Published:Updated:

சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்து - 5 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்!

சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்து - 5 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்!
சுற்றுலாப் பேருந்து மீது லாரி மோதி விபத்து - 5 பயணிகள் உயிரிழந்த பரிதாபம்!

நெல்லை அருகே, சுற்றுலாப் பயணிகள் வந்த பேருந்துமீது லாரி மோதி விபத்து ஏற்பட்டது. இதில், சுற்றுலாப் பயணிகள் ஐந்து பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

ஆந்திர மாநிலம் குண்டுரைச் சேர்ந்த 40 பேர் தமிழகத்துக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள், வழியெங்கும் உள்ள ஆன்மிகத் தலங்கள், சுற்றுலா மையங்களைப் பார்வையிட்ட பின்னர், கன்னியாகுமரிக்குச் சென்று சூரிய உதயம், விவேகானந்தர் பாறை உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடத் திட்டமிட்டிருந்தனர். நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரம் நான்கு வழிச்சாலையில் உள்ள ஐ.ஆர்.டி.பாலிடெக்னிக் கல்லூரி அருகே அவர்கள் வாகனத்தை நிறுத்தினார்கள். 

நான்கு வழிச்சாலையில் இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்காக சாலையோரம் பேருந்து நிறுத்தப்பட்டது. பேருந்தில் பயணம் செய்தவர்கள், கீழே இறங்கி நின்றுகொண்டிருந்த நேரத்தில், சாலையில் சிமென்ட் லோடு ஏற்றிவந்த லாரி, பேருந்தின் பின்புறத்தில் மோதியது. இந்த விபத்து காரணமாக, பேருந்தின் கீழே இறங்கி நின்றவர்களில் ரத்ன மாணிக்கம், நாகவர்த்தினி ஆகிய  இரண்டு பெண்களும் குடவாத்தே, ஹரிகிருஷ்ணா ஆகியோரும் சம்பவ இடத்திலேயே பலியானார்கள். 

விபத்து நடந்த இடத்தில்  நான்கு பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் படுகாயங்களுடன் தவித்தார்கள். அவர்கள், 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி வெங்கட்ராமராவ் என்பவர் பலியானார். மேலும், 11 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகின்றனர். 

பேருந்தில் பயணம் செய்தவர்கள் இந்த விபத்து பற்றிக் கூறுகையில், ‘’நான்கு வழிச்சாலையில் ஓரமாக நிறுத்தப்பட்ட வாகனத்தின் பின்புற விளக்குகள் எரியவில்லை. அதனால், அந்த வழியாக வேகமாக வந்த லாரி, கண்ணிமைக்கும் நேரத்தில் மோதியது. இதில், சாலையோரம் நிறுத்தப்பட்ட பேருந்து உருண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. பேருந்தின் அருகே நின்றவர்கள் உடல் நசுங்கிப் பலியானார்கள். பேருந்துக்குள் இருந்தவர்களுக்கும் காயம் ஏற்பட்டது’’ என்றார்கள். 

இந்த விபத்து தொடர்பாக, நெல்லை மாநகரப் போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீஸார் வழக்குப்பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்தக் கோர விபத்தில், ஐந்து சுற்றுலாப் பயணிகள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது