அடமானப் பங்குகள்... சிறுமுதலீட்டாளர்கள் உஷார்! | Editor Opinion - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (17/02/2019)

அடமானப் பங்குகள்... சிறுமுதலீட்டாளர்கள் உஷார்!

ஹலோ வாசகர்களே..!

அடமானப் பங்குகள்... சிறுமுதலீட்டாளர்கள் உஷார்!

அனில் அம்பானி குழுமத்தின் ரிலையன்ஸ் பவர், ரிலையன்ஸ் கேப்பிட்டல்,  ரிலையன்ஸ் இன்ஃப்ரா நிறுவனப் பங்குகளின் விலை நான்கு வர்த்தக தினங்களில் 30-60% வீழ்ச்சி கண்டுள்ளன. இதனை அடுத்து இந்தப் பங்குகளில் முதலீடு செய்துள்ளவர்கள் கதிகலங்கிபோய் இருக்கிறார்கள். பங்குகளின் விலை இவ்வளவு அதிகமாக இறங்கக் காரணம், இந்த நிறுவனங்களின் பங்குகளை அடமானம் பெற்ற எல் & டி ஃபைனான்ஸ், எடில்வைஸ் குழுமம் அதிரடியாகப் அந்தப் பங்குகளை விற்றுதள்ளியதே ஆகும். மார்ஜின் பற்றாக்குறை காரணமாக இப்படிப் பங்குகள் விற்பனை செய்யப்பட்டிருக்கின்றன.

இந்த நிறுவனங்களின் செயல் சட்ட விரோதமானது, விசாரணை தேவை என அனில் அம்பானி குழுமம் கோரிக்கை வைத்திருக்கிறது. ஆனால், சட்டபடிதான் செயல்பட்டிருக்கிறோம் என எல் & டி ஃபைனான்ஸ், எடில்வைஸ் குழுமம் சொல்லி இருக்கின்றன.

அடமானம் பெற்ற நிறுவனங்கள் ஒரு நிறுவனத்தின் பங்குகளை குறிப்பிட்ட அளவுக்கு மேல் விற்பனை செய்யும்போது விலைச்சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடுகிறது.  பல மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள், பங்குகளை அடமானம் வைத்து கடன் வாங்கிய நிறுவனங்களுக்குக் கடன் கொடுத்திருக்கின்றன. இப்படி சில கம்பெனிகளுக்கு ரூ.25,000 கோடிக்கு மேல் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்கள் கடன் வழங்கி இருக்கின்றன. 

எது எப்படி இருந்தாலும் உண்மையில் அதிகம் பாதிக்கப்பட்டிருப்பது சிறு முதலீட்டாளர்கள்தான். காரணம், அவர்களுக்கு அவர்கள் முதலீடு செய்திருக்கும் பங்குகளின் விலை இந்தவித விற்பனையால், அவர்கள் சுதாரிப்பதற்கு முன்னரே கடுமையான விலைச்சரிவை சந்தித்துவிடுகிறது.

அடமானம் சம்பந்தப்பட்ட தகவலை உடனுக்குடன் முதலீட்டாளர்களுக்கு பங்குச் சந்தை மூலம் சொல்லுதல், கண்காணித்தல் போன்ற பலவிதமான பரிகாரங்களை சட்ட ரீதியாக அமல்படுத்திவந்த போதிலும், சிறுமுதலீட்டாளர்கள் இதுபோன்ற சூழலில் பாதிக்கப்படுவது தவிர்க்கப்பட வேண்டுமென்றால் அவர்கள் உஷாராக இருக்கவேண்டும் என்பதுதான் நிதர்சனமான உண்மை.

நிறுவனர்களின் கைவசம் இருக்கும் பங்குகளில் அடமானம் செய்யப்பட்ட சதவிகிதம் அதிகமாக இருக்கும்பட்சத்தில், இதுபோன்ற பிரச்னைகள் நிச்சயமாக உருவாகும் என்பதை சிறுமுதலீட்டாளர்கள் புரிந்து கொள்ளவேண்டும். ஏனென்றால், சந்தையில் திடீரென இதுபோன்று அடமானம் செய்யப்பட்ட பங்குகள் அளவுக்கு அதிகமான எண்ணிக்கையில் விற்பனைக்கு வரும்போது, கடுமையான விலைச்சரிவு என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிடும். நிறுவனர்களின் பங்குகள் அடமானத்தில் இல்லாத நிறுவனங்களில் மட்டுமே முதலீடு செய்யவேண்டும்.  அப்படி ஒரேயடியாகத் தவிர்த்துவிட முடியாதபட்சத்தில் ஐம்பது சதவிகிதத்தைத் தாண்டி அடமானம் செய்யப்படும்போது அந்த நிறுவனங்களில் முதலீடு செய்வதைத் தவிர்ப்பதும், ஏற்கெனவே செய்திருக்கும் முதலீடுகளிலிருந்து வெளியேறுவதும் நல்லது.

- ஆசிரியர்

[X] Close

[X] Close