ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக்ஜலசந்தி கடல் பகுதியில் கடல் பசு, டால்பின், ஆமை உள்ளிட்ட பல அரிய வகை கடல்வாழ் உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடல் பசுக்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில் நரிப்பையூர் பகுதியிலிருந்து பைபர் படகு ஒன்றில் 4 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர். மீன்பிடிக்கச் சென்ற இந்த மீனவர்களின் வலையில் அரியவகை கடல்வாழ் உயிரினமான ஆவுலியா என்று சொல்லக்கூடிய கடல் பசு ஒன்று சிக்கியுள்ளது.
வலையில் சிக்கிய அந்தக் கடல் பசுவை மீனவர்கள் வலையை அறுத்து மீண்டும் கடலில் உயிருடன் விட்டனர். இதைத் தொடர்ந்து அந்தக் கடல் பசுவானது மீண்டும் கடலுக்குள் வேகமாக நீந்தி ஆழ்கடல் பகுதிக்குச் சென்றது.
இந்தச் சம்பவத்தைப் பலரும் பாராட்டினார்கள், இப்படி வலையில் சிக்கும் டால்பின், கடல் பசு, ஆமை உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்களை மீண்டும் கடலில் விடும் மீனவர்களைப் பாராட்டி பரிசுகள் வழங்கி அவர்களை மேலும் ஊக்கப்படுத்த வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து மீனவர் மணிகண்டன் கூறும்போது, ``மன்னார் வளைகுடா கடலில் மீன் பிடிக்கச் செல்லும்போது எங்களுடைய வலையில் அரிய வகை கடல் பசு, நட்சத்திர ஆமை உள்ளிட்டவை எங்கள் வலையில் அதிகமாக சிக்குகின்றன. எங்களுடைய வலை சேதமானாலும் பரவாயில்லை என அவற்றை மீண்டும் கடலில் வலையை அறுத்து விட்டு விடுகிறோம். இதனால் எங்களுக்கு அதிக நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, தமிழக அரசின் மீன்வளத்துறை இதைக் கவனத்தில் கொண்டு சேதமாகும் வலைகளுக்கு நஷ்ட ஈடு வழங்கி உதவ வேண்டும் என அனைத்து மீனவர்கள் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்'' என்று கோரிக்கை வைத்தார்.