Published:Updated:

திடீர் விபத்து; தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்! - நூலிழையில் உயிர்பிழைத்த நிறைமாத கர்ப்பிணி

தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்
தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்

கர்ப்பிணி ஒருவரின் உயிரைக் காப்பாற்றிட மருத்துவமனை நோக்கிக் கிளம்பிய 108 ஆம்புலன்ஸ் வழியில் நடந்த விபத்தில் தீப்பற்றி எரிந்ததுதான் சோகம்.

கரூர் மாவட்டம், குளித்தலை அடுத்த ஆலமரத்துப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் விஜயகாந்த், இவரின் மனைவி சந்திரா நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். அவருக்குப் பிரசவ வலி ஏற்படவே சந்திரா குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

Corona-வில் இருந்து கர்ப்பிணி பெண்கள் மற்றும் குழந்தைகளை காப்பது எப்படி? | #CoronaAlert

அவரின் பிரசவத்தில் சிக்கல் இருப்பதால், அவரை உடனடியாக மேல் சிகிச்சைக்காகத் திருச்சி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல நேற்று மாலை மருத்துவர்கள் பரிந்துரை செய்தனர். அதைத்தொடர்ந்து, அரசின் 108 ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அதில் கர்ப்பிணி அவரின் உறவினர் ஒருவருடன் அனுப்பி வைக்கப்பட்டார்.

அவர்களை ஏற்றிய 108 ஆம்புலன்ஸ் ஆலமரத்துப்பட்டியிலிருந்து திருச்சி நோக்கிக் கிளம்பியது. அந்த வாகனம் திருச்சி - கரூர் சாலையில் உள்ள கம்பரசம்பேட்டை அருகே வந்துகொண்டிருந்தது. அப்போது திருச்சியிலிருந்து அவினாசி நோக்கிச் சென்ற கார் ஒன்று 108 ஆம்புலன்ஸ் மீது மோதுவதுபோல் வந்ததாகக் கூறப்படுகிறது. அப்போது நடந்த விபத்தில் காரை ஓட்டி வந்த முத்துகிருஷ்ணன், அவரின் மனைவிக்கு காயம் ஏற்பட்டது.

தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்
தீப்பிடித்த 108 ஆம்புலன்ஸ்

மேலும், 108 ஆம்புலன்ஸ் வாகனம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததுடன், சாலை அருகே தலைகுப்புறக் கவிழ்ந்தது. நடந்த விபத்தில் நூலிழையில் கர்ப்பிணி உயிர் தப்பினர். மற்றொரு ஆம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்கு அவர் அனுப்பி வைக்கப்பட்டார்.

தகவலறிந்த ஜீயபுரம் போலீஸார் சம்பவ இடத்துக்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆம்புலன்ஸை மற்றொரு வாகனத்தின் உதவியோடு காவல் நிலையத்துக்குக் கொண்டு செல்ல முயன்றனர்.

அப்போது எதிர்பாராத விதமாக 108 ஆம்புலன்ஸ் திடீரென தீ பிடித்து எரிய ஆரம்பித்தது. போலீஸார் சுதாரிப்பதற்குள் வாகனம் முழுமையாக நாசமடைந்தது. அதையடுத்து ஸ்ரீரங்கம் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் கொடுத்து, அவர்களை வரவழைத்து தீயை அணைத்தனர்.

`போக்குவரத்து பிரச்னை; சாலையில் மயங்கி விழுந்த கர்ப்பிணி! - ஊருக்கு அனுப்பி வைத்த கோவை போலீஸார்

இச்சம்பவம் குறித்து ஜீயபுரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் 108 ஆம்புலன்ஸில் பயணம் செய்த கர்ப்பிணி உள்ளிட்ட 4 பேர் அதிர்ஷ்ட வசமாக உயிர் பிழைத்துள்ளார்கள். மேலும், விபத்தில் நூலிழையில் உயிர் பிழைத்த கர்ப்பிணி சந்திராவுக்கு நேற்று இரவு ஆண் குழந்தை பிறந்துள்ளது.

அடுத்த கட்டுரைக்கு