உலகம் முழுக்க பறை ஒலிக்கட்டும்!

த.வா.நல்லிசைஅமிழ்துபா.அருண்

''சொய்ங் சொய்ங் சொய்ங் சொய்ங்... 

கையளவு நெஞ்சத்திலே கடலளவு ஆசை மச்சான்'

'கும்கி’ படத்தின் புகழ்பெற்ற இந்தப் பாடலை அம்மா அழகாகப் பாட, இசையமைப்பாளர் இமானுக்குப் பதிலாக பறை இசைத்து, பார்வையாளர்களை ஆடவைக்கிறார்கள் அந்தச் சிறுவர்கள்.

''என் பேரு சமரன், இவன் என் தம்பி இனியன். நாங்க பரங்கிமலை, மேரியன் மெட்ரிக் பள்ளியில் 9 மற்றும் 7ம் வகுப்பு படிக்கிறோம். இவங்கதான் என் அம்மா, மகிழினி். கும்கி படத்தி்ல் அந்தப் பாடலைப் பாடினவங்க. என் அப்பா மணிமாறன், பறை இசைக் கலைஞர். 'புத்தர் கலைக் குழு’ என்ற கலைக்குழு மூலம் நிறைய நிகழ்ச்சிகளை நடத்திட்டு இருக்கார். நாங்களும் ஒன்றாம் வகுப்புப் படிக்கும்போதே பறையை கையில் எடுத்துட்டோம்' என்று மகிழ்ச்சியுடன் தங்களை அறிமுகம் செய்துகொள்கிறார்கள் அந்தச் சிறுவர்கள்.

இருவரும் இணைந்து, இதுவரை 500க்கும் மேற்பட்ட மேடை நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளனர்.

''தமிழர்களின் பாரம்பரிய இசைக் கருவிகளில் முதன்மையானது, பறை இசைக் கருவி. எல்லா இசைக் கருவிகளுக்கும் முதல் கருவி. முரசு, தபேலா போன்ற கருவிகளுக்கு எல்லாம் முன்னோடி இதுதான். கற்காலத்தில், மனிதன் தகவல்களைப் பரிமாறிக்கொள்ள இந்தக் கருவியைத்தான் பயன்படுத்தினான். மகிழ்ச்சிக்கான கருவியாக இருந்த பறை, காலப்போக்கில் இறப்பில் வாசிக்கப்படும் இசையாக மட்டுமே மாறியது வருத்தமான விஷயம்' என்கிறார் சமரன்.

''இப்போ, அந்த நிலை மாறிட்டு இருக்கு. இந்தப் பறைக் கலையால், எங்கள் பள்ளியில் நாங்க சிறப்பு விருந்தாளிகள் மாதிரி. திருமண வரவேற்பு நிகழ்ச்சிகள் உட்பட, பல கலை நிகழ்ச்சிகளில் பறை இசைக்கக் கூப்பிடுறாங்க. அதுபோன்ற நிகழ்ச்சிகளில் 30 நிமிஷம், 45 நிமிஷம் ஆடிக்கிட்டே தொடர்ச்சியா பறையை அடிப்போம். கை விரல்கள், கால்கள், தோள்பட்டைகள் வலிக்கும். ஆனா, நிகழ்ச்சியை முடிச்சதும் பார்வையாளர்களிடம் இருந்து வரும் கைத்தட்டல் எல்லாத்தையும் மறக்கவெச்சு, இன்னும் கொஞ்ச நேரம் அடிக்கலாம்னு தோணும்' என்று உற்சாகம் பொங்கச் சொல்கிறார் இனியன்.

ரோபோட்டிக் இன்ஜினீயர் ஆக வேண்டும் என்பது இவரது இலக்கு. ''அப்பவும் பறை இசைப்பதை விட மாட்டேன். ஏன்னா, நம் பாரம்பரியக் கலையைப் பாதுகாக்கவேண்டியது  நம் கடமை' என்கிறார்.

''நானும் அப்படித்தான். எங்க அப்பா காலத்து பறை இசைக் கலைஞர்களில் பெரும்பாலானோர் படிக்காதவங்க. நான், கலெக்டருக்குப் படிக்கப்போறேன். ஒரு மிகிஷி பறையடிச்சா, எல்லாரும் கவனிப்பாங்கல்ல. அதான் எங்களுக்கு வேணும். பறை இசையைத் தவிர, வேறு இசைக் கருவிகளிலும் பயிற்சி எடுக்கிறோம். நான் கீபோர்டு வாசிப்பேன். இனியன் ட்ரம்ஸ்ல செகண்ட் கிரேடு முடிச்சிருக்கான். பறை இசையை உலகம் முழுக்க ஒலிக்கச் செய்வோம்' என்கிறார் சமரன்.

''மற்ற இசைக் கருவிகளில் பயிற்சி எடுப்பது போல வீட்டிலேயே இதற்கு பயிற்சி எடுக்க முடியாது. அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க ரொம்ப டிஸ்டர்ப்பா நினைப்பாங்க. வீடுகள் இல்லாத தனி இடத்தில்தான் பயிற்சி எடுக்கணும். அதுக்காக, ஒவ்வொரு வாரமும்   ஞாயிற்றுக்கிழமைக்காகக் காத்திருப்போம். பெசன்ட் நகரில் எங்க அப்பா நடத்தும் பயிற்சிப் பட்டறைக்குப் போவோம்' என்கிறார் இனியன்.

இவர்களின் ஆசானும் அப்பாவுமான மணிமாறன், 'இந்த இசைக் கருவியின் மீதான சமூகப் பார்வை சமீபமாக நிறைய மாறியிருப்பது சந்தோஷமா இருக்கு. என் சின்ன வயசில்  அப்படிக் கிடையாது. நிறைய அவமானங்களைச் சந்திச்சு இருக்கேன். ஆனாலும், நம் பாரம்பரியக் கலையை எல்லோரும் போற்றும் வகையில் உயர்த்தணும் என்பதில் உறுதியாக இருந்தேன். 'புத்தர் கலைக்குழு’ என்கிற குழுவை ஆரம்பிச்சு,  பறை இசை நிகழ்ச்சிகளை நாடு கடந்தும் நடத்திட்டு இருக்கிறோம். மூணு மாசத்துக்கு ஒருமுறை பயிற்சிப் பட்டறை நடத்துறோம். பெண்கள், சிறுவர்கள் எனப் பலரும் இதில் பங்கேற்று கற்றுக்கொள்கிறார்கள். பறை இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகவைத்து ஒரு வருட கோர்ஸ் ஒன்றையும் புதிதாக ஆரம்பித்திருக்கிறோம். நம்ம தொன்மையான இசையை இழக்காமல் பாதுகாக்க முடியும் என்கிற நம்பிக்கை வந்திருக்கு. இனியனும் சமரனும் அவங்களே விருப்பப்பட்டுதான் பறை அடிக்க ஆரம்பிச்சாங்க. இது எங்களுக்கு நம்பிக்கையைக் கொடுத்திருக்கு' என்கிறார் மகிழ்ச்சிக் குரலில்.

அம்மா மகிழினி, மீண்டும் பாடத் தொடங்க, சமரன் மற்றும் இனியன் தோள்களில் உட்கார்ந்துகொள்கிறது பறை. விரல்களில் ஏறிக்கொள்கின்றன குச்சிகள். அழகான இசை காற்றில் பரவுகிறது.


பறை சில குறிப்புகள்...

றீ 'பறை’ என்ற சொல்லுக்கு, 'பேசுதல்’ என்று பொருள். சங்க இலக்கிய நூல்களில் பறை பற்றிய நிறையக் குறிப்புகள் உள்ளன. குரவைப்பறை, சாப்பாறை, குறும்பறை, உவகைப்பறை, தமுக்கு, முரசம் என அந்தக் காலத்தில் 60க்கும் மேற்பட்ட பறை வகைகள் இருந்தன. ஒவ்வொரு நிலத்துக்கும் ஒரு சிறப்புப் பறை இருந்தது.

றீ இப்போது, தேர்ச்சி பெற்ற பறைக் கலைஞர்கள், புதிதாகக் கற்கும் பெரியவர்கள், சிறுவர்கள் என ஒவ்வொருவருக்கும் ஏற்ற வகையில் பறை தயாரிக்கப்படுகிறது. சிறுவர்களுக்கான பறை, எடை குறைவாக இருக்கும்.

றீ இது ஒரு தோல் கருவி. எருமை மாட்டுத் தோலில் பறை செய்யப்படுகிறது. ஆனால், உயிரோடு இருக்கும் மாட்டை இதற்காகக் கொல்ல மாட்டார்கள். இறந்த எருமை மாட்டின் தோலை எடுத்து, சுத்தம்செய்து 5 மணி நேரம் ஊறவைப்பார்கள். பிறகு, புளியங்கொட்டைகளை அரைத்து, பசையாகத் தயாரிப்பார்கள்.

றீவேப்ப மரத்தின் அடிப்பகுதியை எடுத்து, வட்ட வடிவமான பறைக் கட்டையை உருவாக்குவார்கள். இந்தக் கட்டையில் தோலை இழுத்துக் கட்டி, பசையால் இணைப்பார்கள். இரண்டு நாட்கள் நிழலில் காயவைப்பார்கள்.

றீ பறையை அடிக்கும் குச்சிகளுக்கு... அடிக்குச்சி, சிண்டுக் குச்சி (சிம்புக் குச்சி) என்று பெயர். வேம்பு, கொய்யா, பூவரசு போன்ற மரத்தில் இந்தக் குச்சிகளைத் தயாரிப்பார்கள்.

றீ கிராமங்களில் சிறு தெய்வ வழிபாடு, கோயில் திருவிழாக்களில் பறை இசைப்பது, பறையாட்டம் ஆகியவை முக்கிய நிகழ்வாக உள்ளன.

      யுவா    

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick