''காக்கைக்கு ஏது கருவூலச் சம்பளம்?''

''மனிதன் ஞானமடையப் பிறந்தவன். அதற்கு உடல், மனம் இரண்டும் ஆரோக்கியமாக இருப்பது அவசியம். ஐம்புலன்களையும் கட்டணும். அப்படி மனதை நெற்றிப் பொட்டில் கொண்டுவந்துவிட்டால் மனிதன் எந்தச் சாதனையையும் செய்ய முடியும். அந்தச் சாதனையில் ஒன்றுதான் இந்தக் கவனகக் கலை!'' - தத்துவார்த்தமாகப் பேசுகிறார் கனக சுப்புரத்தினம். கவனகர் கனக சுப்புரத்தினம் என்றால் எளிதாகப் புரியும்.

 ''மதுரை சாலச் சந்தை கிராமம் சொந்த ஊர். பள்ளிப்படிப்பு, டீச்சர் டிரெயினிங், பட்டப் படிப்பு முடித்து வேலைக்காகக் காத்திருந்தேன். எந்த வேலையும் கிடைக்கலை. சரி 'நாமே சுயமாக ஒரு வியாபாரம் செய்யலாம்’ என முடிவு எடுத்து நாலு வருஷம் தெருத் தெருவா ஐஸ் வியாபாரம் பண்ணினேன். கொஞ்சம் பணம் புரள ஆரம்பித்தது. பிறகு ஆசிரியர் வேலை கிடைத்தது. 12 வருஷம் சிவகாசியில் வாத்தியார் வேலை.

என் தந்தையும் கவனகக் கலையில் சிறந்தவர். ஒரே நேரத்தில் பல விஷயங்களை கவனித்து, அதை மனதில் நிறுத்திகொள்வதற்குப் பெயர்தான் கவனகம். இதில் யாழ்ப்பாணம் கதிர்வேல் பிள்ளைதான் முன்னோடி. என் தந்தைக்குப் பிறகு இந்தக் கலையை யார் கையில் எடுப்பது என்ற கேள்வி எழுந்தபோது, 'இலக்கிய வீதி’ இனியவன், 'நீங்களே கையில் எடுங்க சுப்பு’ என்றார். எனக்கும் கவனகத்தில் ஆர்வமும், பயிற்சியும் இருந்ததால் களத்தில் இறங்கினேன். 1987-ல் திருக்கழுக்குன்றத்தில் என்னுடைய முதல் நிகழ்ச்சி. ஆரம்பத்தில் 10 கலைகளைச் செய்யும் 'தசாவதானி’யாக இருந்த நான், பயிற்சிக்குப் பிறகு குறள், எண், எழுத்து, பெயர், வண்ணம், கூட்டல், பெருக்கல், மாயக் கட்டம், படைப்பாற்றல், தொடு உணர்வு, ஒலி, கைவேலை, இசை, வினா-விடை விரிவுரை, கிழமை காணுதல், ஆங்கிலத் திருக்குறள் என 16 கவனகம் செய்யும் 'சோடசவதானி’யானேன்.

நிகழ்ச்சிகளுக்கு இடையே பல சுவாரஸ்யங்கள் நடக்கும். விழுப்புரம் பக்கத்தில் கண்டமங்கலத்தில் ஒரு நிகழ்ச்சி. 'வெண்பா கவனகம்’ வரும் போது, பார்வையாளர்களில் இருந்து ஒருவர் எழுந்து 'கவிக்கேது நாளை கணக்கு?’ என்று ஈற்றடி ஒன்றை எடுத்துக் கொடுத்தார். அந்த வரியை வைத்து நான் வெண்பா பாடணும். அதை அப்படியே நினைவில் வெச்சுகிட்டு மற்ற கவனகங்களை முடித்தேன். இறுதியில் அதே பார்வையாளர், 'நான் கேட்ட கேள்விக்குப் பதில் வரவில்லையே’ என்றார். அந்த வரியை வைத்து என்ன பாடுவது என்று தெரியாமல் விழித்தேன். அப்போது ஆலமரக் கிளையில் அமர்ந்திருந்த காகம், 'கா... கா...’ என கரைந்ததைக் கேட்டு, 'காக்கைக்கு ஏது கருவூலச் சம்பளம்/கூக்கூக்கூ கைக்கோ குழல்விளக்கு - ஆக்கும்/ புவிஉருவாக்கப் பொதுப்பணி செய்யும்/ கவிக்கேது நாளை கணக்கு?’ என்று ஒரு வெண்பாவைப் பாடினேன். நான் திணறிய நேரத்தில் அந்த காக்கை அடி எடுத்துக் கொடுத்தது.

ஒரு சமயம் என் தந்தையார் கோவை வானொலியில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டார். ஒரு நேயர் 'சம்சாரம், மின்சாரம் இந்த இரண்டையும் வைத்து ஒரு சிலேடை அமையுங்கள்’ என அவரைக் கேட்டு இருக்கார். அவரும் தாமதிக்காமல், 'சமயத்தில் ஒத்துழையா 'ஷாக்’கடிக்கும் தொட்டால்/ இமை சிமிட்டும் இன்ப மழை ஊட்டும் - நமை உயர்த்தும்/ தன்சாரம் குன்றாத தன்மையால் எஞ்ஞான்றும்/ மின்சாரம் சம்சாரமே!’னு பாடி ஆச்சர்யப்படுத்தினார். செய்குதம்பி பாவலர்னு ஒருவர் இருந்தார். அவர் 100 விஷயங்களை ஒரே சமயத்தில் செய்யும் சதாவதானி. ஒருமுறை அவருடைய நிகழ்ச்சியில் 'வாசனை கவனகத்தை’ செய்யவில்லை. நிகழ்ச்சியை முடித்துவிட்டு வெளியே வரும்போது, 'நாம 99 கவனகம்தானே முடிச்சிருக்கோம். ஒண்ணு குறையுதே’னு சந்தேகம். அப்படியே குதிரை வண்டியில் ஏறப்போனவர் அப்படியே நின்றார். 'ஏன்?’ என எல்லோரும் கேட்க, 'இங்க பாம்பு இருக்கு’ன்னாராம். அங்கிருந்த வைக்கோல் போரைத் தட்டிப் பார்த்தபோது அங்கே ஒரு பாம்பு இருந்திருக்கிறது. அப்போ பாவலர், 'என்னடா ஒரு கவனகம் குறையுதேன்னு நினைச்சேன். அல்லாவின் கருணையினால் அதுவும் நிறைவேறிடுச்சு’ன்னாராம்.

இப்படிப்பட்ட அரிய கவனகக் கலையை இன்று பொறுமையா உட்கார்ந்து கேட்பதற்கோ, கற்பதற்கோ ஆள் இல்லை. இருந்தாலும் என்னால் முடிந்த அளவு ஆர்வம் உள்ளவர்களுக்குப் பயிற்சி அளிக்கிறேன்.  'நாம கத்துக்கிட்ட கலையை அடுத்த தலைமுறைக்குக் கொண்டு செல்கிறோம்’ என்பது மட்டுமே எனக்கு சந்தோஷம் தரும் விஷயம்'' என்கிறார்.

- ந.வினோத்குமார், படங்கள்: வீ.நாகமணி

Do you like the story?

Please Appreciate the Author by clapping!

Editor’s Pick