Published:Updated:

ஆறு பேரை பலி கொண்ட கோவை கார் விபத்து... இழப்பீடு கொடுப்பதில் அலட்சியம் காட்டுகிறதா அரசு?

ஆறு பேரை பலி கொண்ட கோவை கார் விபத்து... இழப்பீடு கொடுப்பதில் அலட்சியம் காட்டுகிறதா அரசு?
ஆறு பேரை பலி கொண்ட கோவை கார் விபத்து... இழப்பீடு கொடுப்பதில் அலட்சியம் காட்டுகிறதா அரசு?

கோவை, சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த ஆடி கார் 6 பேரின் உயிரைப் பறித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு 1 லட்சம் ரூபாய், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், சாதாரண காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடந்த 2-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டார். ஆனால், அவர் அறிவித்த நிதி மக்களுக்கு சென்று சேரவில்லை.

கோவை சுந்தராபுரத்தில் அதிவேகமாக வந்த சொகுசுக் கார், ஆறு பேரின் உயிரைப் பறித்து இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா ஒரு லட்சம் ரூபாய், பலத்த காயமடைந்தவர்களுக்கு 50 ஆயிரம் ரூபாய், லேசான காயமடைந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய், முதலமைச்சரின் பொதுநிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 2-ம் தேதி அறிவித்தார்.

இந்த நிதியுதவி மிகவும் குறைவு என்றும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கான நிதியை அதிகப்படுத்த வேண்டும் என்றும் எதிர்க்கட்சிகளும், பொது மக்களும் அரசுக்கு கோரிக்கை விடுத்துவரும் சூழலில் "அறிவிக்கப்பட்ட நிதியை தமிழக அரசு இன்னும் வழங்கவில்லை. கேட்டால், இறப்புச் சான்றிதழ் வேண்டும், வாரிசுச் சான்றிதழ் வேண்டும்" என்று தங்களை அலைக்கழிப்பதாக வேதனையுடன் தெரிவிக்கின்றனர் விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினர்.

"ரேஷன் பொருள்கள் வாங்குவதற்காக போனப்பத்தான் அப்பாவுக்கு இப்படி ஆகிடுச்சு. நாங்க மொத்தம் நான்கு பேர். அப்பா போஸ்ட் மேனா இருந்து, ரிட்டையர்டு ஆனவர். எங்களுக்கு, கல்யாணம் ஆகி, எல்லோரும் தனித்தனியா இருக்கோம். அம்மாவும், அப்பாவும் வாடகை வீட்ல தங்கிருந்தாங்க. அப்பாவோட பென்ஷன்லதான் குடும்பம் ஓடிட்டு இருந்துச்சு. இப்ப பென்ஷனும் குறைஞ்சுரும். அரசு அறிவிச்ச நிவாரண நிதிக்கு முயற்சி பண்ணிட்டு இருக்கோம். இறப்புச் சான்றிதழ் வேணும், வருமான சர்டிஃபிகேட் வேணும், வாரிசு சர்டிஃபிகேட் வேணும்னு சொல்றாங்க. அதற்காக அலைஞ்சுட்டு இருக்கோம். ஆனா, எந்தச் சான்றிதழ்களும் இதுவரை எங்களுக்குக் கிடைக்கல" என்கிறார் விபத்தில் உயிரிழந்த நாராயணனின் மகன் சாபு.

இவ்விபத்தில் உயிரிழந்த மற்றொருவரான அம்சவேணியின் கணவர் சந்திரசேகர், "எங்களுக்கு இன்னும் டெத் சர்டிஃபிகேட்டே கொடுக்கவில்லை. எப்ஃஐ.ஆர். காப்பி கொடுங்க, அப்டி, இப்டின்னு அலைக்கழிக்கிறாங்க. இந்தச் சான்றிதழ்களை எல்லாம் வாங்குறதுக்கே 40 நாள் ஆகும்னு சொல்றாங்க. நானும், என் மனைவி அம்சவேணியும் சேர்ந்துதான் பூக்கடை வச்சு பொழப்பு நடத்திகிட்டு இருந்தோம். எங்கள் மகன் 8-ம் வகுப்பு படிக்கிறான். என்னோட அப்பா, அம்மா ஆகியோர் எங்கக் கூடத்தான் இருக்காங்க. என் மனைவி சம்பவ இடத்துலயே இறந்துட்டா. ஆனா, ஆம்புலன்ஸ்-ல இறந்துட்டதாச் சொல்லி டெத் சர்டிஃபிகேட் தர்றதுக்கு லேட் பண்றாங்க" என்று வேதனையாக முடித்தார்.

விபத்தில் தன் அண்ணன் ஶ்ரீரங்கதாஸை இழந்த அவரின் சகோதரர் குமார், "எங்க அண்ணணுக்கு மூணு பொண்ணுங்க. இரண்டு பசங்க இருக்காங்க. ரெண்டு பொண்ணுங்களுக்கு கல்யாணம் ஆகிடுச்சு. பெரிய பையனுக்கு மனநிலை கொஞ்சம் சரியில்லை. கல்யாணம் ஆகாம ஒரு பொண்ணு இருக்கா. கூலி வேலைக்குப் போய்தான் அண்ணன், அவங்களைப் பார்த்துகிட்டு இருந்தாரு. வாடகை வீட்லதான் இருக்காங்க. இவங்களுக்கு சம்பாதிக்கவும் வேற வழி இல்ல. அரசு அறிவிச்ச நிதி குறைந்த தொகையானாலும், அதைச் சீக்கிரம் கொடுத்தாப் பரவாயில்ல. நாங்க எல்லா சர்டிஃபிகேட்டும் ரெடி பண்ணிட்டோம்" என்று ஆதங்கப்படுகிறார்.

"எனக்கு அவ ஒரே பொண்ணு. காலேஜ் பஸ் ஏத்திவிடப் போனேன். எப்பவும், அவ பஸ் ஏறினதுக்கு அப்பறம்தான் கிளம்புவேன். சம்பவம் நடந்த அன்னிக்கு ஒரு 50 அடி தூரத்துல இருந்து பார்த்துட்டு இருந்தேன். கார் மோதி இடிச்சுச் சென்றத என் கண்ணால பார்த்தேன். நான் அங்கு ஓடிப்போறதுக்குள்ள எல்லாமே முடிஞ்சுபோச்சு. அந்த டிரைவர் தண்ணியடிச்சுட்டு ஓட்டினதாலதான், இந்த விபத்து நடந்துருக்கு.  அரசு அறிவிச்ச நிதியும் வந்துசேரல. வாரிசு சர்டிஃபிகேட் வேணும். வருமான சர்டிஃபிகேட் வேணும்னு கேக்கிறாங்க. விபத்துக்குக் காரணமான ரத்தினம் கல்லூரி டிரைவர் மீது நடவடிக்கை எடுக்கணும்" என்று உடைந்துபோன குரலில் முடித்தார் உயிரிழந்த சுபாஷினியின் தந்தை நாகராஜ்.

உயிரிழந்த மற்றொரு பெண்ணான குப்பாத்தாளின் உறவினர்கள் கூறுகையில், "அவங்களுக்கு ரெண்டு பொம்பள பசங்க இருக்காங்க. கணவர் இறந்துட்டாரு. கணவரை இழந்த ஒரு பொண்ணு மில் வேலைக்கு போறாங்க. அந்தப் பொண்ணுக்கு ஒரு பையன் இருக்கான். நிதி கொடுக்கறோம்னு சொல்லியிருக்காங்க. அது கொஞ்சம் சீக்கிரம் கிடைச்சா, அந்தக் குடும்பத்துக்கு உதவியா இருக்கும்" என்றனர். 

கோவை கலைமகள் கல்லூரியில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியின்போது, லோகேஸ்வரி என்ற மாணவி உயிரிழந்தார். அதில், ஆளுங்கட்சி பிரமுகர்களின் பெயர் அடிபட்டவுடன், தமிழக அரசு சார்பில் 5 லட்சம் ரூபாய் நிதி வழங்கப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். அதேநாளில், அந்த மாணவியின் வீட்டுக்கு நேரில் சென்று, அமைச்சர் வேலுமணி, அந்த நிதியையும் வழங்கினார். மேலும் அந்தக் கல்லூரி சார்பிலும் ஒரு தொகை வழங்கப்பட்டதாகக் கூறப்பட்டது.

ஆனால், கார் அத்துமீறி மோதியதால் ஏற்பட்ட விபத்தைத் தொடர்ந்து, அந்தத் தொகுதி எம்.எல்.ஏ எட்டிமடை சண்முகம், கலெக்டர் ஹரிஹரன் உள்ளிட்டோர் சம்பிரதாயத்துக்காக, அங்கு எட்டிப் பார்த்ததோடு சரி. அந்தப் பகுதி மக்கள், அரசியல் கட்சியினர் என பலரும் சேர்ந்து, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 35 ஆயிரம் ரூபாய், காயமடைந்தவர்களுக்கு 10 ஆயிரம் ரூபாய் வீதம் 2.50 லட்சம் ரூபாய் நிதி திரட்டிக் கொடுத்துள்ளனர். அரசாங்கம் சார்பில், இதுவரை ஒரு ரூபாய்கூட வழங்கப்படவில்லை.

