வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா? | Nanayam Questions and answers - Nanayam Vikatan | நாணயம் விகடன்

வெளியிடப்பட்ட நேரம்: 06:00 (03/03/2019)

வீட்டின் முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

நான் வசிக்கும் வீடு தரைதளம் மற்றும் முதல் தளத்தைக் கொண்டது. எனக்கு இப்போது பணச் சிக்கல். முதல் தளத்தை மட்டும் விற்க முடியுமா?

கதிரேசன், விழுப்புரம்

த.பார்த்தசாரதி, சொத்து ஆலோசகர்

“தாராளமாக விற்கலாம். இதற்கு உங்கள் வீட்டின் பிளானில் முதல் தளத்தை விற்க அனுமதி பெற்றிருக்கவேண்டியது அவசியம். முதல் தளத்தின் வீட்டை வாங்குபவருக்கு, அந்த வீட்டின் பரப்பளவு விகிதத்துக்கேற்ப வீட்டு மனையின் பரப்பில் பிரிக்கப்படாத நிலப்பகுதியைக் (UDS) கணக்கிட்டு, அவருக்கு ஒதுக்க வேண்டும். மாடியில் கட்டுமானம் இல்லாத காலியிடம் இருந்தால், அது உங்களுக்கே சேரும். மேல்தள வீட்டுக்குத் தனி மின் இணைப்பு, கதவு எண், மேலே செல்வதற்கான படிகள் உள்ளிட்ட மற்ற விவரங்களையும் இறுதிசெய்த பிறகு விற்பனை செய்யலாம்.”

நான் ஒரு மகளிர் சுயஉதவிக் குழுவில் இருக்கிறேன். என் குழுத் தலைவி, தனியார் நிதி நிறுவனம் மூலமாக எனக்குக் கடன் வாங்கித் தருவதாகச் சொல்கிறார். `அந்தத் தனியார் நிதி நிறுவனம் ரிசர்வ் வங்கியின் அனுமதி பெற்றுள்ளதா?’ எனச் சந்தேகம் வருகிறது. அதில் கடன் பெறலாமா?

ஈஸ்வரி, சாத்தூர்.

ஆர்.செல்வமணி, கனரா வங்கி உதவிப்  பொது மேலாளர் (ஓய்வு)

“வங்கிகளில் கடன் பெறுவதுதான் பாதுகாப்பான வழிமுறை. வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்களை ரிசர்வ் வங்கியால் கண்காணிக்க மட்டுமே முடியும். அதன் செயல்பாடுகளில் நேரடியாகத் தலையிடமுடியாது. சிபில் ஸ்கோரில் சரியான ரேட்டிங் இல்லாத வர்களும், வங்கி கேட்கும் எல்லா ஆவணங்களையும் தரமுடியாதவர்களும்தான் தனியார் நிதி நிறுவனங்களை நாடுவார்கள். எனவே, இதற்கான ரிஸ்க்கையும் அவர்களேதான் ஏற்க வேண்டும்.”

[X] Close

[X] Close