Published:Updated:

50 வகையான தைலம்... 420 வகையான காளான்கள்... கொடைக்கானலில் வியக்க வைத்த மாணவிகள்!

கொடைக்கானல்
News
கொடைக்கானல்

இந்த ஒரு தைலம் வீட்டை நறுமணத்தில் ஆழ்த்தும்... இதைச் சிறிது அடித்துக்கொண்டால் வீடே மணக்கும். சுவரில் பூஞ்சை வளராது. வீட்டில் ஒவ்வாத ஈரத் துணி துர்நாற்றம் இருந்தால் அவை முற்றிலும் அழிந்துவிடும்.

50 வகையான தைலம்... 420 வகையான காளான்கள்... கொடைக்கானலில் வியக்க வைத்த மாணவிகள்!

இந்த ஒரு தைலம் வீட்டை நறுமணத்தில் ஆழ்த்தும்... இதைச் சிறிது அடித்துக்கொண்டால் வீடே மணக்கும். சுவரில் பூஞ்சை வளராது. வீட்டில் ஒவ்வாத ஈரத் துணி துர்நாற்றம் இருந்தால் அவை முற்றிலும் அழிந்துவிடும்.

Published:Updated:
கொடைக்கானல்
News
கொடைக்கானல்

யூகலிப்டஸ் மரத்தின் பூர்வீகம் ஆஸ்திரேலியா. இவற்றில் பல   வகைகள் உள்ளன. கொடைக்கானல் பகுதியில் மட்டும் சுமார் 25 வகையான யூகலிப்டஸ் மரங்கள் உள்ளன என நம்பப்படுகிறது. இந்த மரத்தில் கடந்த 10 ஆண்டுகளாக ஆராய்ச்சி செய்து வருகிறார் பேராசிரியை உஷா ராஜா நந்தினி. இவர் கொடைக்கானலில் உள்ள அன்னை தெரசா பல்கலைக் கழகத்தின் உயிர் தொழில்நுட்பவியல் துறைத் தலைவியாகப் பணியாற்றிவருகிறார்.

50 வகையான தைலம்... 420 வகையான காளான்கள்... கொடைக்கானலில் வியக்க வைத்த மாணவிகள்!

இந்தப் பல்கலைக்கழகத்துக்குச் சென்றபோது, ஓர் அறையின் அருகே யூகலிப்டஸ் வாசனை மூக்கைத் துளைத்தது. அதற்குக் காரணம் பேராசிரியை உஷா ராஜா நந்தினியின் ஆய்வகம் என்று மாணவிகள் கூறினார்கள்.

அந்த ஆய்வகத்தில் இருந்த 50-க்கும் மேற்பட்ட வகை வகையான  யூகலிப்டஸ் தைலத்தைப் பார்க்க முடிந்தது. ஒன்று ரத்த சிவப்பு நிறத்திலிருந்தது. இன்னொன்று அடர் பச்சை நிறத்திலிருந்தது. சில மென்மையான இளம் பச்சை நிறத்திலும் இருந்தன. அடுத்து பளீர் மஞ்சள் நிறத்திலிருந்தது. அதன் அருகில் இளம் மஞ்சள் நிறத்திலும் ஒன்று இருந்தது. தண்ணீர் மாதிரி நிறமற்ற யூகலிப்டஸ் தைலத்தையும் பார்க்க முடிந்தது. தேங்காய் எண்ணெய் போல் ஒன்று காட்சி அளித்தது. கறுப்பு நிறத்திலும் சில இருந்தன.

இதைப் பற்றி அங்கிருந்த சுகன்யா பனிக்கர் என்ற மாணவியிடம் கேட்டேன்...

``இவையெல்லாம் நாங்கள் தயாரித்த யூகலிப்டஸ் தைலங்கள், நாங்கள் 15 வகையான யூகலிப்டஸ் மரங்களைப் பற்றி நன்கு தெரிந்து கொண்டோம். அதன் இலைகளிலிருந்து தயாரிக்கப் பட்டதுதான் இத்தனை வகையான யூகலிப்டஸ் தைலங்கள்” என்றாள்.

