உலகின் முதல் முன்னோடி!

ஜியா உல் ஹக்

''தம்பி ராஜேந்திரன் அரைக்கால் சட்டை போட்டிருந்த காலத்திலேயே என் விரலைப் பிடித்துக்கொண்டு அரசியலுக்கு வந்தவன். உலகத்திலேயே ஒரு நடிகர் தேர்தலில் போட்டியிட்டு சட்டமன்ற உறுப்பினராக வெற்றிபெற்றார் என்ற பெருமையும் என் தம்பிக்குத்தான்!'’ -இப்படி பேரறிஞர் அண்ணாவால் பாசத்துடன் குறிப்பிடப்பட்டவர் எஸ்.எஸ்.ராஜேந்திரன்.

சிவாஜி கணேசனுடன் 'பராசக்தி’ படத்திலேயே இணைந்து தோன்றியவர்; திரையுலகில் எம்.ஜி.ஆருக்கும் சிவாஜிக்கும் இடையிலான இடைவெளியை நிரப்பும் பாணியை கைக்கொண்டவர்; பெரியார், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா... என தமிழக அரசியல் ஆளுமைகளுடன் நெருக்கமான நட்பில் இருந்தவர்; திராவிடக் கட்சிகளுடன் கொண்ட நெருக்கம் காரணமாக பக்தி படங்களில் நடிக்க மாட்டேன் என்ற கொள்கையுடன் இருந்ததால் 'லட்சிய நடிகர்’ எனக் குறிப்பிடப்பட்டவர்; சினிமா பிரபல்யம் தேர்தலில் வாக்குகளை ஈர்க்கும் என்பதை அண்ணா உணர, முதல் உதாரணமாக இருந்தவர்; அ.தி.மு.க-வுக்கு எதிராகவே 'எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர் கழகம்’ தொடங்கி, பின்னர் எம்.ஜி.ஆரின் தலையீட்டால் சமரசம் ஆனவர்; 1980-ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் (எம்.ஜி.ஆரின் வெற்றி வித்தியாசத்தைவிடவும்) ஆண்டிப்பட்டி தொகுதியில் வென்றவர்; இறுதிக் காலம் வரை எம்.ஜி.ஆருடன் நெருக்கமான நட்புகொண்டிருந்தவர்; அ.தி.மு.க இரண்டாக உடைந்தபோது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக நின்றவர்... என சினிமாவிலும் அரசியலிலும் எஸ்.எஸ்.ஆரின் பயணம்... பல அடுக்கு அனுபவங்களைக் கொண்டது. அந்தப் பயணி கடந்த வாரம் நிரந்தர நித்திரையில் ஆழ்ந்துவிட்டார்.  86-வது வயதில் உடல்நலக் கோளாறு காரணமாக இயற்கை எய்திவிட்டார் எஸ்.எஸ்.ஆர்.  

மறைவுக்கு ஒரு மாதம் முன்பாக அகநி பதிப்பகம் வெளியிட்ட 'நான் வந்த பாதை' நூலில் தன் சுயசரிதையை சிறுசிறு அனுபவங்களாகத் தொகுத்திருக்கிறார்  எஸ்.எஸ்.ஆர். அதில் இருந்து சில பகுதிகள் இங்கே...

'ரொம்ப சின்ன வயசுலயே அஞ்சாம் கிளாஸ் முடிச்சிட்டேன். அதுக்கு மேல படிக்க நகரப் பள்ளிக்குப் போகணும். போனாலும் வயசைக் காரணம¢ காட்டி அஞ்சாவதில்தான் சேர்ப்பாங்க. அதனால் ஒரு வருஷம் கழிச்சே சேர்க்கலாம்னு வீட்ல முடிவு பண்ணிட்டாங்க. அப்பதான் அப்பாவோட நண்பர் நாடகக் குழு ஓனர் சுப்பு ரெட்டியார் என்னை நாடகத்தில் நடிக்க அழைச்சிட்டுப் போனார்.'

அதுவே பிறகு டி.கே.எஸ். நாடகக் குழுவில் எஸ்.எஸ்.ஆரைச் சேர்த்து சினிமாவுக்குள்ளும் பிரவேசிக்க வைத்தது. மதுரைக்கு ஒருமுறை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் வந்தபோது, நாடகத்தில் இருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு அந்தக் கூட்டத்துக்குச்  சென்றிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். மேடையில் நேதாஜி ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆக்ரோஷமாகப் பேசியதைக் கேட்டவருக்கு, அரசியல் ஆர்வம் உள்ளுக்குள் துளிர்த்தது.

சினிமாவில் எஸ்.எஸ்.ஆரின் நெருங்கிய நண்பர் சிவாஜி கணேசன். முதல் சந்திப்பிலேயே இருவருக்குள்ளும் அடர்த்தியான நட்பு பூத்தது. அந்த முதல் சந்திப்பை எஸ்.எஸ்.ஆர் இப்படி விவரிக்கிறார்...

'டி.பி.பொன்னுச்சாமி பிள்ளை நாடகக் குழுவில் இருந்து பெண்ணைப்போல நீளமான தலைமுடி, நீண்ட மூக்கு, பளிச் கண்களுடன் கவர்ச்சியான தோற்றத்தில் ஒரு பையன் வந்திருந்தார். 'இந்தப் பையன் கணேசன். இன்று இரவு இங்கு தங்கட்டும்'னு சொல்லிட்டுப் போனார் பொன்னுச்சாமி ப¤ள்ளை. அடுத்த நாள் அவர் திரும்புவதற்குள் நீண்ட நாள் பழகிய நண்பர்களைப்போல நாங்கள் மாறியிருந்தோம்.'  

'பராசக்தி’ படத்தில் சிவாஜியின் சகோதரராக நடித்த பிறகு சினிமாவில் ஜொலிக்க ஆரம்பித்த எஸ்.எஸ்.ஆர்., தனது கணீர் வசன உச்சரிப்பால் ரசிகர்களை பெரும் அளவு ஈர்த்தார். அந்த ஈர்ப்பே அவருக்கு 'சினிமா ஹீரோ’ அந்தஸ்தையும் வழங்கியது.

பெரியார் மீது கொண்ட பற்றினால் அடிக்கடி அவரைச் சந்திப்பார் எஸ்.எஸ்.ஆர். அப்போது பெரியாருடன் பகுத்தறிவுக் கொள்கைகளைப் பற்றிய சந்தேகங்கள்... உரையாடலாக, வாக்குவாதமாக வடிவம் எடுக்கும். 'சிறுவன்தானே’ என எண்ணாமல் பெரியாரும் எஸ்.எஸ்.ஆருக்குப் புரியும்விதமாகப் பேசுவார். அப்படி ஒருமுறை விவாதத்தின்போது, 'பகுத்தறிவுக் கொள்கை எல்லாம் கத்துக்கிடுறது இருக்கட்டும். முதலில் நீங்க சிக்கனக் கொள்கையைக் கத்துக்கங்க. நீங்க வர்றப்பலாம் நானும் பார்க்கிறேன்... முழுக்கை சட்டைதான் போட்டுட்டு வர்றீங்க. அதை அரைக்கை சட்டையா போட்டுக்கிட்டா, மிச்சத் துணியில் ரெண்டு கைக்குட்டை செஞ்சுக்கலாம்ல!’ என்று கேட்டிருக்கிறார் பெரியார். அந்த அளவுக்கு எஸ்.எஸ்.ஆர் மீது உரிமையும் பிரியமுமாக இருப்பார் பெரியார்.  