ம.தி.மு.க மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன், "மேற்கு வங்கத்தில் விபத்து நடந்த 24 மணி நேரத்தில் 5 லட்சம் ரூபாய் நிதி கொடுக்க வேண்டும் என்ற விதி உள்ளது. அதேபோன்ற ஒரு விதியை தமிழகத்திலும் செயல்படுத்த வேண்டும். உயிரிழந்தவர்களுக்கு இன்சூரன்ஸ் பணம் கிடைக்கவும் சில ஆண்டுகள் ஆகும். அதுவரை, அந்தக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள் என்ன செய்வார்கள்? தாலிக்குத் தங்கம் என்பதெல்லாம் இரண்டாவதுதான். முதலில் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு எது தேவையோ, அதற்குத்தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்" என்றார்.

'கோவை ரத்தினம் கல்லூரி சேர்மனின் கார் டிரைவர் ஜெகதீஸ் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதுதான் விபத்துக்குக் காரணம்' என்று மக்கள் குற்றம்சாட்டும் நிலையில், அவர் மது அருந்திவிட்டு அல்லது போதையில் வாகனம் இயக்கிய பிரிவிலும் (185) ஜெகதீசன் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால், அவரின் ரத்த மாதிரியை வைத்து நடத்தப்பட்ட தடயவியல் அறிக்கையில், அவர் மது அருந்தவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ள சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது.

இதுதொடர்பாக, கோவை போலீஸ் கமிஷனர் பெரியய்யாவிடம் பேசியபோது, "டாக்டர் சோதனை செய்ய வந்தபோது, மதுகுடித்ததாக ஒப்புக்கொண்டு, அந்த டிரைவர் கையெழுத்துப் போட்டுக் கொடுத்தார். ஆனால், ரத்தப் பரிசோதனையில், கிளாஸ்-2 என்று வந்தது. கிளாஸ்-2 என்பது, மது குடித்திருந்தாலும் ரத்தத்தில் ஆல்கஹால் இல்லை என்று அர்த்தம். விபத்து நடப்பதற்கு முதல்நாள் அவர் மது குடித்திருக்கலாம். ஆனால், விபத்து நடந்தபோது அவர் தெளிவாகத்தான் இருந்துள்ளார். தெளிவாக வந்துதான் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். அதனால் 304/2  பிரிவின்கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளோம். கிட்டத்தட்ட கொலைவழக்கு போலத்தான் வழக்குப் பதிவு செய்துள்ளோம். தேவைப்பட்டால் விசாரணை அதிகாரி, கல்லூரி நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவார்" என்றார்.

நீண்ட முயற்சிக்குப் பிறகு கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ. எட்டிமடை சண்முகத்தை செல்போனில் பிடித்தோம். "ஒரு நிகழ்ச்சியில் இருக்கேன் அரை மணி நேரம் கழிச்சு கூப்டுங்க" என்றார். ஆனால், அடுத்த 2 மணி நேரத்துக்குப் பிறகுதான் அவர் மீண்டும் இணைப்பில் கிடைத்தார். அவருடன் நாம் நடத்திய உரையாடல்...

"கார் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிதி குறைவாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதுவும் இன்னும் சம்பந்தப்பட்டவர்களுக்கு கிடைக்கவில்லையே? பொதுமக்கள் நிதி திரட்டிக் கொடுக்கறப்ப, அரசாங்கத்தால ஏன் இன்னும் தர முடியவில்லை?"

"நிதியை அதிகப்படுத்தியும், சீக்கிரம் தரவேண்டும் என்றும் அரசாங்கத்துக்கிட்ட கேட்ருக்கோம்"

"சம்பந்தப்பட்ட கல்லூரி மீது நடவடிக்கை எடுக்கப்படுமா?"

"நான் தனிப்பட்ட முறையில் ஒண்ணும் பண்ண முடியாது. அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும்"

"சார், உங்கள் தொகுதி  மக்கள் பிரச்னைக்கு, நீங்கள்தானே குரல் கொடுக்க வேண்டும்?"

"விரைவில் நிதி கொடுக்க ஏற்பாடு செய்வோம்".

"விரைவில் என்றால் எப்போது சார்?".

"விரைவில்னா விரைவில்தான்" என்று நகைச்சுவை நடிகர் வடிவேலு பாணியில் சொல்லிவிட்டு இணைப்பைத் துண்டித்து விட்டார்.

விபத்தில் இழந்த உயிரைத்தான் திருப்பிக் கொடுக்க முடியாது. அறிவித்த நிதியையாவது அரசாங்கம் உடனடியாக வழங்கலாமே...!

அடுத்த கட்டுரைக்கு