அத்துடன் அந்த மரத்தின் பெயர் பட்டியலை எனக்குக் காட்டிய போது, பார்க்க ஆச்சர்யமாக இருந்தது. காரணம் எனக்குத் தெரிந்ததெல்லாம் இளம் மஞ்சள் நிறத்தில் இருக்கும் யூகலிப்டஸ் தைலம் மட்டும்தான். யூகலிப்டஸ் தைலத்தின் சிறப்பே அதன்  வாசனைதான். ஒவ்வொன்றாக வாசனை பிடிக்கத் தொடங்கினேன். ஒன்று அப்படியே வழக்கமான யூகலிப்டஸ் தைலம் வாசனை. அடுத்ததிலிருந்து  சிறிது எலுமிச்சை நறுமணம் வந்து! வியப்பாக இருந்தது.

மாணவி சுகன்யா பனிக்கர்.
மாணவி சுகன்யா பனிக்கர்.

இதில் எலுமிச்சை சாறு கலந்தீர்களா? எனக் கேட்டேன். ``இல்லை. இது ஒரு வகை யூகலிப்டஸ் மரத்தின் வாசனை'' என்றாள் அந்த மாணவி.

அடுத்த குடுவையில் உள்ள தைலத்தைக் கையில் எடுத்தேன் அது ஒருவகை சுவிங்கத்தின் வாசனையாக இருந்தது. மேலும் mint என அழைக்கப்படும் புதினா இலை வாசனையிலும் தைலமிருந்தது!

இந்த 15 வகையான தைலத்தின் வேதிப் பொருள்களின் தன்மையும் மற்றும் அவற்றின் அடர்த்தியும் ஒன்றுக்கொன்று வித்தியாசமாகத்தான் இருந்தது. வண்ணமும் வாசனையும் எவ்வாறு வேறுபடுகிறது என அழகாக விளக்கினாள். யூகலிப்டஸ் பயன்பாடுகள் பற்றி அவர்கள் கூறியதைக் கேட்கப் புதுமையாக இருந்தது. தைலங்களின் நறுமண சூழலில் அதை பற்றி மேலும் கேட்டேன்.

சவித்தா  செல்வரத்தினம்
சவித்தா செல்வரத்தினம்

இந்த மலையில் உள்ள 15 யூகலிப்டஸ் மரத்தையும் எப்படி வகைப் படுத்தினாய்? என்று மாணவி சுகன்யா பனிக்கரிடம் கேட்ட போது, ``என் தோழி சவித்தா செல்வரத்தினம் கொடைக்கானலில் பிறந்த பெண்ணு, ஆராய்ச்சி பட்டப் படிப்புக்காக (Ph.D) யூகலிப்டஸ் மரத்தின் வகைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறாள். அவள் உதவியில்லாமல் என்னால் இத்தனை மரங்களின் வகைகளை அடையாளம் காண முடியாது" என்றாள்.

தயாரிப்பு முறை பற்றிக் கேட்டபோது, `தண்ணீரையே இதற்குப் பயன்படுத்தினேன். இதில் உள்ள வேதிப் பொருள்களைக் கண்டறியவும், பிரித்து எடுக்கவும், இந்தக் கருவியைத்தான் பயன்படுத்தினேன் என்று வாயு நிலையில் உள்ள வேதிப் பொருளைக் கண்டறியப் பயன்படும் கருவியான GC-MS (Gas Chromatography Mass-spectrometry) கருவியைக் காட்டினாள். தாமிரத்தகட்டில் அந்தக் கருவி செய்யப்பட்டிருந்தது. இதில் சில தைலம் பிளாஸ்டிகைக் கரைக்க வல்லது என்றாள். கேட்க வியப்பாக இருந்தது, அதைச் செய்தும் காட்டினாள்.

யூகலிப்டஸ் மரங்கள்
யூகலிப்டஸ் மரங்கள்

மக்களுக்கு எப்படியெல்லாம் பயன்படும்...

சரி, இந்தத் தைலம் மக்களுக்கு எந்த வகையில் பயன்படும் எனக் கேட்டேன்.

அதில் ஒருவகை யூகலிப்டஸ் தைலத்தைக் கையில் எடுத்துக் காட்டி, ``இந்த ஒரு தைலம் வீட்டை நறுமணத்தில் ஆழ்த்தும், இதைச் சிறிது அடித்துக்கொண்டால் வீடே மணக்கும். சுவரில் பூஞ்சை வளராது. வீட்டில் ஒவ்வாத ஈரத் துணி துர்நாற்றம்  இருந்தால் அவை முற்றிலும் அழிந்துவிடும்.

யூகலிப்டஸ் தைலத்தின் வாசனை உள்ள இடத்தில் சில பூஞ்சைகள் வளர்வதில்லை. இதனை சோதனை மூலம் நிரூபித்துள்ளேன். பல வகையான பூஞ்சைகளை இது அழிந்துவிடுகிறது. காற்றில் உள்ள கொரோனா போன்ற நோய்க் கிருமிகளையும் இது அழிக்கவல்லது என நம்புகிறேன். பூஞ்சைகள் வலுவானவை. இந்த நிலையில் காற்றில் உள்ள இந்த வைரசை இந்த தைலம் நிச்சயமாக அழிக்கும் வாய்ப்புள்ளது என்றாள்.  இந்த கண்டுபிடிப்பை ஆய்வுக்கட்டுரையாக வெளியிட்டுள்ளோம், இந்த கண்டுபிடிப்பைக் காப்புரிமையும் செய்துள்ளோம்'' என்றாள்.

தெரசா பல்கலைக்கழகம் , கொடைக்கானல்
தெரசா பல்கலைக்கழகம் , கொடைக்கானல்

``திறமையான மாணவ மாணவிகள் தங்களின் புதுமையான கண்டுபிடிப்பைக் கொண்டு தொழில் செய்தால் நிறைய சம்பாதிக்கலாம். உன்னிடம் நிறைய திறமை உள்ளது. இந்தத் தைலத்தை வைத்து நிறைய பயன்படும் பொருள்களைச் செய்யலாம். இரண்டு பொருள்களை உருவாக்கிய, நீ ஏன் இதை ஒரு வியாபாரமாகச் செய்யக் கூடாது? ஏதாவது ஒரு பொருளை இந்தியா முழுவதும் உன்னால் விற்க முடிந்தால் நீ இது மாதிரி ஒரு பல்கலைக்கழகத்தையே உருவாக்கலாம்" என்றேன்.

இது பற்றி வேறு என்னவெல்லாம் செய்திருக்கின்றீர்கள்? என்று அந்த மாணவியின் வழிகாட்டியான பேராசிரியை உஷா நந்தினியிடம் கேட்டபோது, அவர் கூறுகையில்,

``420 வகையான காளான்களைச் சேகரித்து வைத்திருக்கிறேன். இவற்றில் பல உணவாகப் பயன்படுகிறது. சில மருந்தாகப் பயன்படுகிறது. அரிதாக சில வகைகள் போதைப் பொருளாகவும் பயன்படுகின்றன.

பேராசிரியை உஷா நந்தினி
பேராசிரியை உஷா நந்தினி

கொடைக்கானலில் மலைப்பூண்டு விளைகிறது. இந்தப் பூண்டு தனித்துவமிக்க மருத்துவக்குணம் உள்ள ஒரு சிறந்த மூலிகை. இதற்குக் கொடைக்கானல் பூண்டு என்ற சான்றிதழைப் பெற்றுள்ளேன். அதனால் இந்தப் பெயரைப் பயன்படுத்தி வேறு இடத்தில் விளைகிற பூண்டை விற்க முடியாது. இந்தச் சான்றிதழை ஆங்கிலத்தில் geographical indication என்பார்கள். இந்த சான்றிதழ் மூலம் இந்த பூண்டை விளைவிக்கும் விவசாயிகள் அதிகம் பயனடைவார்கள்” என்றார். 

50 வகையான தைலம்... 420 வகையான காளான்கள்... கொடைக்கானலில் வியக்க வைத்த மாணவிகள்!

அத்தனை காளான்களையும் ஒரே இடத்தில் பார்க்க மலைப்பாக இருந்தது. யூகலிப்டஸ் காய்களை வைத்து பல வகையான கம்மல்களைச் செய்து வைத்திருந்தார். மொத்தத்தில் இந்தப் பேராசிரியை ஒரு தனித்துவமிக்க சிறந்த உழைப்பாளி எனப் புரிந்துகொண்டேன்.

இயற்கை நமக்கு அளப்பரிய சொத்துக்களை கொடுத்துள்ளது. அதை மனிதர்களின் பயன்பாட்டுக்கு சரியான முறையில் கொண்டு வர வேண்டும். ஒரு நாள் கொடைக்கானலுக்கு குளுமையான சுற்றுலா சென்றிருந்தாலும், வகை வகையான யூகலிப்டஸ் தைலங்கள், காளான்கள் பற்றித் தெரிந்துகொண்டது மன நிறைவாகவும் மகிழ்ச்சியாகவும் இருந்தது.