புதுசுக்கு மவுசு - பகுதி 3

அறம்
உண்மை மனிதர்களின் கதைகள்

எழுத்தாளர் ஜெயமோகன் அண்மைக்காலத்தில் எழுதிய 12 சிறுகதைகளின் தொகுதி. அறம், சோற்றுக்கணக்கு, தாயார்பாதம், மயில்கழுத்து, வணங்கான், நூறுநாற்காலிகள், ஓலைச்சிலுவை, யானைடாக்டர், கோட்டி, உலகம் யாவையும்... இந்தச் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனத்தில் தாக்கத்தை ஏற்படுத்துபவை என்பது ஜெயமோகனை இணையத்தில் வாசிப்பவர்களின் கருத்து. குறிப்பாக, 'அறம்' உங்கள் உள்ளத்தை கலங்கடிக்கலாம். இந்த உண்மை மனிதர்களில், 'சோற்றுக்கணக்கு' கதையில் வரும் பாத்திரங்கள், இணைய வாசகர்களை வெகுவாக உலுக்கியது.

வெளியீடு: வம்சி புத்தகநிலையம்
விலை: ரூ.250.00

*

ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள்:
பிரபாகரனோடு புலிகள் அமைப்பை ஆரம்பித்த நாட்கள்…

விடுதலைப்புலிகள் இயக்கத்தை பிரபாகரனோடு ஆரம்பித்தவர்களில் ஒருவர் கணேசன். அவருடைய அரசியல் நினைவுகளை 'இனியொரு' என்ற வலைத்தளத்தில் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தார்.

'ஈழப் போராட்டத்தில் முதலாவது வாழும் சாட்சி' என தாங்கி வந்த அந்த எழுத்துகள் இப்போது 'ஈழப்போராட்டத்தின் எனது பதிவுகள்' என்று புத்தக வடிவம் பெற்றிருக்கிறது. பல புதிய தகவல்களுடன் வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தை 'கீழைக்காற்று' வெளியிட்டிருக்கிறது.

வெளியீடு: கீழைக்காற்று
விலை : ரூ.130

*

அஞ்சாடி

19-ம் நூற்றாண்டில் சிவகாசியை சுற்றியுள்ள பகுதிகளில் இரண்டு சாதிகளுக்கு இடையே எழுந்த மோதல்கள் பற்றிய வரலாற்றை மையமாகக் கொண்ட நாவல்.

தமிழகத்தின் 150 ஆண்டுகால வரலாற்றைப் பிரதிபலிக்கும் கண்ணாடிபோல பல தகவல்கள் இந்நாவலில் கிடைக்கின்றன என்பது வாசித்தவர்களின் கருத்து. வீரபாண்டிய கட்டபொம்மன், ஊமைத்துரை முதலானோரைப் பற்றிய பல அரிய தகவல்களும் இடம்பெற்றுள்ளது.

வெளியீடு: க்ரியா பதிப்பகம்
விலை : ரூ.925

*

அழிக்கப்பிறந்தவன்

இணையத்தில் வலம் வரும் தமிழ் வாசகர்களுக்கும், தமிழில் வெளியாகும் வலைப்பதிவுகள் (ப்ளாக்) பற்றி அறிந்தவர்களுக்கும் பரிச்சயமான வலைத்தளத்துக்குச் சொந்தக்காரர், லக்கிலுக் என்று அறியப்படும் யுவகிருஷ்ணா. தமிழுக்கு இணையம் தந்துகொண்டிருக்கும் இளம் எழுத்தாளர்களில் ஒருவர்.

இளமை ததும்பும் சுவாரசியமான எழுத்து நடையால், இணையத்தில் வசீகரித்து வரும் இவரது 'அழிக்கப்பிறந்தவன்' என்ற நாவலை, புத்தகக் காட்சிக்கு சென்று திரும்பும் பதிவர்களிடம் பார்க்க முடிகிறது. 'திருட்டு விசிடி'யை மையமாகக் கொண்ட விறுவிறு கதை, 'படுவேகமான த்ரில்லர் வகையறா' நாவல் என சக பதிவர்கள் சான்று கொடுத்து வருகின்றனர்.

வெளியீடு : 'உ' பதிப்பகம்
விலை : ரூ.50

*

தஞ்சைப் பெரியகோயில் சோழர் கால ஓவியங்கள்


தஞ்சை பெரியகோயிலின் 1000-வது ஆண்டு விழாவையொட்டி வெளியிடப்பட்ட நூல். கோயிலில் உள்ள கருவறையில் உள்ள அரிய ஓவியங்களே இடம்பெற்றுள்ளது இதன் முக்கியச் சிறப்பு. காரணம், இந்த ஓவியங்களை கோயில் கருவறைகளில்கூட நேரடியாக காண இயலாது என்பதே. ஆன்மிக ஆர்வலர்கள் தவறவிடக்கூடாத புத்தகம் இது.

வெளியீடு: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம்
விலை : ரூ.500.
 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!