Published:Updated:

கள்ளக்குறிச்சி: மரத்தில் மோதிய 108 ஆம்புலன்ஸ்! - கர்ப்பிணி உட்பட 3 பெண்கள் பரிதாப பலி

விபத்துக்குள்ளான 108 ஆம்புலன்ஸ்
விபத்துக்குள்ளான 108 ஆம்புலன்ஸ்

பிரசவத்துக்காக, கர்ப்பிணியை ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றபோது எதிர்பாராதவிதமாக டயர் வெடித்து, ஆம்புலன்ஸ் மரத்தில் மோதியதில் கர்ப்பிணி உட்பட மூன்று பெண்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரத்தை அடுத்த புதுப்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர் ஜெயலட்சுமி (கர்ப்பிணி). கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு, 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் பிரசவத்துக்காக இன்று (10.06.2021) அதிகாலை அழைத்துச் செல்லப்பட்டிருக்கிறார். கர்ப்பிணியுடன் செல்வி, அம்பிகா என்ற இரு உறவினர்களும்; ஆரம்ப சுகாதார நிலையத்தைச் சேர்ந்த பெண் ஊழியர் ஒருவரும் உதவிக்காக உடன் சென்றுள்ளனர். மேலும், ஆம்புலன்ஸில் டிரைவர் உட்பட பெண் உதவியாளர் ஒருவரும் உடன் இருந்திருக்கிறார். ஆலத்தூர் ஏரிக்கரைப் பகுதியில் சென்றபோது, ஆம்புலன்ஸின் டயர் வெடித்ததில் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதாகக் கூறப்படுகிறது. இந்த விபத்தில், கர்ப்பிணி ஜெயலட்சுமியின் உறவினர்களான செல்வி, அம்பிகா இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்கள்
விபத்தில் உயிரிழந்த மூன்று பெண்கள்

உயிருக்குப் போராடியபடி இருந்த கர்ப்பிணி ஜெயலட்சுமியை, மற்றொரு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். மருத்துவமனைக்குச் செல்லும் வழியிலேயே குழந்தையைப் பிரசவிக்காமல் அவரும் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் உயிரிழந்துள்ள சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது மூன்று பேரின் உடல்களும், கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன. ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உட்பட மற்ற இரண்டு பெண் உதவியாளர்களும் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பாக, கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தின் உதவி ஆய்வாளர் மணிகண்டனிடம் பேசினோம்.

"சங்கராபுரத்தை அடுத்த புதுப்பட்டு கிராமத்திலிருந்து கர்ப்பிணியை பிரசவத்துக்காக ஆம்புலன்ஸில் அழைத்து வந்தனர். அந்த ஆம்புலன்ஸில், டிரைவர் உட்பட மொத்தம் ஆறு நபர்கள் இருந்துள்ளனர். ஆம்புலன்ஸ் வாகனத்தை இயக்கி வந்தபோது டயர் வெடித்ததா... எனத் தெரியவில்லை. ஆனால், சாலையின் இடப்புறம் உள்ள மரத்தில் ஆம்புலன்ஸ் மோதியுள்ளது. இந்த விபத்தில், கர்ப்பிணி உட்பட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.

`கொரோனா காலத்தில் கர்ப்பிணி பெண்கள் தங்களை பாதுகாத்துக் கொள்வது எப்படி?' - விளக்கும் மருத்துவர்

டிரைவர் உட்பட ஆம்புலன்ஸ் உதவியாளர் மற்றும் ஆரம்ப சுகாதார நிலைய உதவியாளர் மூவரும் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தகவல்கள் கிடைக்கும் பட்சத்தில் தெரிவிக்கிறேன்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு