யாரைத் திருப்திப்படுத்த யாரைத் தண்டிப்பது? | Editorial page - Nanayam Vikatan | நாணயம் விகடன்

யாரைத் திருப்திப்படுத்த யாரைத் தண்டிப்பது?

ஹலோ வாசகர்களே..!

பிப்ரவரி 1 முதல் அதிகத் தள்ளுபடி தரக்கூடாது; கேஷ் பேக் போன்ற பணத்தைத் திரும்பத் தரும் சலுகைகளை அளிக்கக்கூடாது எனப் பல நிபந்தனைகளைக் கொண்டுவந்ததன்மூலம் இ-காமர்ஸ் நிறுவனங்களின் நடவடிக்கைகளைச் சீரமைக்கும் வேலையைச் செய்துள்ளது மத்திய அரசாங்கம்.

மத்திய அரசின் இந்த முடிவுகளில் சிலவற்றைத் தாராளமாக வரவேற்கலாம். சில இ-காமர்ஸ் நிறுவனங்கள் தாங்கள் முதலீடு செய்துள்ள நிறுவனங்களிடம் இருந்தே 60-70% பொருள்களை வாங்குகின்றன. இதனால் மற்ற நிறுவனங்கள் தாங்கள் தயாரிக்கும் பொருள்களை இ-காமர்ஸ் நிறுவனங்களிடம் விற்க முடியாத நிலை ஏற்படுகிறது. எல்லா நிறுவனங்களும் தாங்கள் உற்பத்தி செய்த பொருள்களை இ-காமர்ஸ் நிறுவனங்களிடம் விற்கவேண்டும் என்பதன் அடிப்படையில், ஒரு குறிப்பிட்ட நிறுவனத்திடமிருந்து 25% வாங்கக் கூடாது என்று மத்திய அரசாங்கம் சொல்லியிருப்பது சரிதான்.

ஆனால், இந்த விதிமுறையை நடைமுறைப்படுத்தினால் வெளிநாட்டு நேரடி முதலீடு இ-காமர்ஸ் துறையில் வருவது நின்றுபோகும். இதனால் அந்த நிறுவனங்களின் வளர்ச்சி வேகம் தடைபடுவதுடன், அது அளித்துவரும் பல லட்சம் வேலைகள் காணாமல் போகும். கடந்த நான்கு ஆண்டுகளில் மத்திய அரசு பெரிய அளவில் வேலைவாய்ப்பை உருவாக்காத நிலையில், இ-காமர்ஸ் நிறுவனங்கள்மூலம் கிடைக்கும் வேலைவாய்ப்பும் இல்லாமல் போவது வருத்தம் தரும் உண்மை.

ஆனால், தள்ளுபடி தரக்கூடாது, கேஷ்பேக் தரக்கூடாது என்றெல்லாம் சொல்வது காலத்துக்கேற்ற செயல்பாடல்ல. காரணம், இதனால் பயன்பெறுவது மக்களே தவிர வேறு யாருமல்ல. மொத்தமாகப் பொருள்களை வாங்குவதன் மூலமும், இடைத்தரகர்களின் தலையீட்டைத் தவிர்ப்பதன் மூலமும் குறைந்த விலையில் பொருள்களை வாங்கி, அதிகம் தள்ளுபடி தருகிறது. பிற வணிக நிறுவனங்களால் இதைச் செய்ய முடியவில்லை என்பதற்காக இ-காமர்ஸ் நிறுவனங்களும் இதைச் செய்யக்கூடாது என்று சொல்வது எப்படி சரியாகும்?

அண்மையில் நடந்த ஐந்து மாநிலத் தேர்தல்களில் சில மாநிலங்களில் தோல்வி அடையக் காரணம், வணிகர்களின் ஆதரவினை இழந்ததுதான் என பா.ஜ.க நினைக்கிறது. இன்னும் சில மாதங்களில் நடக்கும் பொதுத்  தேர்தலிலும் இதே நிலை ஏற்பட்டுவிடக்கூடாது என்பதற்காக  இப்படிப்பட்ட நடவடிக்கைகளை எடுக்கிறதோ என்கிற சந்தேகம் எழவே செய்கிறது. ஆனால், வணிகர்களின் ஆதரவை பா.ஜ.க இழக்கக் காரணம், ஜி.எஸ்.டி வரிதான் என சிறு வணிகர்கள் சொல்கிறார்கள்.

மத்திய அரசாங்கம் இப்போது எடுத்திருக்கும் இந்த நடவடிக்கையை நான்கு ஆண்டுகளுக்குமுன் எடுத்திருந்தால், அதை சந்தேகத்துக்கு இடமின்றிப் பாராட்டலாம். இப்போது கொண்டு வந்திருப்பது யாரையோ திருப்திப்படுத்த, யாரையோ தண்டிப்பது போன்ற செயல்பாடுதான்.  இனிவரும் காலத்திலாவது சரியான நடவடிக்கைகளை மத்திய அரசாங்கம் எடுக்கவேண்டும்!

- ஆசிரியர்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick