Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

[X] Close

ஜப்பானில் வாழ்கிறது தமிழ்!

இதுவும் தமிழனின் சாதனையே...

'தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம் பரவும் வகை செய்தல் வேண்டும்’ என்ற பாரதியின் கனவை மெய்ப்படச் செய்கிறார் சேலம் - ஓமலூரைச் சேர்ந்த முத்து. இவரால் தமிழ் வளர்வது ஜப்பானில்!

 ''நான் இன்டர்மீடியட் முடித்து பஞ்சாயத்து உதவியாளராகப் பணிபுரிந்தேன். 1942-ல் 'வெள்ளையனே வெளியேறு’ போராட்டத்தில் ஈடுபட்டு வேலையை உதறித் தள்ளினேன். இப்போதைய ஃபேஸ்புக் நண்பர்களைப் போல, அப்போது பேனா நண்பர்கள் இருப்பதும் தங்களுக்குள் நட்பு வளர்த்துக்கொள்வதும் வழக்கம். அப்படி என் மகன் சேகரின் பேனா நண்பராக இருந்தவர்தான் ஜப்பான், ஷீமாடா நகரைச் சேர்ந்த சூஜோ மாட்சுனுகா.

1981-ல் மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் கலந்துகொள்வதற்காகத் தமிழகம் வந்தார் சூஜோ. 'ஒரு ஜப்பானியன் பார்வையில் திருக்குறளும் திருவள்ளுவரும்’ என்ற தலைப்பில் பேச வந்தவரை, என் மகன் சேகர் எங்கள் வீட்டுக்கு அழைத்துவந்தான். தமிழ் இலக்கியம், தமிழர்களின் கலாசாரம், வரலாறு பற்றி நீண்ட நேரம் என்னுடன் உரையாடினார். அவர் ஜப்பான் மொழியில் எழுதிய 'இந்திய இலக்கியங்கள்’ என்ற நூலைக் காட்டினார். அதில் திருக்குறள் பற்றி ஒரு சில வரிகளே இருந்தன. அப்போது நான், 'நீங்கள் திருக்குறள் பற்றி ஜப்பான் மொழியில் விரிவாக எழுத வேண்டும். எங்கள் தமிழ் இலக்கியப் படைப்புகளை ஜப்பானிய மொழியில் அறிமுகப்படுத்த வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டேன். கட்டாயம் செய்வதாக வாக்குறுதி அளித்துச்சென்றார். அப்போது முதல் 36 ஆண்டுகளாக எங்கள் கடித நட்பு தொடர்கிறது.  

ஜி.யு.போப் மொழிபெயர்த்த திருக்குறள் ஆங்கிலப் பிரதியை வாங்கி அவருக்கு அனுப்பினேன். அவ்வப்போது மொழிபெயர்ப்பில் அவருக்கு ஏற்படும் சந்தேகங்களைக் கடிதங்கள் மூலம் நிவர்த்தி செய்தேன். சூஜோ, திருக்குறளை ஜப்பான் மொழியில் முழுமையாக மொழிபெயர்த்து முடித்தார். அடுத்ததாக, 'ஜப்பான் மக்களுக்கு பாரதியாரைத் தெரியுமா?’ என்று கேட்டேன். 'காந்தியடிகள், ரவீந்திரநாத் தாகூர், சுபாஷ் சந்திரபோஸ் ஆகியோரை ஜப்பானியர்களுக்குத் தெரியும். ஆனால், பாரதியாரைப் பற்றி தெரிய வாய்ப்பு இல்லை’ என்றார் சூஜோ. நான் பாரதியாரைப் பற்றி அவரிடம் விளக்கி, பாரதியின் கவிதைகளை ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்கச் சொன்னேன். பாரதியார் கவிதைகளின் ஆங்கிலப் பிரதியையும் அனுப்பி வைத்தேன்.

இப்படியே ஜப்பான் மொழியில் திருக்குறள், பாரதி கவிதைகள், வள்ளலார் பாடல்கள், நாலடியார், மணிமேகலை, சிலப்பதிகாரம் எனத் தமிழ் இலக்கியங்களை அவருக்கு அனுப்பி வைத்தேன். சூஜோவும் தீராத ஆர்வம் கொண்டு மொழிபெயர்த்தார். தவிர, நம்முடைய தமிழ்ச் சமூகத்து திருமணம், காது குத்து, பெண்கள் பூப்பெய்தல், இறப்புச் சடங்குகள் அனைத்தையும் புகைப்படங்கள் எடுத்து, அதற்கான விளக்கத்தையும் ஆங்கிலத்தில் எழுதி, ஜப்பானிய மொழியில் மொழிபெயர்க்க அவருக்கு உதவினேன்.  

ஜப்பானியர்கள் திருக்குறளை ஆர்வமாகப் படிக்கிறார்களாம். ஜப்பானில் ஒரு மகளிர்க் கல்லூரியில் திருக்குறளை ஒரு பாடமாகவே வைத்து உள்ளனர் என்ற தகவலை சூஜோ சொன்னபோது, நான் அடைந்த மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. பாரதியின் குயில் பாட்டும், 'வள்ளலார் வாய்ஸ்’ என்ற நூலும் ஜப்பானில் அமோக வரவேற்பைப் பெற்றுள்ளன. ஜப் பானில் சில புத்த விஹார்களில் வள்ளலார் புத்தகங்களை வைத்தும் வணங்குகிறார்களாம். 'சமத்துவம், ஜீவகாருண்யம், அனைவரிடத்திலும் அன்பு பேணுதல் ஆகியவற்றில் புத்தர் மற்றும் வள்ளலாரின் கருத்துகள்  ஒரே மாதிரியானவை’ என்று சூஜோ அடிக்கடி என்னிடம் சொல்வார்.

இதை எல்லாம்விட, சூஜோ செய்த ஒரு விஷயம் என்னை மிகவும் நெகிழவைத்துவிட்டது. 'தமிழ் இலக்கியங்களை ஜப்பான் மொழியில் மொழிபெயர்க்க, தமிழகத்தைச் சேர்ந்த முத்து என்பவர் எனக்கு மிகவும் உதவினார்’ என்று சூஜோ ஜப்பான் அரசிடம் பரிந்துரை செய்ததன் விளைவு, ஜப்பான் அரசு 2007-ம் ஆண்டு என் உருவப்படம் பொறித்த தபால் தலையை வெளியிட்டது. இது ஜப்பான் மதிப்பில் 80 'யென்’. நம் நாட்டு மதிப்பில் 27 ரூபாய். சூஜோ தமிழ் மொழியின் சிறந்த படைப்புகளை ஜப்பானியர்களிடம்  பரப்பியதுபோல, நானும் ஜப்பானில் உள்ள சிறுகதைகளைத் தொகுத்து, 'ஜப்பானிய தேவதைக் கதைகள்’ என்ற தலைப்பில், தமிழில் புத்தகமாக எழுதி வெளியிட்டு உள்ளேன். 'மனித நாற்காலி’, 'முன்னொரு காலத்தில் ஜப்பானில்’ என்ற தலைப்புகளிலும் ஜப்பானிய இலக்கியங்களைத் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன்'' என்கிறார் முத்து.

தலைவணங்குவோம் இந்தத் தமிழருக்கு!

- வீ.கே.ரமேஷ்,படங்கள்: க.தனசேகரன்

விகடன் இதழ்கள் மற்றும் இ-புத்தகங்களை உங்கள் மொபைலில் படிக்க புதிய Vikatan APP
எனக்குப் பிடித்த புத்தகம்!
ஸ்மைல் ப்ளீஸ்!
Advertisement
Advertisement

அதிகம் படித்தவை

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement
[X] Close