அண்ணா மீது எஸ்.எஸ்.ஆருக்கு அளப்பரிய அன்பு. அவருடன் அறிமுகம் ஏற்படுத்திக்கொண்டு, நாடகத்துக்கு விடுப்பு கிடைக்கும்போது எல்லாம் காஞ்சிபுரம் சென்று அண்ணாவை அருகில் இருந்து ஒரு ரசிகனாக ரசிப்பார். ஒருமுறை அண்ணா வெளிநாடு செல்ல வேண்டி வந்தது. அப்போது எஸ்.எஸ்.ஆரை அழைத்த அண்ணா, 'நீ சினிமாவில் நடித்தபோது அணிந்த கோட் சூட்களைக் கொடு. அதை எனக்கு தகுந்த மாதிரி ஆல்டர் செய்துகொள்கிறேன்’ என்று கேட்டிருக்கிறார். 'புதிதாகவே தைக்க ஏற்பாடு செய்கிறேன்’ என எஸ்.எஸ்.ஆர் சொன்னபோதும் 'எதுக்கு வீண் செலவு?’ என மறுத்து பழைய கோட் களையே கொண்டுவரச் சொல்லியிருக்கிறார் அண்ணா. 'சரி... சரி...’ என்றபடி அண்ணாவுக்கே தெரியாமல் புதிய ஆடைகளைத் தைத்துக் கொடுத்து அண்ணாவை வெளிநாட்டுக்கு வழியனுப்பி வைத்தார் எஸ்.எஸ்.ஆர். சுற்றுப்பயணம் முடித்து திரும்பிவந்த அண்ணா, போப் தனக்குப் பரிசு அளித்த பேனாவை எஸ்.எஸ்.ஆருக்குக் கொடுத்தார். இப்படி இருவருக்கும் இடையில் தந்தை-மகன் பாசப் பிணைப்பு இருந்தது.

தி.மு.க. தலைவர் கருணாநிதியுடன் கல்லூரித் தோழன்போல நட்பு பாராட்டியிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். நாடகங்களில் தன்னுடன் ஹீரோயினாக நடித்து வந்த பங்கஜத்தைக் காதலித்தார்         எஸ்.எஸ்.ஆர். பங்கஜத்தின் சொந்த ஊரான திருவனந்தபுரத்துக்குச் சென்று பெண் கேட்ட சம்பவத்தை காதல் நினைவுகளாகப் பகிர்ந்திருக்கிறார்.

1958-ம் ஆண்டு ஜனவரியில், பெரியார் மற்றும் தமிழகத் தலைவர்களை விமர்சித்து அப்போதைய பிரதமர் நேரு பேசியதைக் கண்டித்து, 'நேரு சென்னை வரும்போது கறுப்புக்கொடி காட்ட வேண்டும்’ என அண்ணா சொல்லியிருக்கிறார். அப்போது கழகத்தில் தீவிரமாக இருந்த எஸ்.எஸ்.ஆர்., எம்.ஜி.ஆர் உள்பட அனைவரும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டிருக்கிறார்கள். எஸ்.எஸ்.ஆரைக் கைதுசெய்து மதுரை சிறையில் வைத்தபோது அதே அறையில்தான் எம்.ஜி.ஆரும் இருந்திருக்கிறார்.

'பெயர்தான் முதல் வகுப்பு அறை. ஆனால், அது மிகவும் சின்னது. படுக்க திண்ணை மாதிரி ஒரு மேடை. அதில் அழுக்காக மூட்டைப்பூச்சிகள் நெளியும் ஒரு மெத்தை. அதைத் தூக்கிப்போட்டுவிட்டு நானும் எம்.ஜி.ஆரும் தரையிலேயே படுத்தோம். அடுத்த நாள் அலுமினியத் தட்டில் சிவப்பு அரிசி சாதம் கொடுத்தார்கள். எந்தச் சலனமும் இல்லாமல் எம்.ஜி.ஆர் அதைச் சாப்பிட்டார். 'இந்த மாதிரி சாப்பாட்டை சின்ன வயசிலேயே சாப்பிட்டுப் பழகியிருக்கேன். அதனால் இது எனக்குப் புதுசு கிடையாது'னு சொன்னார்' என்று அந்த நாட்களை நினைவுகூர்கிறார் எஸ்.எஸ்.ஆர்.

அண்ணா மறைந்த பிறகு அவரது இழப்பைத் தாங்கிக்கொள்ள முடியாமல் தவித்த எஸ்.எஸ்.ஆர் அதிக அளவு மது அருந்தத் தொடங்கியிருக்கிறார். இரவில் அண்ணா சமாதிக்குச் சென்று அங்கேயே தூங்கிவிடுவாராம். இது தினசரி சம்பவமாகி இருக்கிறது. பிறகு உடல்நலம் பாதித்து மருத்துவமனை சிகிச்சைக்குப் பிறகே தேறி வந்திருக்கிறார்.  

சப்பைக்கட்டு காரணம் சொல்லி தி.மு.க-வில் இருந்து எஸ்.எஸ்.ஆர் விலக்கப்பட்டபோது, அ.தி.மு.க-வில் சேர்ந்தார். அங்கும் சில விரும்பத்தகாத சூழ்நிலை காரணமாக மனம் ஒடிந்து, 'எம்.ஜி.ஆர்-எஸ்.எஸ்.ஆர் கழகம்’ தொடங்கி  சேடப்பட்டி தொகுதியில் சுயேட்சையாகப் போட்டியிடப் போவதாக அறிவித்தார். ஆனால், எம்.ஜி.ஆர் தரப்பில் இருந்து வந்த சமாதானம் காரணமாக அந்த முடிவைக் கைவிட்டார். பிறகு எம்.ஜி.ஆரைச் சந்தித்து நடந்த விவரங்களைச் சொல்ல, மீண்டும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட்டிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். பிறகு ஆண்டிப்பட்டி, மதுரை மேற்கு தொகுதிகளில் எம்.ஜி.ஆர் - எஸ்.எஸ்.ஆர். இருவருமே அ.தி.மு.க சார்பாகப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்யும் அளவுக்கு இருவரிடையே நட்பு இறுக்கம் ஆனது. பிறகு மதுரை மேற்கில் எம்.ஜி.ஆரும், ஆண்டிப்பட்டியில் எஸ்.எஸ்.ஆரும் போட்டியிட, மற்ற மனுக்களை இருவரும் வாபஸ் வாங்கியிருக்கிறார்கள். அந்தத் தேர்தலில் தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் எஸ்.எஸ்.ஆர் ஜெயிக்க, 'மந்திரி சபையில் உனக்கும் இடம் உண்டு. எந்த அமைச்சர் பதவியை வேண்டுமானாலும் கேள்’ என்று எம்.ஜி.ஆர் கேட்க, 'அமைச்சர் பதவி எனக்கு வேண்டாம். நீங்கள் மீண்டும் மீண்டும் வலியுறுத்துவதால் கேட்கிறேன்... முதலமைச்சர் பதவி கொடுப்பீர்களா?’ எனச் சிரித்துக்கொண்டே கேட்டிருக்கிறார் எஸ்.எஸ்.ஆர். அதைவிட ஆரவாரமாகச் சிரித்துவிட்டு சிறுசேமிப்புத் துறை துணைத் தலைவர் பதவியை அவருக்குக் கொடுத்து அழகு பார்த்தார் எம்.ஜி.ஆர்.

1989-ல் அ.தி.மு.க உடைந்து ஜெயலலிதா தலைமையிலான அணிக்காக சேவல் சின்னத்தில் தேர்தலில் போட்டியிட்டார் எஸ்.எஸ்.ஆர். அந்தத் தேர்தலில் தோல்வி அடைந்தார். அது முதல் பொதுவெளியில் இருந்து ஒதுங்கியே இருந்தார் எஸ்.எஸ்.ஆர்.

உலகிலேயே தேர்தலில் போட்டியிட்டு வென்று மக்கள் மன்றத்துக்குள் நுழைந்த முதல் நடிகர் எஸ்.எஸ்.ஆர்-தான். அந்த விதத்தில் அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர்., ஆந்திர முதல்வர் என்.டி.ராமாராவ் ஆகியோருக்கே முன்னோடி எஸ்.எஸ்.ஆர்!  

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick