தெலங்கானா மாநிலம் செகந்தராபாத்தில் உள்ள இரும்புப் பொருள் கிடங்கு ஒன்றில் ஏற்பட்ட தீ விபத்தில்,11 வெளிமாநிலத் தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்
இது குறித்து காவல்துறை தரப்பில் தெரிவித்திருப்பதாவது, ``செகந்தராபாத் ரயில் நிலையத்துக்கு அருகில் இரும்பு மற்றும் பிளாஸ்டிக் குப்பைக் கிடங்கு ஒன்று இருக்கிறது. கிடங்கின் மேல்தளத்தில் சுமார் 13 தொழிலாளர்கள் உறங்கிக்கொண்டிருந்தபோது, அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டதுள்ளது. தீ வேகமாகப் பரவியதில், 11 வெளிமாநிலத் தொழிலாளர்கள் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த 9 தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் பணிகளில் ஈடுபட்டனர். காலை 7 மணியளவில் தீ கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது. ஒருவர் மட்டும் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இறந்த வெளிமாநிலத் தொழிலாளர்கள் பீகாரைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்படுகிறது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை மேற்கொண்டுவருகிறோம்" என்று தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் சம்பவ இடத்தைப் பார்வையிட்ட அந்த மாநில அமைச்சர் தலசானி சீனிவாச யாதவ், ''உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்கிறோம்'' என உறுதியளித்திருக்கிறார்.
இந்த நிலையில், செகந்தராபாத் தீ விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவ் அறிவித்துள்ளார்.
