பங்குச் சந்தை முதலீடு... தற்கொலைக்கு காரணமா?

விழிப்பு உணர்வு

சென்னை கொரட்டூரைச் சேர்ந்த அமலா ஜான், அவரது மகன் ஜோஷ்வா இருவரும் தீபாவளிச் சீட்டு நடத்தி வந்தனர். சுமார் 275 பேரை உறுப்பினராகச் சேர்த்து தீபாவளிச் சீட்டு நடத்திவந்த இவர்கள், சீட்டுப் பணத்தை பங்குச் சந்தையில் முதலீடு செய்து அதிக லாபம் பார்க்க நினைத்திருக்கிறார்கள். ஆனால், அவர்கள் எதிர்பார்த்ததுபோல, அதிக வருமானம் கிடைக்காததால், தீபாவளிச் சீட்டுக்கு பணம் கட்டியவர் களுக்குப் பணத்தைத் திருப்பித் தரமுடியவில்லை. இந்த விரக்தியால் அவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். 

இவர்களின் தற்கொலைக்குப் பங்குச் சந்தைதான் காரணமா? நிச்சயமாக இல்லை. அதிக எதிர்பார்ப்பும், தவறான முதலீட்டு வழிகாட்டலுமே காரணமாக இருக்க வாய்ப்புள்ளது. பங்குச் சந்தை பற்றி சரியாகப் புரிந்துகொள்ளாமல், குறுகிய காலத்தில் கொள்ளை லாபம் பார்த்துவிடலாம் என்கிற பேராசையில் இறங்குவது ஏமாற்றத்தில்தான் முடியும் என்பதற்கு இந்த தற்கொலை ஒரு சிறந்த உதாரணம்.
 
பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் பணம், நம் சொந்தப் பணமாக இருக்க வேண்டும். ஏனெனில், நம்முடைய முதலீட்டுக் கணக்கு பல்வேறு புறச்சூழல்களால் தவறாகும்போது, பங்குச் சந்தை இறக்கம் கண்டு, தற்காலிகமாக வருமானம் குறைய வாய்ப்புள்ளது. ஆனால், சூழ்நிலை சீராகி, பங்குச் சந்தை ஏற்றம்பெறும்போது வருமானம் அதிகரிக்கக்கூடும். இடைப்பட்ட காலத்தில் வருமான இழப்பைத் தாங்கிக்கொண்டு முதலீட்டைத் தொடர நம் முதலீடு சொந்தப்பணமாக இருப்பது அவசியம். 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick