சரியான நடவடிக்கைக்கு அரசியல் நோக்கம் கற்பிக்கக்கூடாது! | Editor Opinion - Nanayam Vikatan | நாணயம் விகடன்

சரியான நடவடிக்கைக்கு அரசியல் நோக்கம் கற்பிக்கக்கூடாது!

ஹலோ வாசகர்களே..!

சரியான நடவடிக்கைக்கு அரசியல் நோக்கம் கற்பிக்கக்கூடாது!

சிறுதொழில் நிறுவனங்களுக்கு நன்மை செய்யும் விதமாக இன்னொரு சிறப்பான நடவடிக்கையை எடுத்திருக்கிறது மத்திய அரசாங்கம். ரூ.20 லட்சத்துக்குமேல் டேர்ன்ஓவர் செய்யும் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரியைக் கட்டவேண்டும் என்றிருந்த நிலையை மாற்றி, ரூ.40 லட்சத்துக்குமேல் டேர்ன்ஓவர் செய்யும் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி வரியைக் கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறது மத்திய அரசாங்கம். 59 நிமிடத்தில் கடன், இ-காமர்ஸ் நிறுவனங்களுக்குப் புதிய கட்டுப்பாடுகள் என்கிற நடவடிக்கைகளைத் தொடர்ந்து, இதுவும் வந்திருப்பது சிறுதொழில்களைச் செய்கிறவர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்கிறது.

இந்த மாற்றத்தின் காரணமாக மத்திய அரசாங்கத்துக்குக் கிடைக்கும் ஜி.எஸ்.டி வரி வருமானம் ரூ.5,200 கோடி அளவுக்குக் குறைய வாய்ப்புண்டு. கடந்த டிசம்பரில் ரூ.97,637 கோடியிலிருந்து ரூ.94,726 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த நிலையில் ரூ.5,200 கோடியையும் சேர்த்தால்,   ஜி.எஸ்.டி மூலம் கிடைக்கும் வருமானம் ரூ.90 ஆயிரம் கோடிக்கும் கீழே சென்றுவிட வாய்ப்பு உண்டு. என்றாலும், இந்த நடவடிக்கையால் சிறுதொழில் நிறுவனங்கள் மிகவும் நன்மை அடையும் என்பதில் சந்தேகமில்லை.

காரணம், ஜி.எஸ்.டி வரி கொண்டுவந்தபோது பெரு நிறுவனங்கள் அதை எளிதாக ஏற்றுக்கொண்டன. வரி விஷயத்தில்  நன்கு பரிச்சயம் கொண்டவை யாக இருந்ததால், ஜி.எஸ்.டி வரிமுறை பெரு நிறுவனங்களுக்கு பிரச்னையாக இல்லை. ஆனால், சிறுதொழில் நிறுவனங்களோ இந்தப் புதிய வரிமுறையைப் பின்பற்ற முடியாமல் தவித்தன. ரூ.1 கோடிக்கு மேல் டேர்ன்ஓவர் செய்யும் நிறுவனங்கள் மட்டுமே வரி செலுத்தும்படி மாற்ற வேண்டும் என சிறுதொழில் நிறுவனங்கள் கோரிக்கை வைத்தன. ரூ.75 லட்சத்துக்கு உயர்த்தப்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி சமீபத்தில் சொன்னார். அந்த அளவுக்கு இந்த வரம்பு உயர்த்தப்படவில்லை என்றாலும், ரூ.40 லட்சம் அளவுக்கு உயர்த்தப்பட்டிருப்பதன்மூலம் இனி பல சிறுதொழில் நிறுவனங்கள் ஜி.எஸ்.டி பற்றிய கவலை இல்லாமல் வியாபாரம் செய்ய முடியும்.

அதேசமயம், வரி வரம்பினை இந்தமாதிரி அடிக்கடி மாற்றியமைப்பது சரியான விஷயமாக இருக்காது. இதனால் வரி கட்டுபவர்களின் எண்ணிக்கை குறைந்து, அரசுக்கு வரும் வருமானம் எதிர்காலத்தில் கணிசமாகக் குறைந்துவிடும். அப்போது வளர்ச்சித் திட்டங்களுக்குத் தேவையான நிதியானது அரசிடம் இல்லாமல்போய், கடன் வாங்கி பல திட்டங்களை நிறைவேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுவிடும்.

எனினும், மத்தியில் கூடியசீக்கிரம் பொதுத் தேர்தல் வருகிறது. சிறுதொழில் நிறுவனங்களின் ஆதரவைப் பெறவே மத்திய அரசாங்கம் இந்த மாற்றத்தைக் கொண்டுவந்திருக்கிறது என்று அரசியல் உள்நோக்கம் கற்பிக்கக்கூடாது. சிறுதொழில் நிறுவனங்கள் அனைத்தும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொண்டு, தொழிலில் முன்னேற்றம் காணவேண்டியது அவசியம்.

 - ஆசிரியர்
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick