மும்பை அம்பர்நாத்திலிருந்து சொகுசு பஸ்ஸில் 45 பேர் ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு நேற்று இரவு புறப்பட்டுச் சென்றனர். அவர்கள் சென்ற பஸ் நாசிக்-ஷீர்டி சாலையில் பதாரே என்ற கிராமத்துக்கு அருகில் சென்றபோது, இன்று அதிகாலை எதிரில் வந்த லாரி ஒன்றுடன் மோதிக்கொண்டது. விபத்து குறித்து கேள்விப்பட்டதும் போலீஸார் விரைந்து வந்து மீட்புப்பணியில் ஈடுபட்டனர். விபத்தில் சிக்கி 10 பேர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டனர்.
இறந்தவர்களில் ஏழு பேர் பெண்கள். விபத்தில் 17 பேர் காயம் அடைந்தனர். அவர்கள் சின்னார் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து குறித்து கேள்விப்பட்ட முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்க உத்தரவிட்டார். காயமடைந்தவர்களுக்குத் தேவையான சிகிச்சை வழங்க முதல்வர் ஷிண்டே உத்தரவிட்டார். காயமடைந்தவர்களில் பலரின் நிலைமை கவலைக்கிடமாக இருக்கிறது. எனவே, இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என வேதனை தெரிவிக்கிறார்கள்.

சின்னார் - ஷீர்டி இடையிலான சாலையில் அதிக அளவில் விபத்துகள் நடந்துவருகின்றன. கடந்த மாதம்கூட விபத்தில் தாய், மகன் உயிரிழந்தனர். இந்த விபத்துகளைக் கட்டுப்படுத்த சாலையை விரிவுபடுத்தும் பணிகள் நடந்துவருகின்றன. இந்தப் பணிகள் நிறைவடையும் தருவாயில் இருக்கின்றன. சாலை விரிவாக்கப் பணிகள் முடிவடைந்தால் விபத்துகள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நாசிக்கிலிருந்து தினமும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் ஷீர்டிக்கு வந்து செல்கின்றன. எனவே, இந்தச் சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஷீர்டி சாய்பாபா கோயிலுக்கு தினமும் நாடு முழுவதிலுமிருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.