புதிய நிதி அமைச்சரின் நோக்கம் நிறைவேறுமா?

ஹலோ வாசகர்களே..!

ருண் ஜெட்லிக்கு மாற்று சிறுநீரக அறுவை சிகிச்சை நடந்ததைத் தொடர்ந்து, அவர் வகித்துவந்த நிதி அமைச்சர் பதவியைத் தற்காலிகமாக ஏற்றிருக்கிறார் மத்திய ரயில்வே மற்றும் நிலக்கரித் துறை அமைச்சராக இருக்கும் பியூஷ் கோயல்.

பதவியேற்ற சில நாள்களில், பொதுத்துறை வங்கிகளின் முழு நேர இயக்குநர்களைச் சந்தித்த அவர், ‘‘ரிசர்வ் வங்கி விதித்துள்ள ‘ப்ராம்ப்ட் கரெக்ட்டிவ் ஆக்‌ஷன்’ (PCA) என்னும் கட்டுப்பாட்டிலிருந்து பொதுத்துறை வங்கிகளை வெளியே கொண்டுவரத் தேவையான உதவிகள் அரசுத் தரப்பிலிருந்து செய்யப்படும்’’ என்று சொல்லியிருக்கிறார்.

புதிய நிதி அமைச்சரின் இந்தக் கருத்து உண்மையிலேயே வரவேற்கத்தக்கது. காரணம், ஒரு வங்கியானது பி.சி.ஏ-வில் வந்துவிட்டால், அந்த வங்கியால் பெரிய நிறுவனங்களுக்கு அதிக அளவில் கடன் தரமுடியாத நிலை ஏற்படும். வங்கிகளின் அடிப்படைத் தொழிலே கடன் தந்து, அதன்மூலம் கிடைக்கும் வட்டியை லாபமாகப் பெறுவதுதான். சிறிய அளவில் கடன் தர எத்தனையோ தனியார் நிதி நிறுவனங்கள் இருக்கும்போது, வங்கிகளும் அதையே செய்தால் அதனால் வங்கிகளுக்கு எந்தப் பயனும் இல்லை. வங்கிகள் தரும் கடனையே நம்பித் தொழில் செய்யும் தொழில் நிறுவனங்களுக்கும் பயனில்லை. தொழில் நிறுவனங்களுக்குக் கடன் கிடைக்கவில்லை என்றால், பொருளாதார வளர்ச்சியும் குறைந்துவிடும்.

ஆனால், இன்றைக்கு நம் நாட்டிலுள்ள 21 பொதுத்துறை வங்கிகளில் 11 வங்கிகள் இந்த ‘பி.சி.ஏ’ கட்டுப்பாட்டில் உள்ளன. இன்னும் கனரா வங்கி, பஞ்சாப் நேஷனல் பேங்க், ஆந்திரா பேங்க் உள்பட ஐந்து வங்கிகளும் இந்தக் கட்டுப்பாட்டில் வர வாய்ப்புள்ளன. இந்த நிலையில், இத்தனை வங்கிகளையும் இந்த ‘பிசிஏ’ கட்டுப்பாட்டிலிருந்து வெளியே கொண்டுவருவதற்கான நடவடிக்கையைப் புதிய நிதி அமைச்சர் எப்படி செய்யப் போகிறார் என்பது முக்கியமான கேள்வி.

தற்போது ‘பி.சி.ஏ’ கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளின் வாராக் கடன் மிக மிக அதிகமாக உள்ளது. இந்த வாராக் கடனை அடுத்த சில ஆண்டுகளில் கணிசமாகக் குறைத்தால் மட்டுமே, இந்த வங்கிகளை ‘பி.சி.ஏ’ கட்டுப்பாட்டி லிருந்து வெளியே கொண்டுவர முடியும்.

வாராக் கடனைக் காலப்போக்கில் குறைக்க ஆர்.பி.ஐ நடவடிக்கை எடுத்து வந்தாலும், அரசுத் தரப்பிலிருந்து திவால் நிறுவனங்களின் சொத்துகளை வேகமாக விற்று, அந்தப் பணம் வங்கிகளைத் திரும்ப வந்தடையத் தேவை யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

வங்கிகளின் வாராக் கடன் பிரச்னைக்கு யார் காரணம் என்று விவாதிப்பதை விட்டுவிட்டு, இனி என்ன செய்தால் வாராக் கடன் குறையும் என்று யோசித்தால் மட்டுமே புதிய நிதி அமைச்சரின் நோக்கம் நிறைவேறும். அதற்கான வேலையை மத்திய அரசாங்கம் செய்யத் தொடங்கட்டும்!

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick