கருணை காட்டும் கல்லீரல்!

மிகப்பெரிய ரசாயனத் தொழிற்சாலை கல்லீரல். இதில், நூற்றுக் கணக்கான வேலைகள் நடக்கின்றன. அளவுக்கு அதிகமான ரத்தத்தில் உள்ள சர்க்கரையை கொழுப்பாக மாற்றுவது, புரதத்தை உடைத்து உடலுக்கு ஏற்றவகையில் ஊட்டச்சத்தாக மாற்றிக்கொடுப்பது, ஊட்டச்சத்துக்கள் உடைக்கப்படும்போது வெளிப்படும் நச்சுக்களை நீர்த்துப்போகச் செய்து வெளியேற்ற வழிசெய்வது, உடலுக்குத் தேவையான சில ஊட்டச்சத்துக்களை சேமித்துவைப்பது, ரத்த உறைதலுக்கு தேவையான உதவிபுரிவது என்று 500-க்கும் மேற்பட்ட வேலைகளை கல்லீரல் மட்டுமே செய்கிறது.

 

இப்படி, சதாசர்வகாலமும், நம் உடல் நலனுக்காக ஓயாமல் உழைக்கும் கல்லீரல், தனக்கு ஏற்படும் பாதிப்புகளைக்கூட அவ்வளவு சீக்கிரத்தில் வெளிப்படுத்தாது. முடிந்தவரை சரிப்படுத்திக் கொள்ள முயற்சிக்கும். முடியாது என்ற நிலையில்தான் பிரச்னை வெளிப்படுகிறது. கொழுப்புமிக்க கல்லீரல், கல்லீரல் சுருக்கம் என்ற இரண்டு மிகப் பெரிய பிரச்னைகளை கல்லீரல் சந்திக்கிறது.  இதனால், ஏற்படும் பாதிப்புகளைப் பற்றி கல்லீரல் சிறப்பு மருத்துவர் ஜாய் வர்கீஸிடம் கேட்டோம்.

கொழுப்புமிக்க கல்லீரல்

''கல்லீரலில் ஏற்படக்கூடிய மிக முக்கியப் பிரச்னை, 'ஃபேட்டி லிவர்’ (கொழுப்புமிக்க கல்லீரல்). பொதுவாக, இதை மது அருந்துதலால் ஏற்படுவது, இதர காரணங்களால் ஏற்படுவது என்று இரண்டாகப் பிரிக்கலாம். அதிக அளவில் ஃபேட்டி லிவர் பிரச்னை என்று வருபவர்கள் மது அருந்துபவர்கள்தான். தவிர, சர்க்கரை நோய், ரத்தத்தில் கொழுப்பு அளவு அதிகரிப்பு, தைராய்டு சுரப்பில் பிரச்னை, உடல் பருமன், ஹெபடைட்டிஸ் பி, சி வைரஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கு இந்தப் பிரச்னை ஏற்படுகிறது.

கொழுப்பானது கல்லீரலில் படிந்து கல்லீரலின் பருமன் அதிகரிப்பதையே 'ஃபேட்டி லிவர்’ என்கிறோம். உதாரணத்துக்கு, சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தத் தவறும்போது, ரத்தத்தில் உள்ள குளுக்கோஸை கல்லீரல் கொழுப்பாக மாற்றுகிறது. இந்த கொழுப்பு கல்லீரலில் படியும்போது அது கொழுப்புமிக்க கல்லீரலாக மாறிவிடுகிறது. மது அருந்தும்போது ரத்தத்தில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கும் நேரத்தில், மதுவில் உள்ள ரசாயனங்கள் கல்லீரலில் கொழுப்பு அளவை அதிகரித்துவிடுவதால் இந்தப் பாதிப்பு ஏற்படுகிறது.

ஒவ்வொரு முறை கல்லீரல் பாதிக்கப்படும்போதும் அது தன்னைத்தானே சரிப்படுத்திக்கொள்ளும். இந்த செயல்பாட்டில் 'ஸ்கார் டிஸ்ஷூ’ எனப்படும் தழும்புகள் ஏற்படும்.

கொழுப்புமிக்க கல்லீரல் பிரச்னை, ஆரம்பநிலையில் இருக்கும்போது எந்த அறிகுறியையும் வெளிப்படுத்தாது. ஆனால், பிரச்னை கொஞ்சம் முற்றும்போது சோர்வு, உடல் எடை குறைவு, பசியின்மை, தளர்ச்சி, குமட்டல், குழப்பமான மனநிலை போன்ற அறிகுறிகள் வெளிப்படும். மேல் வயிற்றின் மையப் பகுதியில் வலி இருக்கலாம்.

எனவே, எதனால் கல்லீரல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பதை முதலில் கண்டறிய வேண்டும். மது அருந்துவதால் பிரச்னை என்றால், மதுப் பழக்கத்தை நிறுத்த வேண்டும். சர்க்கரை அளவு பிரச்னை என்றால் சர்க்கரையைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும். தைராய்டு பிரச்னை உள்ளவர்கள் அதற்கான மாத்திரை மருந்துகளை ஒழுங்காக எடுத்துக்கொள்வதன் மூலம் ஃபேட்டி லிவர் பிரச்னையை சரிப்படுத்தலாம். பிரச்னையை கவனிக்கத் தவறும்போது, கல்லீரல் செயல் இழப்பு ஏற்படலாம்.

கல்லீரல் சுருக்கம்:

கல்லீரல் செல்கள் வெளியேறி, தழும்பு ஏற்படும். அதுவே கல்லீரல் சுருக்கம் (Liver cirrhosis) என்ற சரிப்படுத்தமுடியாத பிரச்னையை ஏற்படுத்திவிடும். எல்லோருக்கும் இந்தப் பிரச்னை ஏற்படுவது இல்லை. ஃபேட்டி லிவர் பிரச்னை உள்ளவர்களில் 20 முதல் 30 சதவிகிதம் பேருக்கு கல்லீரல் சுருக்கம் ஏற்படலாம். இந்தப் பிரச்னை அவ்வளவு சீக்கிரத்தில் ஏற்பட்டுவிடாது.  15 முதல் 20 ஆண்டுகள்கூட ஆகலாம்.

கல்லீரல் பாதிப்புகளை ரத்த பரிசோதனை, குறிப்பிட்ட கால இடைவெளியில் அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை செய்துகொள்வதன் மூலம் ஓரளவுக்கு கண்டறிந்து சரிப்படுத்த முடியும்'' என்றார்.

கல்லீரல் பாதிப்பில் இருநது தப்பிக்க...

1. மது அருந்துவதைத் தவிர்க்கவும்.

2. ஹெபடைட்டிஸ் வைரஸ் கிருமியில் இருந்து தப்பிக்க தடுப்பூசி போட்டுக்கொள்ளவும்.

3. டாக்டர் பரிந்துரைத்த மருந்துகளைத் தவிர, வேறு மாத்திரை- மருந்துகளை எடுத்துக்கொள்ளக் கூடாது.

4. ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கத்தைப் பின்பற்றவும்.

5. ஆரோக்கியமான உடல் எடையைப் பராமரிக்கவும்.

6. தினசரி நடைப்பயிற்சி, உடற்பயிற்சி செய்யவும்.

7. சர்க்கரை, கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுக்குள் வைத்திருக்கவும்.

- பா.பிரவீன் குமார்

Do you like the story?

Please Appreciate the Author by clapping!