இறக்கத்தில் ஃபான்க் பங்குகள்... ஆபத்தில் அமெரிக்கச் சந்தைகள்!

- ஆர்.மோகன பிரபு,
சார்ட்டட் ஃபைனான்ஷியல் அனலிஸ்ட்

மெரிக்க முதலீட்டாளர்களுக்குப் பல கசப்பான அனுபவங்கள் ஏற்பட்டு, மறக்கப்பட வேண்டிய ஆண்டாகவே 2018 அமைந்துள்ளது. முக்கியக் குறியீடான எஸ் & பி 500 கடந்த ஆண்டில் (2018-ல்) சுமார் 11% வரை வீழ்ச்சி அடைந்துள்ளது. இந்த ஆண்டு தனது வரலாற்று உச்சமதிப்பிலிருந்து 19% வரை சரிந்துள்ளது.

தொழில்நுட்ப நிறுவனப் பங்குகளைப் பிரதிபலிக்கும் நாஸ்டாக் இண்டெக்ஸின் பத்தாண்டு காளை ஓட்டம் சுமார் 8% வீழ்ச்சியுடன் நிறைவு பெறவுள்ளது. நாஸ்டாக் சுமார் 23% மதிப்பைத் தனது உச்சத்திலிருந்து இழந்திருக்கிறது. உலகின் மிக நீண்ட வரலாறு கொண்ட பெஞ்ச்மார்க் இண்டெக்ஸான டவ் ஜோன்ஸ் 12% இறக்கம் கண்டிருக்கிறது. அமெரிக்க சந்தைகளின் வீழ்ச்சிக்கான காரணங்கள் என்ன, 2019-ல்  இதன் விளைவுகள் எப்படி இருக்கும், இதனால் இந்தியப் பங்குச் சந்தைகளில் என்ன மாதிரியான மாற்றம் வரும் என்பதைப் பார்ப்போம்.  

  ஃபெடரல் ரிசர்வின் பணமீட்சித் திட்டம்

கடந்த 2008-ல் நேரிட்ட உலகப் பொருளாதார நெருக்கடியைத் தொடர்ந்து, அமெரிக்காவின் மத்திய வங்கியான ஃபெடரல் ரிசர்வ் பண வழங்கல் (Qunatitative Easing) திட்டத்தின் அடிப்படையில் சுமார் 4 ட்ரில்லியன் டாலர் பணத்தை (இந்திய மதிப்பில் சுமார் ரூ.280 லட்சம் கோடி) மூன்று தவணைகளில் சந்தைகளுக்குள் இறக்கியது. மேலும், 4.5% அளவுக்கு இருந்த முக்கிய வட்டி விகிதத்தை ஃபெடரல் ரிசர்வ் ஜீரோவுக்கு அருகில் எனும் அளவுக்குக் குறைத்தது. மிகக் குறைந்த வட்டி விகிதம் மற்றும் மிக அதிக அளவில் புழக்கத்திலுள்ள பணம் ஆகிய இரண்டும் சேர்ந்துகொள்ள, பெரிய  நிறுவனங்களுக்குக் குறைந்த வட்டி விகிதத்தில் எளிய முறையில் சந்தையில் கடன் கிடைக்கத் தொடங்கியது. பல பெரிய நிறுவனங்கள், கடன் வாங்கி தமது பங்குகளைச் சந்தையில் இருந்து வாங்கத் தொடங்கின. இதனால் பங்குகளின் விலை உயரத் தொடங்கின. பங்கின் தனிப்பட்ட வருவாயும் உயரத் தொடங்கியது. முதலீட்டாளர்களின் கவனமும் பங்குச் சந்தைகளை நோக்கித் திரும்பத் தொடங்கியது. ட்ரம்ப் ஆட்சியின் வரிச் சலுகைகளும், அமெரிக்க பொருளாதாரத்தின் சிறப்பான வளர்ச்சியும் பங்கு சந்தைகளுக்கு அதிக ஊக்கத்தைக் கொடுத்தன.

ஆனால், கடந்தாண்டு அக்டோபரில் ஃபெடரல் ரிசர்வ் நிதிச் சந்தைகளுக்கு வழங்கிய நிதியை திரும்பப் பெற்றுக்கொள்ள தொடங்கியது. மாதந்தோறும் சுமார் 50 பில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் ரூ.3.5 லட்சம் கோடி) என்ற அளவுக்குப் பணத்தை ஃபெடரல் ரிசர்வ் திரும்பப் பெற்றுக்கொள்வது என்ற (Withdrawal of Quantitative Easing) திட்டம் சற்று காலதாமதமாகவே சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவில் வட்டி விகிதத்தை வளர்ச்சி மந்தமடையலாம் என்ற அச்சமும் கூடவே சேர்ந்துகொள்ள, அமெரிக்கப் பங்கு சந்தைகள் பெருமளவு வீழத் தொடங்கின.

அமெரிக்காவில் வட்டி விகிதத்தை உயர்த்துவது தொடர்பாக அமெரிக்க ஃபெடரல் வங்கிக்கும், அமெரிக்க அதிபர் ட்ரம்பிற்கும் கடுமையான கருத்து மோதல் நடந்துவருகிறது. அடிக்கடி வட்டி விகிதத்தை உயர்த்தக்கூடாது என்கிறார் ட்ரம்ப்.

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick