பட்டா மனை பாதுகாப்பானதா? | Business Question and Answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (02/06/2019)

பட்டா மனை பாதுகாப்பானதா?

சி.எம்.டி.ஏ / டி.டி.சி.பி அப்ரூவ்டு வீட்டு மனை, பட்டா வழங்கப்பட்ட வீட்டு மனை - இவை இரண்டுமே பாதுகாப்பான வீட்டு மனைகள்தானே?
- கேசவன், திருச்சி

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

“இரண்டுமே பாதுகாப்பானவைதான். எனினும் சி.எம்.டி.ஏ / டி.டி.சி.பி அப்ரூவ்டு வீட்டு மனைகளில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா என்பதை அங்கீகாரம் கொடுக்கும்முன் அவர்களே சரிபார்த்து விடுவார்கள். ஆனால், பட்டா உள்ள வீட்டு மனையில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா என்பதை வழக்கறிஞர் உதவியோடு நீங்கள்தான் சரிபார்த்துக் கொள்ள வேண்டும். தமிழ்நாட்டின் தற்போதைய சட்டப்படி, பட்டா மனை என்கிறபோது சி.எம்.டி.ஏ/டி.டி.சி.பி-க்கு விண்ணப்பித்து மனைக்கு அங்கீகாரம் பெற்றுக்கொள்வது நல்லது.”

என் அப்பாவின் உயில்மூலம் எனக்குக் கிடைத்த சொத்தினை விற்றதால் எனக்கு 20 லட்சம் ரூபாய் கிடைத்தது. இந்த வருமானத்துக்கு நான் வரிக் கட்ட வேண்டுமா?
- நவநீதகிருஷ்ணன், திருமங்கலம்

கே.ஆர்.சத்யநாராயணன், ஆடிட்டர்

“உங்கள் அப்பா அந்தச் சொத்தினை வாங்கிய தேதியின்படி, அது குறுகியகால மூலதன ஆதாயமா அல்லது நீண்டகால மூலதன ஆதாயமா என்பது முதலில் கணக்கிடப்படும். சொத்தை  இரண்டு ஆண்டுக்குள் வாங்கியிருந்தால்,  குறுகியகால ஆதாயம் வரும்.  உங்கள் வருமானம் எந்த வரி வரம்பில் உள்ளதோ, அந்த அளவில் வரி செலுத்தவேண்டும். நீண்ட கால ஆதாயம் என்கிறபட்சத்தில், இண்டக்சேஷன்படி கணக்கிட்டு ஆதாயம் எவ்வளவு வருகிறதோ அந்தத் தொகைக்கு வரிச் செலுத்த வேண்டும். நீண்டகால மூலதன ஆதாயம் என்றால் 20% வரிச் செலுத்த வேண்டும்.”