Published:Updated:

`11 பேர் உயிரை இழந்தனர்'- ஆந்திராவை சோகத்தில் மூழ்கடித்த படகு விபத்து!

ஆந்திர மாநிலத்தின் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் உள்ள கோதாவரி ஆற்றில் சுற்றுலாப் பயணிகளுடன் 61 பேர் சென்ற படகு ஆற்றில் கவிழ்ந்தது. இதில் 11 பேர் உயிரிழந்துள்ளனர்.

boat accident
boat accident

ஆந்திர மாநிலத்தில் கடந்த வாரம் பெய்த கனமழையின் காரணமாகக் கிருஷ்ணா அணையிலிருந்து 5 லட்சம் கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டுள்ளது. இதனால் கோதாவரி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுபோல் காட்சியளிக்கிறது. இதற்கிடையே, கிழக்குக் கோதாவரி மாவட்டம் தேவிபட்டினம் அருகே உள்ள போச்சம்மா கோயிலுக்கு அம்மாநில சுற்றுலாத்துறை சார்பில் படகு இயக்கப்பட்டு வருகிறது. இந்தப் படகில் இன்று மதியம் பாபிகொண்டலு பகுதியிலிருந்து 50 சுற்றுலாப் பயணிகளும்11 ஊழியர்களும் ஆற்றில் பயணமாகினர். கச்சளூரு பகுதியில் வந்தபோது, படகு ஆற்றில் எதிர்பாராதவிதமாகக் கவிழ்ந்துள்ளது. உடனடியாக ஆற்றில் சிக்கியுள்ளவர்களை மீட்க 30 பேர் கொண்ட இரு பேரிடர் மீட்புப்படையினர் விரைந்தனர். முன்னதாக ஆற்றில் கவிழ்ந்த படகில் இருந்த 10 பேர் நீந்தியே கரை சேர்ந்துள்ளனர். எனினும், ஏராளமானோர் ஆற்றில் சிக்கிக்கொண்டுள்ளனர். இதுவரை 11 பேரின் உடல்களை மீட்புப் படையினர் மீட்டுள்ளனர்.

rescue operation
rescue operation

மற்றவர்களின் நிலைமை குறித்து தெரியாத நிலையில் இந்த விபத்து ஆந்திர மாநிலத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து அறிந்ததும் உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ஆறுதல் தெரிவித்த அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி, உயிரிழந்தோர்களுக்கு நிவாரணமாக தலா 10 லட்சம் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். மேலும், கோதாவரி ஆற்றில் இயக்கப்படும் அனைத்துப் படகு சேவைகளையும் நிறுத்தச் சொல்லி உத்தரவு பிறப்பித்துள்ளார். ``படகு கவிழ்ந்து விபத்தானதைக் கேள்விப்பட்டதும் மனதுக்கு வேதனையளிக்கிறது. என் எண்ணங்கள் துயரமடைந்த குடும்பங்களுடன் உள்ளன. சோகம் நடந்த இடத்தில் தற்போது மீட்பு நடவடிக்கைகள் நடந்து வருகின்றன" என பிரதமர் மோடி இறந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.