என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில்..? | Why do we have to depend on Tasmac ?

வெளியிடப்பட்ட நேரம்: 09:55 (04/08/2015)

கடைசி தொடர்பு:13:10 (04/08/2015)

என்ன வளம் இல்லை இந்த தமிழ்நாட்டில்..?

டாஸ்மாக்கின் சரக்கை, மூன்று வயது குழந்தை வரை கொண்டுபோய் சேர்த்திருக்கிறது தமிழக அரசு. மருத்துவக் காப்பீடு திட்டமும் நடத்துகிறார்கள், டாஸ்மாக்கை நடத்தி சுடுகாட்டுக்கும் ஆட்களை அனுப்புகிறார்கள். அம்மா குடிநீரையும் விற்கிறார்கள், சரக்கையும் விற்பனை செய்கிறார்கள். போதைப் பொருள் தடுப்புப் பிரிவும் வைத்திருக்கிறார்கள், மறுபக்கம் மது போதையையும் தருகிறார்கள். மதுவிலக்கே இல்லாத தமிழகத்தில்தான் மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை வேறு. கள்ளச்சாராயம் இல்லாத மாநிலத்தில் கள்ளச்சாராயத்தைத் தடுக்க காவலர்களுக்கு உத்தமர் காந்தி பதக்கம் வேறு. சாலை விபத்துகள், பாலியல் வன்கொடுமைகள், குடும்பத்தில் பெண்கள் துன்புறுத்தல், சட்டம்  ஒழுங்கு சீர்கேடு என அத்தனைக்கும் விதைப் புள்ளி டாஸ்மாக். ஆனால், டாஸ்மாக்கை மூட முடியாது என்கிறது அரசு.

 

அறமே இல்லாமல் ஆட்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள் ஆட்சியாளர்கள். டாஸ்மாக்குக்கு எதிரான கொந்தளிப்புகள் வீதிகள் வரை வந்து நிற்கின்றன. இது தொடர்ந்தால் அடுத்த ஆண்டு மே மாதம் வாக்குச்சாவடிகளில் புரட்சியாக வெடிக்கலாம். டாஸ்மாக்கை மூடினால் ஆண்டுக்கு 30 ஆயிரம் கோடி வருவாய் போய்விடும் என பஞ்சப்பாட்டு பாடுகிறார்கள். டாஸ்மாக்கை மூடினால் நிதியில்லாமல் தமிழகம் தள்ளாடுமா? நிதிப்பற்றாக்குறையைப் போக்க நிறைய விஷயங்கள் இருக்கின்றன. ஆனால், அரசுக்குத்தான் மனம் இல்லை. பற்றாக்குறையை எப்படி சமாளிக்கலாம்? ஆர்வலர்கள் யோசனைகளை சொல்கிறார்கள். அரசு செயல்படுத்துமா எனப் பார்ப்போம். ஆர்வலர்கள், மதுவிலக்கு ஆதரவாளர்கள் சொன்ன யோசனைகள் இங்கே அணிவகுக்கின்றன...

திரும்பிய பக்கம் எல்லாம் வளங்கள்!

இயற்கை வளம் மற்ற மாநிலங்களில் பூமிக்கு அடியில் புதைந்து கிடக்கிறது. தமிழகத்திலோ அது பூமிக்கு மேலேயே கிரானைட் பாறையாகவும் கனிம மணலாகவும் ஆற்று மணலாகவும் குவிந்து கிடக்கிறது. ஆனால், இந்த வளங்கள் மூலம் அரசுக்குக் கிடைக்க வேண்டிய வருவாய் தனியார் வாய்களுக்கு போய்க்கொண்டிருக்கின்றன. சட்டத்துக்குப் புறம்பாக இயற்கை வளங்கள் கொள்ளை போகின்றன. மதுரையில் மூன்று ஊர்களில் மட்டும் கிரானைட் கொள்ளைபோன தொகை ரூ.16,338 எனச் சொல்கிறார் சகாயம். அவருடைய விசாரணை இப்போது தொடர்ந்துகொண்டிருக்கிறது. தாது மணல் கொள்ளை தொடர்பாக ககன்தீப் சிங் பேடியின் விசாரணை அறிக்கை 2013 செப்டம்பர் 17ம் தேதி ஜெயலலிதாவிடம் அளிக்கப்பட்டும் ஏன் வெளிவரவில்லை என்பது மர்மமாக இருக்கிறது.

தாதுமணல்

கார்னெட், இல்லுமனைட் ஆகியவை ஒரு டன் ரூ.5,000. சிர்கான் ஒரு டன் ரூ.42,000. ரூடைல் ஒரு டன் ரூ.43,000. இது அரசுக்குச் செல்லும் வருமானம்தான். சராசரியாக ஒரு டன் தாதுமணல் விலை ரூ.10,000 மட்டுமே. ஆனால், உண்மையில் சந்தை விலை, சராசரியாக ஒரு டன்னுக்கு ஒரு லட்சம் ரூபாய். கடற்கரையில் எடுக்கப்படும் தாதுமணலில் விற்கும் விலையில் 3 சதவிகிதம் மட்டுமே அரசுக்குக் கிடைக்கிறது. தாது மணல் குவாரியின் மூலம் தினமும் சுமார் 2,500 லாரி லோடுகள் மூலம் சுமார் 10,000 டன் தாது மணல் எடுக்கப்படுகிறது. சந்தை விலையை ஒரு டன்னுக்கு மிகக் குறைவாக 50,000 விலை நிர்ணயித்தால்கூட கூடுதலாக ஒரு டன்னுக்கு 40,000 கிடைக்கிறது. தினமும் குறைந்தபட்சம் 40 கோடி ரூபாய் வீதம் ஆண்டுதோறும் 14,560 கோடி ரூபாய் திரட்ட முடியும். தாதுமணல் பிசினஸ் தனியாருக்குத்தான் தாரைவார்க்கப்பட்டிருக்கிறது. அந்த நிறுவனங்கள் 30,000 கோடிக்கு மேல் ஆண்டுதோறும் வருவாய் கிடைப்பதாக மதிப்பிட்டிருக்கின்றன. இவ்வளவு கரன்ஸிகள் புரளும் தொழிலை அரசே செய்தால் தாதுமணல் கொள்ளை போவதை தடுப்பதோடு, அரசுக்கு வருவாயும் கிடைக்கும். வேலைவாய்ப்பையும் உருவாக்க முடியும்.

மணல் குவாரிகள்

ஒரு லாரி லோடு மணலின் அரசு விலை (3 யூனிட்டுக்கு) 945 ரூபாய். லோடிங் அன்லோடிங் ஒரு லாரிக்கு 1,000 ரூபாய். 100 கிலோ மீட்டர் தூரத்துக்கு லாரி வாடகை அதிகபட்சம் 5,000. மொத்தம் 7,000 ரூபாய். அதிகபட்சமாக வைத்துக்கொண்டால் ஒரு லாரி லோடு மணலின் விலை 8,000 மட்டுமே. ஆனால், 15,000 வரை விற்கப்படுகிறது. சில மாவட்டங்களில் அதையும் தாண்டுகிறது. மணல் விற்பனையை அரசே தொடங்கிய 2003 அக்டோபர் முதல் 2010 மார்ச் வரையில் அரசுக்குக் கிடைத்த மொத்த மணல் விற்பனை வருவாய் எவ்வளவு தெரியுமா? வெறும் 840.37 கோடிதான். 2009  

2010ம் ஆண்டில் 42.49 கோடி மட்டுமே வருவாய் கிடைத்தது. மணல் குவாரிகளை அரசு ஏற்றதில் தொடங்கி, இன்று வரையிலான 11 ஆண்டுகளில் மணல் கொள்ளையால் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பு மட்டும் ரூ.2 லட்சம் கோடிக்கும் அதிகம். இதை மட்டும் அரசு தடுத்திருந்தால் தமிழக அரசின் 2 லட்சம் கோடி கடனை அடைத்திருக்க முடியும்.

மணல் கொள்ளையில் மட்டும் தமிழகத்தில் சுமார் 33,000 கோடி ரூபாய் ஆண்டுதோறும் அரசு அதிகாரிகள், மணல் மாஃபியாக்களுக்குக் கொள்ளை போய்க்கொண்டிருக்கிறது. ஒரு லோடுக்கு சராசரியாக 10,000 வரையில் கூடுதலாகக் கிடைக்கிறது. அதைவிட குறைவாகவே கணக்கிட்டாலே லாபம் சம்பாதிக்க முடியும். தினமும் எடுக்கப்படும் 90,000 லாரி லோடுகளுக்கு கணக்குப் பார்த்தால், ஒரு லாரி லோடுக்கு சுமார் 4,000 கூடுதலாகக் கிடைக்கிறது. இப்படி தினமும் 36 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு ரூ.13,100 கோடி அரசுக்குக் கிடைக்கும்.

நீர்நிலைகள்

50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தில் அணைகள், நீர்நிலைகள் போன்றவை அரசால் தூர்வாரப்படாமல் இருக்கின்றன. 39,202 ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், 5,000 கோயில் குளங்கள், 33 ஆறுகளில் 100க்கும் அதிகமான அணைகளும் தடுப்பணைகளும் இருக்கின்றன. இதைச் சரிப்படுத்தினால் மணல், வண்டல் மண் போன்றவை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு 10,000 கோடி வரையில் கரன்ஸி கிடைப்பதோடு தண்ணீர் சேமிப்பையும் இரண்டு மடங்கு அதிகரிக்கலாம்.

கிரானைட்

கிரானைட் குவாரியின் மூலம் தினமும் 500 குவாரிகளில் 4 கற்கள் மூலம் சுமார் 2,000 கிரானைட் கற்கள் வெட்டி எடுக்கப்படுகின்றன. ஒரு கிரானைட் கல் சுமார் 5 கனமீட்டர் முதல் 12 கனமீட்டர் வரை இருக்கும். கிரானைட் கற்களின் வகை மூலம் ஒரு கிரானைட் கல் ஒரு கனமீட்டர் சராசரியாக 2,500 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது. உண்மையில் இதன் சர்வதேச மார்க்கெட் விலை 50,000. தமிழகத்தில் தினமும் எடுக்கப்படும் 10,000 கனமீட்டர் கிரானைட் கல் மூலம் ஒரு கனமீட்டர் 33,000 ரூபாய்க்கு விற்கப்பட்டாலும்கூட ஒரு கனமீட்டர் 30,000 ரூபாய் கூடுதலாக விற்கப்படும். இதன்மூலம் தினமும் 30 கோடி ரூபாய் வீதம் ஆண்டுக்கு 10,950 கோடி ரூபாய் கிடைக்கும்.

கிராவல் மண்

தினமும் 2 லட்சம் லாரி லோடுகள் மூலம் கிராவல் மண் எடுக்கப்பட்டு வருகிறது. ஒரு லோடு கிராவல் மண்ணுக்கு அரசுக்குச் செலுத்தப்படும் தொகை வெறும் 90 ரூபாய்தான். பல வகைகளில் முறைகேடாக எடுக்கப்படும் கிராவல் மண் ஒரு லோடு 200 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டால் ஒரு நாளைக்குக் கூடுதலாக 110 வீதம் ரூ.2.20 கோடி கிடைக்கும். ஆண்டுக்கு ரூ.800 கோடி வரை கிடைக்கும்.

 

இலவசத் திட்டங்கள்

1,47,297 கோடி ரூபாய் அளவுக்கு 2015  2016ம் ஆண்டு தமிழக பட்ஜெட் போடப்பட்டிருக்கிறது. இதில் இலவசங்கள், மானியங்களுக்கு ஒதுக்கப்படும் தொகை மட்டும் 40 சதவிகிதம். இலவசங்களை விநியோகிக்கவும் அதைப் பராமரிக்கவும் ஆகும் செலவுகள் ஏழு சதவிகிதம். மொத்த பட்ஜெட்டில் 12 சதவிகிதம் வங்கிக் கடனுக்கு வட்டியாகக் கட்டப்படுகிறது. இலவசங்கள் மற்றும் மானியங்களுக்கும் 2015  2016ம் ஆண்டு ஒதுக்கப்பட்ட தொகை 59,185 கோடி. இது மொத்த பட்ஜெட்டில் 40 சதவிகிதம். பள்ளி மாணவர்களுக்கான கல்வி உபகரணங்கள் வழங்குதல், முதியோர், விதவைகள், ஆதரவற்றோருக்கு வழங்கப்படும் உதவித் தொகைகள் போன்றவை தொடருவதில் பிரச்னை இல்லை. மிக்ஸி, மின்விசிறி, கிரைண்டர், ஆடு  மாடு, லேப்டாப் போன்ற திட்டங்களைத் தவிர்த்தாலே பெருமளவில் பணம் மிச்சமாகும். 2011 முதல் 2016 வரையான காலகட்டத்தில் இந்தத் திட்டங்களுக்கு மட்டும் செலவழிக்கப்பட்ட தொகை 18,749 கோடி ரூபாய். சராசரியாக ஒரு வருடத்துக்கு 3,750 கோடி ரூபாய் இதற்காக செலவு பிடிக்கிறது. ஓட்டு வங்கியை குறிவைத்து வழங்கப்படும் இந்தத் திட்டங்களை முறைப்படுத்த வேண்டும்.

உணவு மானியம்

ரேஷன் பொருட்கள் வழங்குவதற்காக ஒவ்வோர் ஆண்டும் உணவு மானியமாக சுமார் 5,000 கோடி ரூபாய் வழங்கப்படுகிறது. போலி ரேஷன் கார்டுகளை ஒழித்து உணவுப் பொருட்கள் மற்றும் இலவச ரேஷன் அரிசி கடத்தல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்தினால் மானியத்தை 1,000 கோடி வரையில் குறைக்கலாம்.

கடனுக்கு வட்டி

தமிழக அரசின் 2015  16ம் ஆண்டின் நேரடிக் கடன் சுமை 2.06 லட்சம் கோடி. பொதுத்துறை நிறுவனங்களுக்குத் தனியாக 2 லட்சம் கோடி கடன் இருக்கிறது. ஒட்டுமொத்தமாக தமிழகத்தின் கடன்சுமை ரூ. 4,07,748 கோடியாக அதிகரித்திருக்கிறது. நேரடிக் கடனுக்காக மட்டும் நடப்பாண்டில் 17,945 கோடி வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது. பொதுத்துறை நிறுவன கடனுக்காக ஆண்டுக்கு 17,446 கோடி வட்டி செலுத்த வேண்டியிருக்கிறது. தமிழக அரசின் வருவாயில் 12.28 சதவிகிதம் வட்டிக்கே போய்விடுகிறது.

பன்னாட்டு நிதி நிறுவனங்கள், உலக வங்கியிலிருந்து கடன் வாங்குவதை குறைத்துவிட்டு எல்.ஐ.சி., நபார்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளிடமிருந்து கடன் வாங்கினால் வட்டி கணிசமாகக் குறையலாம். ஏற்கெனவே வாங்கிய கடனில் முழுமையாக மாற்றம் செய்ய முடியாது. ஆகவே, இனிவரும் காலங்களிலாவது இதை தவிர்க்கலாம். 2015  2016ல் 30,446 கோடி கடன் வாங்கத் திட்டமிட்டுள்ளது தமிழக அரசு. இதனை அமல்படுத்தினால் ஆண்டுக்கு பலநூறு கோடிகள் மிச்சமாகும். தோராய மதிப்பீட்டின் அடிப்படையில் 2015  2016ம் ஆண்டு கட்டப்படவுள்ள ரூ.17,856 கோடியில் ஐந்து சதவிகிதம் குறைந்தால்கூட அதிலிருந்து ஆண்டுக்கு ரூ.893 கோடி மிச்சமாகும்.

மதுவிலக்கை விலக்குவது ஏன்?

டாஸ்மாக்கை மூடினால் ஆட்சியாளர்களின் பைகளில் கரன்ஸிகள் கொட்டாது என்பதால்தான் வருவாய் இழப்பு என காரணம் சொல்கிறார்கள். வருவாய் இழப்பு அரசுக்கு அல்ல. அரசியல்வாதிகளுக்குத்தான். 11 மதுபான நிறுவனங்கள், 7 பீர் கம்பெனிகள், 1 ஒயின் கம்பெனி என 19 நிறுவனங்கள் டாஸ்மாக்குக்கு ‘சரக்கு’ சப்ளை செய்கின்றன. 2011-ல் அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தபிறகுதான் 4 மதுபான நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட்டிருக்கிறது. அரசியல் பின்புலத்துடன் இயங்கும் மதுபான உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆட்சியாளர்களின் கரிசனப் பார்வை எப்போதும் உண்டு. அதில் இரண்டு திராவிடக் கட்சிகளும் சளைத்தவை இல்லை. எலைட் டிஸ்டில்லரீஸ், எஸ்.என்.ஜெ டிஸ்டில்லரீஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களும் தி.மு.க ஆட்சியில் வளம் கொழித்தன. இப்போது மிடாஸுக்கு சுக்கிர திசை. இந்த நிறுவனங்களுக்கு ஆர்டர் வழங்குவதில் டாஸ்மாக் அதிகாரிகள் காட்டும் அக்கறையில் அவர்களின் பேங்க் பேலன்ஸ் எகிற ஆரம்பிக்கிறது. மதுபானத் தொழில் மிகப்பெரிய சந்தை என்பதால் அதிகாரிகள் மட்டத்தில் பணம் தண்ணீராய் பாய்கிறது. குடிபிரியர்கள் தங்களுக்கு விருப்பமான பிராண்டுகளைத் தேடி டாஸ்மாக் கடைகளுக்குப் போனால் அது கிடைக்காது அல்லது எப்போதாவதுதான் கிடைக்கும்.  பிரபலமில்லாத பிராண்டுகள்தான் டாஸ்மாக்கில் இருக்கும். எந்த பிராண்டுகளை கொள்முதல் செய்ய வேண்டும் என்பதை முடிவு செய்வது அதிகாரிகள் என்பதால், அவர்கள் காட்டில் கரன்ஸி மழை கொட்டுகிறது. ஆஃப், ஃபுல் பாட்டில்கள் மட்டுமே சரளமாகக் கிடைக்கும். குவார்ட்டர் பாட்டிலில் வருவாய் குறைவு என்பதால் அதையும் ஸ்டாக் வைக்காமல் பார்த்துக்கொள்வதும் அதிகாரிகளின் ராஜ்ஜியத்தில் நடக்கும் விவகாரம். இப்படி பலரின் பாக்கெட்டுகளில் வலம் சேர்க்கும் டாஸ்மாக்கை மூடினால் மது ஆலைகளை மூடவேண்டியிருக்கும்.

      எஸ்.ஏ.எம்.பரக்கத் அலி

தமிழகத்தில் உடனே மதுவிலக்கை அமல்படுத்த என் ஆதரவு: http://bit.ly/1gsKqKe

தமிழகத்தில் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்ற குரலுக்கு வலு சேர்க்கவும், அவை அரசின் கதவைத் தட்டவும் உங்கள் குரலை வாக்காக பதிவு செய்யுங்கள். பதிவு செய்தவர்கள் நண்பர்களுக்கு Share செய்க.. http://bit.ly/1gsKqKe

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்