Published:Updated:

தொடரும் பேனர் விபத்துகள்... முதல்வரைத் துரத்தும் சர்ச்சை!

குருபிரசாத்
தொடரும் பேனர் விபத்துகள்... முதல்வரைத் துரத்தும் சர்ச்சை!
தொடரும் பேனர் விபத்துகள்... முதல்வரைத் துரத்தும் சர்ச்சை!

முதல்வருக்காக, வைக்கப்பட்ட பேனர் சாய்ந்து குன்னூரைச் சேர்ந்த பாரூக் என்பவர் படுகாயம் அடைந்துள்ளார்.

நீலகிரி மாவட்டம், குன்னூர், ஒட்டுபட்டறையில் உள்ள முத்தாலம்மன் திருக்கோயிலின் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்றது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களைச் சேர்ந்த  சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர். இவர்களின் வருகையையொட்டி மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூர் வரை வழிநெடுகிலும் பேனர்கள் வைக்கப்பட்டிருந்தன. இதில் மேட்டுப்பாளையத்திலிருந்து குன்னூருக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற குன்னூரைச் சேர்ந்த பாரூக் என்பவர் மீது, லால்ஸ் பால்ஸ் அருகே பேனர் விழுந்து சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

பின்னர், அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள், பாதுகாப்புக்காக நின்றிருந்த போலீஸ் உதவியுடன், அவரை குன்னூர் லாலி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இதையடுத்து, அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டவுடன், மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இச்சம்வம் தெரிந்து வந்த அவரின் உறவினர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டனர். இந்தப் பேனர் கலாசாரத்தால் பொதுமக்கள் பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நீதிமன்றம் வைக்க கூடாது என உத்தரவிட்டும்... பேனர் வைத்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவரின் உறவினர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.