. இருப்பினும், 2018-ம் ஆண்டின் இறுதியில் சென்செக்ஸ் 37,500 புள்ளிகளைத் தொட்டு, 2019-ல் அது 40,000 புள்ளிகள் வரைக்கும் செல்லலாம் என பி.என்.பி பரிபாஸ் தெரிவித்துள்ளது.”

மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸிலிருந்து டி.ஹெச்.எஃப்.எல் வெளியேற என்ன காரணம்?

“வீட்டுக் கடன் வழங்கும் டி.ஹெச்.எஃப்.எல் (திவான் ஹவுஸிங் ஃபைனான்ஸ் கார்ப்பரேஷன் லிமிடெட்) நிறுவனம், தனது டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்கா அஸெட் மேனேஜர்ஸ் என்ற மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் மொத்தப் பங்குகளையும், தனது தொழில் கூட்டாளியான அமெரிக்காவின் புரூடென்ஷியல் ஃபைனான்ஷியல் (பி.எஃப்.ஐ) நிறுவனத்திடம் விற்றுவிட்டதாக அறிவித்துள்ளது.

அதேசமயம், எவ்வளவு ரூபாய் மதிப்பில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறித்து எதுவும் தெரிவிக்கப்பட வில்லை. டி.ஹெச்.எஃப்.எல் பிரமெரிக்கா நிறுவனத்தில் 50% பங்குகளை வைத்திருந்த டி.ஹெச்.எஃப்.எல், அதில் 17.12% பங்குகளை நேரடியாகவும், 32.88 சதவிகிதத்தை அதன் துணை நிறுவனமான டி.ஹெச்.எஃப்.எல் அட்வைஸரி அண்டு இன்வெஸ்ட்மென்ட்ஸ் மூலமாகவும் கொண்டிருந்தது. வீட்டுக் கடன் வழங்கும் தங்களது பிரதானத் தொழிலில் கவனம் செலுத்தும் நோக்கத்திலேயே இந்த நடவடிக்கையைத் தாங்கள் மேற்கொண்டுள்ள தாகவும், இது நிறுவனத்தின் பங்குதாரர்கள் உள்பட அனைத்துத் தரப்பினருக்கும் நன்மை அளிப்பதாக இருக்கும் என்று நம்பிக்கை தெரிவித்திருக்கிறார் டி.ஹெச்.எஃப்.எல் நிறுவனத்தின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான கபில் வதவான்.”

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick