Published:Updated:

இந்தியர்களை கப்பலில் மீட்க நடவடிக்கை:ஜி.கே.வாசன்

புதுடெல்லி, பிப்.24,2011

இந்தியர்களை மீட்க லிபியாவுக்கு எம்.வி. ஸ்காட்டியா பிரின்ஸ் என்ற பயணிகள் கப்பலை அனுப்பி உத்தரவிட்டு இருப்பதாக மத்திய கப்பல் துறை அமைச்சர் ஜி.கே. வாசன் தெரிவித்தார். ##~~##

அந்த கப்பல் லிபியாவில் உள்ள டிரிபோலி, பென்ஹாசியர் துறைமுகங்களுக்கு சென்று அங்கு காத்திருக்கும் இந்தியர்களை ஏற்றிக் கொண்டு கலவரத்தால் பாதிக்கப்படாத துறைமுக நகருக்கு செல்லும்  என்றும், பின்னர் அங்கிருந்து விமானம் மூலம் அவர்களை இந்தியாவுக்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் கூறினார்.

மேலும், லிபியாவில் கலவரத்தால் பாதிக்கப்படாத துறைமுகங்களுக்கு இடையே அந்த கப்பல் தமது சேவையை மேற்கொண்டு அங்குள்ள இந்தியர்களை அழைத்து வரும் பணியில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

வழக்கமாக தூத்துக்குடி கொழும்பு இடையே பயணிகள் போக்குவரத்துக்கு பயன்படுத்தப்படும் எம்.வி. ஸ்காட்டியா பிரின்ஸ் கப்பல் ஆயிரம் பயணிகளை ஏற்றிச்செல்லும் திறன் கொண்டது என்றும் அமைச்சர் ஜி.கே.வாசன் தெரிவித்தார். 

இதனிடையே, லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்கும் நடவடிக்கை குறித்து வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறுகையில், "லிபியாவில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்பதற்கு போர்க்கால அடிப்படையில்நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்திய கடற்படைக்கு சொந்தமான இரண்டு போர்க்கப்பல்கள் லிபியாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே ஒரு கப்பல் அங்கு போய் சேர்ந்துள்ளது.

லிபியாவிலிருந்து இந்தியாவுக்கு வர 6 நாட்கள் ஆகும். எனவே அவர்களை லிபியாவிலிருந்து மீட்டு எகிப்திற்கு அழைத்து வந்து அங்கிருந்து விமானம் மூலம் இந்தியாவுக்கு கொண்டு வர ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

லிபியா கலவரத்தில் சிக்கியுள்ள 18 ஆயிரம் இந்தியர்களில் 12 ஆயிரம் பேர் தலைநகர் டிரிபோலி மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் வசிக்கிறார்கள். அங்கிருந்து அவர்கள் கப்பல் மூலம் அழைத்து வரப்பட்டு வல்லேட்டா என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்படுகிறார்கள். அங்கிருந்து அவர்கள் விமானம் மூலம் இந்தியாவுக்கு அழைத்து வரப்படுவார்கள்.

லிபியாவில் போராட்டக்காரர்கள் வசமுள்ள பென்ஹாசியில் சுமார் 3 ஆயிரம் இந்தியர்கள் வசிக்கிறார்கள். அவர்களையும் மீட்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஒரு கப்பலில் 800 முதல் 1000 பேர் வரைதான் ஏற்றி வர முடியும். எனவே மேலும் கப்பல்கள் தேவை," என்றார் எஸ்.எம்.கிருஷ்ணா.
 

அடுத்த கட்டுரைக்கு